back to top
20.4 C
London
Saturday, August 15, 2026
No menu items!
Homeஅரசியல்மகள் ஊழலால் மார்க்சிஸ்ட்டுக்கு களங்கம்! Damage ஆகும் பினராயி Image.... - Kumudam

மகள் ஊழலால் மார்க்சிஸ்ட்டுக்கு களங்கம்! Damage ஆகும் பினராயி Image…. – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



கேரள மாஜி முதல்வர் பினராயி விஜயனின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது அவரின் மகள் வீணாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வைத்துள்ள செக். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மொத்த செல்வாக்கும் வீணா விவகாரத்தால் வீணாகிடுமோ என்று கலங்கி நிற்கிறார்கள் செங்கொடி தோழர்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அளவிலான ஐகான்களில் முக்கியமானவர் பினராயி விஜயன். 2016 முதல் பத்தாண்டுகள் கேரளத்தின் முதலமைச்சராக இருந்தவர். கடந்த ஏப்ரலில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸிடம் மார்க்சிஸ்ட் ஆட்சியை இழந்ததற்கு, பினராயிக்கு எதிராக தனிப்பட்ட பல விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, விஜயனின் மகள் வீணாவுக்கு சொந்தமான ‘எக்சலாஜிக் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்தின் விவகாரங்களை மையமாக வைத்து, உட்கட்சி நிர்வாகிகளே பினராயியை பிரித்து மேய்ந்தனர்.

அதாவது, முதல்வரின் மகள் நிறுவனம் எனும் அடையாளத்தை வைத்து சி.எம்.ஆர்.எல். எனும் மணல் ஆலை நிறுவனத்திடம் இருந்து 2 கோடியே 78 லட்சம் ரூபாய் அளவுக்கு வீணாவின் நிறுவனம் பெற்றதாக அமலாக்கத்துறை எழுப்பியிருக்கும் புயல்தான் அது.

‘செய்யப்படாத வேலைகளுக்காககூட வீணாவின் நிறுவனத்துக்கு பணம் சென்றது’ என குற்றச்சாட்டை இறக்கிய இ.டி, கடந்த மே மாத இறுதியில் பினராயி விஜயனின் வீடுகள், வீணாவின் வீடு உட்பட சுமார் 12 இடங்களில் ரெய்டு நடத்தியது. வீணாவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் விஜயனுக்கு மிக மோசமான சங்கடத்தையும், விமர்சனங்களையும் உருவாக்கின.

அமலாக்கத்துறையின் இந்த ரெய்டுக்கு மிக கடுமையாக ஆவேசம் காட்டினர் மார்க்சிஸ்ட் தொண்டர்கள். வீணாவின் கணவரும், பினராயி விஜயனின் ஆட்சியில் அமைச்சராக இருந்தவருமான முகமது ரியாஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘பயமில்லை. சங் பரிவாருக்கு முன்னாள் ஒருபோதும் மண்டியிடமாட்டேன்’ என பதிவிட்டிருந்தார். பினராயி ஆதரவாளரான கேரள மார்க்சிஸ்ட் தலைவரான ஜெயராஜனோ, ‘அரசியல் பழிவாங்கும் எண்ணத்துடன் முன்னாள் முதல்வர் பினராயிக்கு பா.ஜ.க. நெருக்கடி கொடுக்கிறது என்று விமர்சித்தார்.

ஆனால் அமலாக்கத்துறை கடந்த சில நாட்களுக்கு முன் எர்ணாகுளம் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையோ கம்யூனிஸ்ட்களை திகைக்க வைத்துள்ளது. தேசியளவில் தேர்தல் வெற்றிகளில் விளிம்புநிலையில் உள்ள கம்யூனிஸ்ட்களுக்கு மேலும் இது நெருக்கடியை தந்துள்ளது.

என்னதான் அந்த அறிக்கையில் உள்ளது என அரசியல் விமர்சகரான பிரதீப் உன்னியிடம் கேட்டோம். “கேரளத்தில் தொடர்ந்து இரண்டு முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வென்றதற்கு பினராயி விஜயன் மீது மக்கள் வைத்திருந்த மரியாதை முக்கியமான காரணம். அதனால்தான் முதல்வர் பதவிக்கு வேறு யாரையும் பற்றி சிந்திக்காமல் கடந்த பத்து வருடங்களாக அவரையே ஆள வைத்தது மார்க்சிஸ்டின் தேசிய தலைமை.

ஆனாலும் இரண்டாம் முறை ஆட்சி அமைந்து, முதல்வரான பின் பினராயியின் போக்கில் சில வித்தியாசங்களை எல்லோருமே உணர்ந்தனர். அவரது அதிகாரம் அவரது குடும்ப வளர்ச்சிக்கும், வசதிக்கும் பயன்படுகிறது என உட்கட்சிக்குள் இருந்தே ஒரு விமர்சனம் கிளம்பியது. ஆனாலும் பினராயி மீது நம்பிக்கை வைத்து அமைதி காத்தது தலைமை.

இந்த நிலையில்தான் விஜயனின் மகள் வீணாவின் நிறுவனத்துக்கு கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூடைல் லிமிடெட் நிறுவனம் 2 கோடியே 78 லட்சம் ரூபாய் செலுத்தியது. பின்னர் இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதாவது சி.எம்.ஆர்.எல். நிறுவனத்துக்கு வீணாவின் நிறுவனம் எந்த சேவையையும் வழங்காத நிலையில், இவ்வளவு பெரிய தொகை கைமாறியது ஏன் என்பதுதான் பிரதான குற்றச்சாட்டு.

இது தொடர்பாக 2024ல் வழக்குப் பதிவாகி, கடந்த மே மாதம் நடந்த ரெய்டைதான் விஜயன் மற்றும் மார்க்சிஸ்ட் தரப்பு, ‘பா.ஜ.க.வின் அரசியல்
பழிவாங்கல் சதி’ என விளாசியது. ஆனால், எர்ணாகுளம் தீர்ப்பாயத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கும் அறிக்கையில் சி.எம்.ஆர்.எல். நிறுவனத்தின் நிறுவனரும், முன்னாள் நிர்வாக இயக்குநருமான சசிதரன் கர்தா, அப்போதைய முதல்வர் பினராயி விஜயனுடன் இருந்த தனிப்பட்ட நட்புறவின் காரணமாக அப்போதைய முதல்வர் மகள் வீணாவுக்கு எந்த சேவையும் பெறாத நிலையிலும், தன் நிறுவனத்திலிருந்து 2 கோடியே 78 லட்சம் ரூபாய் வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளது.

தவிர, வீணாவின் வீட்டில் நடந்த ரெய்டின் போது அமலாக்கத்துறை கைப்பற்றிய அவரது ஐபோன் மற்றும் சிவப்பு நிற டைரி உள்ளிட்டவை இந்த வழக்கின் மிக முக்கிய ஆவணங்களாக அமலாக்கத்துறை சேர்த்துள்ளது. மேலும், மார்க்சிஸ்டின் மற்ற தலைவர்கள் யாரும் இப்படி நிதி ஆதாயம் பெற்றுள்ளார்களா என்பது குறித்தும் அந்த ஆவணங்களின் மூலம் வெளிவரும் என்கிறார்கள்.

‘கை சுத்தம்’ என பெருமை பேசும் காம்ரேட்களை ஆளும் காங்கிரஸ் கிண்டல் பண்ண, பா.ஜ.க.வோ ‘மார்க்சிஸ்ட் மாஜி முதல்வர் குடும்பத்துக்கு அன்பளிப்பாகவோ அல்லது லஞ்சமாகவோ கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததை சசிதரன் கர்தாவே ஒப்புக்கொண்டு விட்டார் இதற்கு மேல் என்ன வேண்டும்? விஜயன் அதிகார துஷ்பிரயோகம் செய்து சம்பாதித்துள்ளார் என நிரூபணமாகியுள்ளது என்று ஆவேச அரசியல் பண்ண துவங்கியுள்ளார்கள். எதிர்வரும் எம்.பி. தேர்தல் உள்ளிட்ட எதிலும் மார்க்சிஸ்ட்டை கேரளத்தில் எழ வைக்கவே கூடாது எனும் நோக்கில் பா.ஜ.கவும், காங்கிரஸும் திரைமறைவில் இணைந்து செயல்படுவதுபோலவே உள்ளது’ என்றார்.

வீணாவிடம் விளக்கம் கேட்க இயலாத நிலையில், அவரின் கணவர் முகமது ரியாஸிடம் பேசினோம். “போலியான ஜோடிப்புகள்தானே பா.ஜ.க.வின் அரசியல், கேரளத்துக்கு எங்கள் இயக்கத்தின் மாண்பும், நேர்மையும் தெரியும். சட்டப்பூர்வமாக இந்த பொய் வேலிகளை உடைத்தெறிவோம்” என்றார்.
கவனிக்கிறோம் சேட்டா!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here