back to top
22.5 C
London
Monday, October 5, 2026
No menu items!
Homeசினிமாகமலா? ரஜினியா? பதில் தெரியாமல் தவித்த 10 வயது ரசிகன்... ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ செய்த மாயம்!...

கமலா? ரஜினியா? பதில் தெரியாமல் தவித்த 10 வயது ரசிகன்… ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ செய்த மாயம்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


கொஞ்சம் பேச்சு… கொஞ்சம் சினிமா! – வி.ராம்ஜி

’நல்லாருக்கு போங்க… இளமை ஊஞ்சலாடுதுன்னு நினைப்போ…’ என்று வயதானவர்களைக் கேலியும் கிண்டலுமாய்க் கேட்பார்கள். ’பிள்ளை இல்லாதவன் வீட்ல கிழவன், துள்ளிக்குதிச்சானாம்!’ என்று கிராமங்களில் இன்றைக்கும் இந்த வார்த்தையைச் சொல்லி, பகடி செய்து கேலி செய்து ஜாலியாகப் பொழுதைப் போக்குவார்கள். ‘ஆனதெல்லாம் ஆகட்டும், கிழவியைத் தூக்கி மனைல வை’ என்கிற சொல்லாடலும் இப்படிப்பட்டதுதான்! ஆனால், இளமை எனும் உணர்வு,மனம் சம்பந்தப்பட்டது. காதல் தொடர்பு கொண்டது. உடல் வழியே உணர்ச்சிகளை வெளிப்படுத்த யத்தனிப்பது.

நட்புக்கு அடுத்தக் கோடு தாண்டியும், சபலத்துக்கு பல காத தொலைவுகள் கடந்து சென்று பயணிப்பதுமானது. இது முதுமையில் எட்டிப்பார்க்கிற இளமை இல்லை; இளமையிலேயே இம்சை பண்ணுகிற பேரவஸ்தை. ஒரு ஊஞ்சலைப் போல, முன்னும்பின்னுமாக இளமை உணர்வுக்குள்ளும் உணர்ச்சிக்குள்ளும் கனன்று கொண்டிருக்கிற இதயங்களின் அவஸ்தை! இதுதான் ‘இளமை ஊஞ்சலாடுகிறது!’ இயக்குநர் ஸ்ரீதரின் இளமைப்படைப்பு; இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் இதயத்துடிப்பு!

எழுபதுகளின் இறுதிகளில், கமலும் ரஜினியும் தங்களின் தனித்துவத்தால் முன்னேறிக்கொண்டே வந்தார்கள். தீராக்காதலுடன் நடிப்பில் புதுசுபுதுசாய் பசியுடனும் தாகத்துடனும் வளர்ந்து வந்த கமலுக்கு சரியான தீனியாக அமைந்தது இந்தப் படம். ஸ்டைலில் அதகளம் பண்ணிக்கொண்டே இருந்த ரஜினிக்கு அட்டகாசமான களத்தை அமைத்துக் கொடுத்தது இந்தத் திரைப்படம்! எந்தக் கேரக்டராக இருந்தாலும் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிற ஸ்ரீப்ரியாவுக்கும் ஜெயசித்ராவுக்கும் அருமையான கதாபாத்திரங்கள் கிடைத்த வகையிலும் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ முக்கியத்துவம் வாய்ந்த படம்!

புதுமை இயக்குநர்தான் ஸ்ரீதர். ஆனாலும் இந்தப் படத்துக்கு  வேறு இரண்டு நடிகர்களைத்தான் முதலில் ஒப்பந்தம் செய்வதாக இருந்தார்கள். அவர்கள், அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கொடிநாட்டியவர்கள். ‘இளமை’க்கதைக்குள் அவர்களின் ‘முதுமை’ ஒட்டாது என்பதுதான் யதார்த்தம். ஆனாலும் பழக்கம், நெருக்கம் காரணமாக அந்த நடிகர்கள்தான் நாயகர்கள் என்பதில் உறுதியாக இருந்தார் ஸ்ரீதர்.

ஆனால் கமலும் ரஜினியும் போடலாம்; பிரமாதமாக இருக்கும் என்று உதவி இயக்குநர்கள் சொன்னார்கள். ’16 வயதினிலே’ படத்தையெல்லாம் உதாரணம் காட்டினார்கள். திரையில் கமலும் ரஜினியும் சேர்ந்து வந்து நின்றாலே, இளைஞர்கள் ஆர்ப்பரிப்பதாக விளக்கினார்கள். ஆனால் ஸ்ரீதர் சொன்ன ஒற்றைப்பதில்… ‘வேணாம்’!

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள். ஈரமனசு கொண்ட ஸ்ரீதர் உருகாமலா இருப்பார்? ஒருவழியாக கமல், ரஜினி பெயர்களை ‘டிக்’ அடித்தார். அந்த உதவி இயக்குநர்களுக்குத்தான் தமிழ் சினிமா ரசிகர்கள் நன்றி சொல்லவேண்டும். அவர்கள்தான் சந்தானபாரதி, பி.வாசு! ஸ்ரீதரிடம் அப்போது உதவி இயக்குநர்களாக இருந்தார்கள். சரி… ஹீரோக்கள் விஷயத்தில் இயக்குநரை சம்மதிக்கவைத்தவர்கள், இசை விஷயத்துக்கு இப்படித்தான் கெஞ்சிக் கொஞ்சினார்கள். ‘எனக்கு விசு இருக்கான். அவன் போதும்’ என்று மெல்லிசை மன்னர்தான் இசை என்பதால் உறுதியாக இருந்தார்.

‘விசு இல்லாம வேற இசையமைப்பாளரா? என்னால நினைச்சுக்கூட பாக்கமுடியல!’ என்று கோபம் கொண்டார். வாசுவும் சந்தானபாரதியும் ஒற்றைக்காலில் நின்றார்கள். கோபத்தில் பொரிந்து தள்ளினார். ‘என்னய்யா இளையராஜா, இளையராஜான்னுக்கிட்டு? அவர் பாட்டெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா எனக்கு விஸ்வநாதன் இல்லாம கையும் ஓடாது, காலும் ஓடாது’ என்பதில் உறுதியாக இருந்தார் இளையராஜா.

மறுநாள். சந்தானபாரதி வீட்டுக்கும் வாசுவின் வீட்டுக்கும் கம்பெனி கார் வந்து அழைத்துச் செல்வதற்கு வரவேண்டும். ஆனால் கார் வரவில்லை. ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். பிறகு ஆட்டோ பிடித்து அலுவலகத்துக்கு வந்தார்கள். ஒரு சின்னக்குழந்தையைப் போல், முகத்தை உம்மென்று தூக்கிவைத்துக்கொண்டு, டென்ஷனில் இருந்தார் ஸ்ரீதர். ‘இப்ப என்னய்யா சொல்றீங்க? ஹீரோவை மாத்திட்டீங்க, மியூஸிக் டைரக்டரையும் மாத்தணும்.

அவ்ளோதானே?’ என்று செல்லக்கோபம் காட்டினார் ஸ்ரீதர். .உற்சாகத்தில் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். கமலிடம் பேசும் பொறுப்பு சந்தானபாரதிக்கு; ரஜினியிடம் சென்று பேசிச்சம்மதம் வாங்குவது பி.வாசுவுக்கு. பிறகு இரண்டுபேரும் கங்கை அமரன் மூலமாக இளையராஜாவைச் சந்தித்தார்கள்.’ஸ்ரீதர் சார் படத்தில் என் இசையா?’ என்று ஆர்மோனியத்தில் இருந்து எழுந்த இளையராஜா,நேராக ஸ்ரீதரின் அலுவலகம் வந்தார்.’உங்களோட வேலை செய்றத்கு எனக்குக் கிடைச்ச பாக்கியம்’ என்று ஸ்ரீதரிடம் ஆசி பெற்றுக்கொண்டார் இளையராஜா.

ஆக, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ என்ற திரைப்படம் காவியமானதன் பின்னணியில், இப்படி ஏராள ஆச்சர்யங்கள்; எண்ணற்ற அதிசயங்கள்!

பி.வாசு சாரிடம் பேசிய தருணத்தில் ஒரு திரைக்கதை போல் என்னிடம் விவரித்தார். ‘சினிமா ஜோஸியரே…’ என்று என்னை அழைக்கும் கங்கை அமரன் அவர்கள், பல தருணங்களில், உரையாடல்களில், ப்ளாஷ்பேக் போல் இசைஞானி குறித்துச் சொன்ன விஷயங்களெல்லாம், ராசய்யாவின் ‘ராஜ சம்பவங்கள்!’

திருச்சி ராஜா தியேட்டரில் படம் வெளியானது. ஏகக்கூட்டம். க்ளாமர் கடந்து, செக்ஸெல்லாம் தாண்டி, படம் என்னவோ செய்தது. பாடல்கள், இந்தப் படத்துக்கு ஈஸ்ட்மென் கலர் கொடுத்து, வானவில் தோரணங்களை அமைத்தன. ‘இலைக்கட்டு கனகராஜ்’ என்றொரு அண்ணன் எங்கள் ஏரியாவில் இருந்தார். ‘டாக்டராகணும், எஞ்சினியராகணும், வக்கீலாகணும்’ என்று இன்ஸ்பிரேஷனாவோம்தானே! ஆனால் இந்த கனகராஜ் அண்ணன் பார்க்கும்போதெல்லாம் வெறுப்பேற்றுவார். ‘ஒரேநாள் உனை நான்’ பாட்டுக்காக திங்கட்கிழமை போய் படம் பார்த்துட்டு வந்தேன்’ என்றார். ‘ஒருவேலையும் இல்ல.

செம போரா இருந்துச்சு. அதான், ‘கிண்ணத்தில் தேன் வடித்து’ பாட்டுக்காக ஒருதடவை பாத்தேன்’ என்பார். ‘நீ கேட்டால் நான் மாட்டேனென்று சொல்வேன் கண்ணா’ பாட்டுக்காக, ‘தண்ணி கருத்திருச்சு தவளைச்சத்தம் கேட்டுருச்சு’ பாட்டுக்காக, ‘என்னடி மீனாட்சி நீ சொன்னது என்னாச்சு’க்காக, பார்த்துவிட்டு வந்ததைச் சொல்லுவார். எனக்குக் கோபமும் ஆத்திரமும் வரும். கமல் ஹேர்ஸ்டைலுக்காக, நடனத்துக்காக, ஸ்ரீப்ரியாவின் அழகுக்காக, ஜெயசித்ராவின் நடிப்புக்காக, ரஜினி ஒரு சிறிய பேனாவை டக்கென்று ஆட்டும்போது, அது நீளமாக வளர்ந்திருக்குமே… அதில் ஸ்டைலாக கையெழுத்துப் போடுவாரே… அதற்காக, அப்புறம்… கமலும் ஸ்ரீப்ரியாவும் போனிலேயே ‘இச் இச்’ வைத்துக்கொள்கிற காட்சிக்காக என்று மனுஷன் வெறுப்பேற்றிக்கொண்டே இருந்தார்.

‘இந்தநாள் உன் டைரியில எழுதிவைச்சிக்கங்க கனகராஜ் அண்ணன். ஒருநாள்… உங்களை விட ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தை அதிகதடவை பாத்தவன் நான் என்று பேரெடுக்கலை… எம்பேரை மாத்திவைச்சிக்கங்க’ என்று இலைக்கட்டு கனகராஜ் அண்ணனிடம் நான் சவால் விட்டபோது, ‘அண்ணாமலை’யெல்லாம் வரவே இல்லை. பிறகென்ன… என் வாழ்க்கையில் கனகராஜ் அண்ணன் வில்லனென்றால்… நாம்தானே ஹீரோ! எம்புட்டு தடவை பார்த்தேன் என்றே தெரியாத அளவுக்கு அம்புட்டு தடவை பார்த்தேன்; ரசித்தேன்!

இந்தப் படத்தில் வில்லன் கிடையாது. பழிவாங்கல், ரத்தக்களறிக்கெல்லாம் வேலையே இல்லை. சம்பவங்களும் சூழ்நிலைகளும்தான் வில்லன். காமெடிக்கு தனி டிராக்கெல்லாம் போடவில்லை ஸ்ரீதர். படத்தினூடே, காட்சிகள் வாயிலாகவே ஆங்காங்கே சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிற காமெடிகளை மிகையில்லாமல் சேர்த்தார் ஸ்ரீதர்.

’கல்யாணப் பரிசு’, ’காதலிக்க நேரமில்லை’, ’நெஞ்சில் ஓர் ஆலயம்’ என்று அந்தக் காலத்தில் படமெடுத்தவர்,  ’உரிமைக்குரல்’, ’மீனவநண்பன்’ என்று எம்ஜிஆரின் கடைசிகால திரைப்படங்களை ஹிட்டாக்கியவர் என்று மட்டும் அறிந்துவைத்திருந்த இளம் ரசிகர்களுக்கு, ஸ்ரீதரும் ஸ்ரீதரின் கதை சொல்லும் பாணியும் தெரியவந்ததற்கு, இந்த ’இளமை ஊஞ்சாலாடுகிறது’, மிகப்பெரிய பாலமாகவே அமைந்தது! .

பணக்கார ரஜினி. அவர்கள் வீட்டில் யாருமற்ற கமல், மகனைப் போலவே வளர்கிறார். இருவரும் சகோதரர்கள் போல, நண்பர்கள் போல அன்பு பாராட்டிக் கொள்கின்றனர். கமலும் ஸ்ரீப்ரியாவும் காதலிக்கின்றனர். ஸ்ரீப்ரியாவுக்கு நெருக்கமான, ரஜினி, கமல் ஆபீசில் வேலை பார்க்கிறார்  ஜெயசித்ரா. இளம் விதவை. கமல், ஸ்ரீப்ரியாவின் காதலும் லீலையும் ஜெயசித்ராவுக்குத் தெரியும் என்பதும் ரஜினிக்குத் தெரியாது என்பதும் படத்தின் சுவாரஸ்ய முடிச்சு!

ரஜினி , ஒருகட்டத்தில் ஜெயசித்ராவை மடக்க நினைப்பார். பிறகு மன்னிப்பும் கேட்பார். கமல் ஸ்ரீப்ரியா காதல் பற்றித் தெரியாத ரஜினி, ஸ்ரீப்ரியாவை வளைக்கப்பார்ப்பார். ஆனால் பிடிகொடுக்கமாட்டார் ஸ்ரீப்ரியா. இங்கே ரஜினியும் கெட்டவரில்லை. கமலும் நம்பிக்கை துரோகியில்லை. ஆனால் காலம் அப்படி கண்ணாமூச்சி விளையாடும்.அதுதான் ஸ்ரீதர் எனும் புதுமை இயக்குநரின் ஜாலம்!

ஜெயசித்ராவின் கிராமத்திற்கு ஸ்ரீப்ரியா சென்றிருக்க, ஜெயசித்ராவின் அப்பாவுடன் ஸ்ரீப்ரியா ஒரு திருமணத்திற்காக பக்கத்துக் கிராமம் போயிருப்பார். ஜெயசித்ரா மட்டும் வீட்டில் தனியே இருப்பார். கமல் அங்கே தன் காதலி ஸ்ரீப்ரியாவைப் பார்க்க வருவார். வேறு வழியின்றி அன்றிரவு தங்கநேரிடும். அந்த இரவு… அந்தத் தனிமை… இளம் விதவைக்குள் உணர்ச்சியைக் கிளறிவிட, கமல்ஹாசனை உறவுக்கு அழைப்பார் ஜெயசித்ரா.

ஒரு வசனம் கிடையாது. ஆபாசமில்லை. ஆனால் தன் கண்களாலேயே கமலுக்கு அழைப்பு விடுக்க, அந்த சபலக்குழியில் இருவருமே விழுவார்கள். ஆனால் குற்ற உணர்ச்சிக்கு ஆளான கமல், ஜெயசித்ராவுக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு, கிளம்பிவிடுவார். அந்தக் கடிதம், ஸ்ரீப்ரியா கையில் கிடைக்கும்.

கமலை விட்டு தள்ளிப்போக நினைக்கிற அதேவேளையில், ரஜினி ஸ்ரீப்ரியாவுக்கு  கொஞ்சம்கொஞ்சமாக நெருக்கமாவார். அதேவேளையில், கமலுக்கு ஜெயசித்ரா எழுதும் கடிதம் ரஜினியின் கையில் கிடைக்க… கமல் மீது ’கெட்டவன் முத்திரை’ குத்தப்படும். ஒருகட்டத்தில், ரஜினியின் வீட்டைவிட்டு கமல் வெளியேறி எங்கோ போய்விடுவார். ஜெயசித்ராவைத் தேடுவார்.  

இங்கே, ரஜினிக்கும் ஸ்ரீப்ரியாவுக்கும் திருமணம் உறுதி செய்யப்படும். ஆனால் தள்ளிப் போடப்பட்டு, ரஜினியின் உடல்நிலைக்காக மலைவாசஸ்தலம் செல்ல நேரிடும். ரஜினியைப் பார்த்துக் கொள்ள துணைக்கு ஸ்ரீப்ரியா செல்வார். அங்கே அந்த எஸ்டேட்டில் கமல் மேனேஜராக வேலை பார்ப்பார். ஒரு கட்டத்தில், கமலும் ஸ்ரீப்ரியாவும் பேசக்கிடைக்கிற சந்தர்ப்பத்தில், ஜெயசித்ரா குறித்து அத்தனை உணமைகளையும் சொல்லுவார் கமல்.

பெங்களூருவில் ஜெயசித்ராவைப் பார்த்தது, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது, ஜெயசித்ரா விபத்தில் சிக்கி இறப்பது, இறந்த ஜெயசித்ராவின் கழுத்தில் கமல் தாலி கட்டியது என சகலமும் சொல்ல, கமல் மீதான கரிசனமும் காதலும் மீண்டும் துளிர்க்கும் ஸ்ரீப்ரியாவுக்கு! சூழலைப் புரிந்து உணர்ந்து கமலை மன்னிக்க ஸ்ரீப்ரியா தயாராக இருக்க, ரஜினிக்கு எல்லா விஷயமும் தெரியவர… நிறைவாக கமலையும் ஸ்ரீப்ரியாவையும் இணைத்துவைத்துவிட்டு, ‘சிக்லெட்’ கொடுத்து ரஜினி கிளம்புவதுடன் படம் நிறைவுபெறும்.

ஹோட்டலில் பர்ஸை தொலைத்துவிட்டு கமல் செய்யும் கற்பனைக் காட்சி, படத்தில் அடிக்கடி ரஜினி, ஸ்டைலாக ‘சிக்லெட்’ என்று சொல்லும் காட்சி, என அமர்க்களம் பண்ணியிருப்பார்கள் இரண்டுபேரும்! ’இப்போது எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணிஜெயராம் பாடிய பாடல். இடம் பெற்ற திரைப்படம் படம் இளமை ஊஞ்சலாடுகிறது’ எனும் ரேடியோ அறிவிப்பு படத்தில் இடம்பெறும். தியேட்டரே இதை ரசித்துக் கைத்தட்டியது. ஸ்ரீப்ரியா வீட்டுக்கு போன் செய்து ‘இச் இச் இச்…’ என்கிற சங்கேத முத்த பாஷை, கமலுக்கும் ஜெயசித்ராவுக்குமான ’கிண்ணத்தில் தேன் வடித்து’ பாடல், காரின் ஸ்டெப்னியை கமல் மாட்டும் போது, டேப்ரிகார்டரில் ‘ஒரேநாள் உனை நான் நிலாவில் பார்த்தது’ பாடலை ஸ்ரீப்ரியா ஒலிபரப்பச் செய்வார்.

உடனே கமல் அதை ஆஃப் செய்வார். மீண்டும் ஸ்ரீப்ரியா ஆன் செய்வார். மீண்டும் ஆஃப் செய்யும் கமல்… அங்கே அத்தனையையும் பார்த்துக் கொண்டிருக்கிற ரஜினி. தியேட்டரே ஆர்ப்பரிக்கும் அற்புதக் காட்சி அது. நிவாஸ் ஒளிப்பதிவு மிகச் சிறப்பு. அந்தக் காரையும் கமல், ஸ்ரீப்ரியா, ரஜினியையும் அவர்களின் உணர்வுகளையும் டயர் போல் சுற்றிச் சுற்றி விஸ்தரித்துக் காட்டும் கேமராவுக்கு தியேட்டரே ஆர்ப்பரித்தது.

‘வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா’ பாடலையும் ‘தண்ணி கருத்திருச்சு’ பாடலையும் அப்போது பாடாத மேடைக் கச்சேரிகளே இல்லை. அத்தனை பாடல்களையும் ஹிட்டாக்கித் தந்திருப்பார் இளையராஜா. கவிஞர் வாலி அத்தனைப் பாடல்களையும் இளமை மாறாமல் எழுதினார். காரைக்குடி கோட்டையூரில் உள்ள தாத்தா வீட்டில், கரெண்ட் வசதி கிடையாது. அதுவொரு ஸ்டோர் வீடு. ஏழெட்டு வீடுகள் இருக்கும். மாலை வேளையில் எல்லோரும் எங்கள் வீட்டில்தான் இருப்பார்கள். அரிக்கேன் விளக்கில் முகம்பார்த்துக்கொள்வோம்.

‘என்ன படம் பாத்தே ராம்ஜி’ என்று லட்சுமி அத்தைக் கிளறிவிடும். பார்த்த படங்களையும் பாடல்களையும் சொல்ல, ‘என்னடி மீனாட்சி’ பாடலும் வரும். விறுவிறுவென ஓடிப்போய், ஒரு வேப்பங்குச்சியை உடைத்து, அதை மைக் போல் வைத்துக்கொண்டு, ‘வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா’ என்று பாடி, ஆடி, நடித்துக் காட்டுவேன். பாப்பா சித்தியும் சின்னக்குட்டி சித்தியும் ‘ருக்கு புள்ளையா கொக்கா?’ என்று என் அம்மாவையும் சேர்த்துப் பாராட்டுவார்கள். இதில் கிறுகிறுத்துப் போனகாலம்தான் என் மன ஊஞ்சலாடும், இளமைக்காலம்!

சினிமாவுக்காக, கதைக்காக, டிராமிட்டாக, சென்டிமென்டாக எவரையும் குற்றவாளியாக்காமல், சந்தர்ப்பங்கள், சபலங்கள், சூழ்நிலைகள்தான் குற்றவாளிகள் என எல்லாத் தவறுகளையும் எல்லாரின் தவறுகளையும் மன்னித்து, அப்படியே ஏற்றுக் கொண்ட சினிமா மேய்ப்பராகத்தான் ஸ்ரீதர் சார் எனக்குத் தெரிந்தார்! இன்றைக்கும் அவரின் எல்லாப் படங்களும் சாட்சியாக இருக்கின்றன!

1978ஆம் ஆண்டு, என்னுடைய பத்தாவது வயதில் வந்த ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ எனக்குள் அடுத்தடுத்து ஏற்படுத்திய தாக்கம், ஒரு நாவல் தரும் தாக்கத்துக்கு ஈடானது. இந்தப் படம் பார்த்துவிட்டு, ‘நாம கமல் ரசிகனா? ரஜினி ரசிகனா?’ என்று எனக்கு நானே கேள்விக்கேட்டுக்கொண்டேன். ‘தெரியலையேப்பா… தெரியல’ என்று எனக்குள்ளிருந்து பதில் வந்தபோது, வேலுநாயக்கரெல்லாம் அறிமுகமாகவே இல்லை!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here