back to top
14.9 C
London
Monday, October 5, 2026
No menu items!
Homeசினிமாகன்னடத்து எம்.எஸ்.வி. தந்த HIT SONG...அன்பு மேகமே இங்கு ஓடி வா! - Kumudam

கன்னடத்து எம்.எஸ்.வி. தந்த HIT SONG…அன்பு மேகமே இங்கு ஓடி வா! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


படம் அவுட்டு… பாட்டு ஹிட்டு! – வி.ராம்ஜி

எண்பதுகளை சினிமாவின் பொற்காலம் என்பார்கள். அதேநேரத்தில் சினிமாவின் அந்தக் காலம் வசந்த் அன் கோ காலம் என்பது போல், அந்தக் காலங்கள் மொத்தமுமே பொற்காலம்தான்! எழுபதுகளில், விதம்விதமான இசையமைப்பாளர்கள் வந்தார்கள். ரகம் ரகமான பாடல்களையெல்லாம் தந்தார்கள். பல நடிகர்களுக்கு நல்ல நல்ல பாடல்கள் கிடைத்தன. அவர்களுக்கு வழங்கப்பட்டாலும் அவையெல்லாம், அந்தப் பாடல்களெல்லாம் தமிழ் உலகுக்குக் கிடைத்தன. ரசிகர்களுக்குக் கிடைத்தன. அப்படிக் கிடைத்த அற்புதப் பாடல்களில்… ‘அன்பு மேகமே இங்கு ஓடிவா’ பாட்டை மறக்கவே முடியாது!

’மங்கம்மா சபதம்’ படம் தெரியும். ‘எங்கம்மா சபதம்’ என்றொரு படம் தெரியுமா? 1974ஆம் ஆண்டு வெளிவந்த படம் இது.  முத்துராமன், சிவகுமார், ஜெயசித்ரா, விதுபாலா, மேஜர் சுந்தர்ராஜன், எம்.என். ராஜம், அசோகன் முதலானோர் நடித்திருந்தார்கள். ’அன்னக்கிளி’ ஆர்.செல்வராஜ் கதை எழுத, திரைக்கதை வசனம் எழுதினார் பஞ்சு அருணாசலம். கண்ணதாசனும் பஞ்சு அருணாசலமும் படத்தின் பாடல்களை எழுதினார்கள். டி.எம்செளந்தர்ராஜன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா, வாணி ஜெயராம், எல்.ஆர்.ஈஸ்வரி, எல்.ஆர்.அஞ்சலி முதலானோர் பாடல்களைப் பாடியிருந்தார்கள்.

படத்தின் எடிட்டிங் ஆர்.விட்டல். ஒளிப்பதிவு பாபு. இதைச் சொன்னதுமே படத்தின் இயக்குநர் யாரென்பது எல்லோருக்குமே தெரிந்துவிடும். ஆமாம்… எஸ்.பி. முத்துராமன் தான் படத்தை இயக்கினார். ‘கனிமுத்து பாப்பா’ வில் தொடங்கிய எஸ்பி முத்துராமனின் ஆரம்பக் கால படங்களில் இந்தப் படமும் ஒன்று. எழுபதுகளில், கருப்பு வெள்ளைக் காலத்திலேயே இப்படி ஏராளமான வித்தியாசமான படங்களையும் குடும்பக் கதை கொண்ட படங்களையும் தந்திருக்கிறார் எஸ்.பி.முத்துராமன்.

யூனியன் லீடர் மேஜர் சுந்தர்ராஜன், அவர் மனைவி எம்.என்.ராஜம். தொழிற்சாலைப் பிரச்சினையில் முதலாளி அசோகன் தரப்பு கொன்றுவிட, ஒற்றை ஆளாக இருந்து மகள்கள் ஜெயசித்ராவையும் விதுபாலாவையும் ஆளாக்குவார் எம்.என்.ராஜம். பின்னர், அப்பாவின் மரணத்துக்குக் காரணமானவர்களைச் சொல்லுவார். அசோகனைப் பழிவாங்க வேண்டும், கதறடிக்கவேண்டும் என சபதம் போடுவார்.

அந்த சபதத்தை, மகள்கள் இருவரும் சேர்ந்து எப்படி நிறைவேற்றுகின்றனர் என்பதுதான் கதை. அசோகனின் மகன்களாக முத்துராமன், சிவகுமார். படத்தை கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் திரைக்கதை அமைத்து இயல்பான வசனங்களை பஞ்சு அருணாசலம் எழுதி அசத்தினார் எஸ்.பி.முத்துராமன் ‘மயங்குகிறாள் ஒரு மாது’ போல, ‘மோகம் முப்பது வருஷம்’ போல இயல்பாக இயக்கி பிரமிக்கவைத்திருந்தார். ஆனால் சபதம் படத்தில் நிறைவேறியது. நிஜத்தில் வசூலாக நிறைவேறவில்லை.

படத்தின் எல்லாப் பாடல்களும் செம ஹிட்டு. எழுபதுகளில் புதுமாதிரியான இசையைத் தந்த விஜயபாஸ்கர்தான் இசையமைப்பாளர். ’இளமை அழைக்கின்றது’ என்றொரு பாடல். டி.எம்.எஸ். மற்றும் சுசீலா இணைந்து பாடியிருப்பார்கள். ‘என்னய்யா முழிக்கிறே’ என்ற பாடல், எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார்.  இப்படி பல பாடல்கள் இருந்தாலும், மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது எஸ்.பி.பி. பாடிய பாடல். அவருடன் வாணி ஜெயராம் இணைந்து பாடியிருந்தார்.

அந்தப் பாடல்தான்… ‘அன்புமேகமே இங்கு ஓடி வா’. ‘மங்கம்மா சபதம் படமும் தலைப்பும் மறந்துவிட்டிருந்தாலும் இந்தப் பாட்டு இன்றைக்கும் அதே ஜீவன் குறையாமல், ஆரோக்கியமாகவும் ஆயுளுடனும் இருக்கிறது.

பாடலின் தொடக்கத்திலும் நடுவிலும் வரும் ஹம்மிங்… அப்படியே பாடலுடன் நம்மை கைகோர்க்கச் செய்துவிடும். ’கன்னடத்து எம்.எஸ்.வி.’ என்று போற்றப்படுகிற விஜயபாஸ்கர் மெல்லிசையாக கொடுத்த மென்மையான டியூன் இது. சிவகுமார், ஜெயசித்ரா பாடலுக்கு நடித்தார்கள். சென்னை கடற்கரையில், இரவு 9 மணிக்கு மேல் தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை படப்பிடிப்பு நடத்தினார்கள்.

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா
என்று வாணி ஜெயராம், இரவுக்குள் ஒளிரும் நிலவென சன்னமான குரலில் பாடினார்.

அன்பு தேவியே எந்தன் ஆவியே
உந்தன் கண்ணுக்குள் ஆடவா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூறவா
என்று எஸ்பிபி இரவுப்பாடல் என்பதால் இன்னும் ‘ஹஸ்கி’யுடன் பாடினார்.

கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
பொன்வண்ண மேகங்கள் பேர் சொன்னதா
பூமாலை நான் சூடும் நாள் வந்ததா
நான் நீயன்றோ நீ நானன்றோ
எனது மயக்கம் தெளிந்ததோ

என்று பாடும் போது, ‘நான் நீயன்றோ நீ நானன்றோ’ என்று சொல்லும்போதே, காதல் வயப்பட்டுவிடுவோம். ‘எனது மயக்கம் தெளிந்ததோ’ என்கிற டியூனுக்குள் நாம் மயங்கித்தான் போய்விடுவோம்!

காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு
காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு
சந்திரன் இங்கு சாட்சி உண்டு
சங்கமமாகும் காட்சி உண்டு
பூ மஞ்சமே பார் நெஞ்சமே
புதிய உலகம் பிறந்தது
பழைய கனவு மறைந்தது

என்ற பாடல், காதலில் நம்மையெல்லாம் கிறங்கடிக்கும். அந்தக் காலத்தில் சிலோன் ரேடியோவில் இந்தப் பாடலை ஒலிபரப்பாத நாளே இல்லை. எஸ்.பி.பி.யின் குரலும் அந்தக் குரலில் இருந்து வெளிப்படும் குழைவும்… நிஜமாகவே இந்த சங்கீத மேகத்தின் குரலுக்குக் கட்டுப்பட்டு, அந்த மேகமே பூமிக்கு வந்துவிடும்.

1974ஆம் ஆண்டு, வெளியானது ‘எங்கம்மா சபதம்’. ‘அன்புமேகமே இங்கு ஓடி வா’ பாடல் கிடைத்து நமக்கு 52 ஆண்டுகளாகின்றன. இந்தப் படத்தின் பாட்டுப்புஸ்தகம் கிடைக்கவே இல்லை. இந்த வார ஞாயிற்றுக்கிழமை சந்தையிலாவது கிடைக்கணுமே என பிள்ளையாரையெல்லாம் வேண்டிக்கொண்டே செல்வேன். அழுதுகொண்டே வருவேன்.

பிறகு, ரேடியோவில் இந்தப் பாட்டு வரும்போது, காதுகளை ரேடியோவுக்குள் திணிக்காத குறையாகக் கேட்டு மனப்பாடமே செய்துவிட்டேன். எனக்கு மனப்பாட சக்தி இருப்பதற்குக் காரணம், அந்த ரேடியோப்பெட்டியும் அதற்குள் புகுந்துகொண்ட என் காதுகளும்தான்! என்று என் அம்மா கிண்டலடிப்பாள். உடனே நான், சிவகுமார் போலவே ‘அன்பு மேகமே இங்கு ஓடி வா’ என்று அம்மாவை ஒருசுற்றுசுற்றவைப்பேன். கிறுகிறுத்துப் போவாள் அம்மா.

அந்தப் பாடலை இப்போதும் கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு அறுபது எனில், இருபதாக மாறியிருக்கும். ‘எனக்கு இருபது வயசுதான்’ என்கிறீர்களா? உங்கள் இளமை மனசுக்கு வர்ணஜாலங்கள் தீட்டி, புத்துணர்ச்சியைக் கொடுக்கும்!

‘அன்பு மேகமே இங்கு ஓடி வா’ பாடல்… எஸ்.பி.பி.யின் இனிமையான பாடல். அவரின் எண்ணற்ற பல்லாயிரக்கணக்கான பாடல்களில், தனிச்சுவையுடன் கூடிய பாடல்! ‘அன்பு மேகமே’ பாட்டைக் கேட்டுதான் பாருங்களேன்… உங்கள் வாழ்க்கைத்துணையின் அன்பையும் அந்த அன்புக்குள் இருக்கும் அடர்த்தியையும் தெளிவுற உணரலாம்!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here