back to top
18.6 C
London
Sunday, August 16, 2026
No menu items!
Homeதமிழ்நாடுகோட்டையில் கொடியேற்றிய முதலமைச்சர் விஜய்… அறிவித்த அதிரடி அறிவிப்புகள் என்ன? - Kumudam

கோட்டையில் கொடியேற்றிய முதலமைச்சர் விஜய்… அறிவித்த அதிரடி அறிவிப்புகள் என்ன? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாட்டில் தவெக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, முதலமைச்சராக விஜய் பங்கேற்கும் முதல் சுதந்திர தின விழா இதுவாகும். தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவுகூர்ந்து வீர வணக்கம் செலுத்திய அவர், பொதுவாழ்வு, மக்கள் நலன், ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாற்றினார்.

“பொதுவாழ்வில் சமரசம் கூடாது”

மக்கள் நலனே முக்கியம் என்ற அடிப்படையில் தவெக அரசு செயல்பட்டு வருவதாக முதல்வர் விஜய் தெரிவித்தார். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்புடன் செயல்படுவோம் என்றும், தமிழ்நாட்டிற்கு எதிரான கொள்கைகளை உறுதியாக எதிர்ப்போம் என்றும் கூறினார்.

“லஞ்சம், ஊழலில் இருந்து நாட்டை காப்பாற்றுவதும் விடுதலைதான்”

சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்திய முதல்வர் விஜய், போராடிப் பெற்ற சுதந்திரம் சிலருக்கு மட்டுமே உரியதாக இல்லாமல் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்றார். அனைத்து துறைகளிலும் லஞ்சத்தை ஒழிக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை நோக்கி தமிழக அரசு பயணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

முந்தைய ஆட்சிகளின் திட்டங்கள் தொடரும்

மக்களுக்கு பயனளிக்கும் முந்தைய ஆட்சிகளின் திட்டங்கள் தொடரும் என்று முதல்வர் விஜய் கூறினார். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட “அம்மா உணவகம் திட்டமும், திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட காலை உணவுத் திட்டமும் தொடர்வதுடன், காலை உணவுத் திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

3 மாத ஆட்சியில் திட்டங்கள் – சாதனைகள் பட்டியல்

தவெக ஆட்சி அமைந்த மூன்று மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் சாதனைகளை முதலமைச்சர்  விஜய் பட்டியலிட்டார். குறுவை தொகையாக ரூ.134 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், வருவாய்த் துறையில் அனைத்து சான்றிதழ்களும் 15 நாட்களுக்குள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 15-ம் தேதியும், காலை உணவுத் திட்ட விரிவாக்கம் செப்டம்பர் 17-ம் தேதியும் தொடங்கப்படும்” என்று அறிவித்தார்.

முன்னாள் படைவீரர்களுக்கு நிதியுதவி உயர்வு

முன்னாள் படைவீரர்களின் மகள்களுக்கான திருமண நிதியுதவி ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்தார். அதேபோல் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.23 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.

“அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்களை கனிவாக நடத்த வேண்டும்”

“சட்டம் – ஒழுங்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகக் கூறிய முதல்வர், அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை அதிகாரிகள் கனிவுடன் நடத்த வேண்டும்” என அறிவுறுத்தினார். “அரசுக்கு எதிரான சதிகளை முறியடிப்போம் என்றும், மக்கள் நலனுக்கான நிர்வாகத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்” என்றும் அவர் தெரிவித்தார்.

“பணத்தையும் அதிகாரத்தையும் வீழ்த்தி அமர வைத்த மக்களுக்கு நன்றி”

தன்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்ற வைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் விஜய், ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை நோக்கி தமிழக அரசு சென்று கொண்டிருப்பதாக கூறினார். “பணத்தையும், அதிகாரத்தையும் வீழ்த்தி என்னை அமர வைத்த மக்களுக்கு நன்றி. வெற்றி நிச்சயம்… நல்லதே நடக்கும்” என முதலமைச்சர்  விஜய் தனது உரையில் தெரிவித்தார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here