back to top
12.1 C
London
Thursday, October 22, 2026
No menu items!
Homeதமிழ்நாடுஷாக் அடிக்கும் மின் கொள்முதல் விவகாரம்..யூனிட் ஒன்றுக்கு ரூ.37 ரேட்..நாளொன்றுக்கு ரூ.77 கோடி வேஸ்ட்! -...

ஷாக் அடிக்கும் மின் கொள்முதல் விவகாரம்..யூனிட் ஒன்றுக்கு ரூ.37 ரேட்..நாளொன்றுக்கு ரூ.77 கோடி வேஸ்ட்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


மின் தேவை அதிகரித்துவிட்டதால், அவசரத் தேவைக்காக 4,500 மெகாவாட் மின்சாரத்தை, ஒரு யூனிட் 31 ரூபாய் முதல் 37 ரூபாய் வரை மின் கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் கடந்த அக்டோபர் 12ம் தேதி டெண்டர் வெளியிட்டிருக்கிறது. அதேசமயம், எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து மின் கொள்முதல் செய்யப்போகிறது என்கிற விவரம் வெளியிடப்படவில்லை. தற்போது, இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடிக்க, எதிர்க்கட்சிகளும் அடுத்தடுத்து கண்டனம் தெரிவிக்க, மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமாரோ விளக்கம் கொடுக்கிறேன் என்ற பெயரில் மாற்றி மாற்றி பேச, தமிழகமே அதகளப்பட்டுக்கொண்டிருக்கிறது.

கடைசி நேர கொள்முதல்… விலையேற்றத்துக்கு காரணம்

உண்மையில் மின்சார வாரியத்தில் என்னதான் நடக்கிறது என்பது குறித்த விசாரணையில் இறங்கினோம். இதுகுறித்து நம்மிடம் பேசிய மின்வாரிய ஊழியர்கள், “எந்த அரசாக இருந்தாலும் மின் தேவையை முன்கூட்டியே கணக்கிட்டு, அதற்கேற்ப மின் கொள்முதலில் ஈடுபடுவார்கள். அப்போதுதான் மின்சாரத்தை மிக குறைந்த விலையில் கொள்முதல் செய்யமுடியும். கடைசி நேரத்தில் கொள்முதல் செய்தால் இப்படித்தான் ஒரு யூனிட் 35 முதல் 37 ரூபாய் வரை உயர்ந்துவிடும். கடந்த 2021ம் ஆண்டு அண்ணாமலை பா.ஜ.க. தலைவராக இருந்தபோது, தி.மு.க. அரசு 20 ரூபாய்க்கு மின் கொள்முதல் செய்ததற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதற்கு அப்போது கருத்து தெரிவித்த நிர்மல்குமார், ‘மின்சாரத்துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்றார்.

20 ரூபாய்க்கு வாங்கியதற்கே மின்சாரத்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டுமென்றால், தற்போது 37 ரூபாய்க்கு மின் கொள்முதல் செய்யும்போது யார் பதவி விலகுவது? நிர்மல்குமார் மட்டுமல்ல, த.வெ.க. தலைவரான விஜய் கூட, கடந்தாண்டு இதே அக்டோபர் 13ம் தேதி ஈரோட்டில் பிரசாரம் செய்தபோது, ‘அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதில் முறைகேடு நடந்திருக்கிறது’ என்று ஆவேசமாக பேசினார். இப்போது அவருடைய ஆட்சியிலும் அதேதான் நடைபெறுகிறது.

மாற்றி மாற்றி பேசும் அமைச்சர்!

டெண்டர் வெளியிடும் போது 31 முதல் 37 ரூபாய் வரை ஒரு யூனிட் மின்சாரத்தை 4,500 மெகாவாட் வரை கொள்முதல் செய்யப்போகிறோம்’ என்று சொல்லிவிட்டு, இது சர்ச்சையானதும் அமைச்சர் 1000 மெகாவாட் தான் வாங்குகிறோம்’ என்று மழுப்புகிறார். அக்டோபர் 16ம் தேதி மறுபடியும் மாற்றி 300 மெகாவாட் தான் வாங்கப்போகிறோம் என்கிறார். இதனால், ‘குறைந்த விலையில் முன்னரே கொள்முதல் செய்யாமல், கடைசி நேரத்தில் அதிக விலைக்கு பர்சேஸ் செய்வதில் ஊழல் நடக்கிறது’ என்ற குற்றச்சாட்டும் றெக்கை கட்டுகிறது.

தவிர, இவ்வாறு கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்வதற்காகத்தான் செயற்கையாக மின்வெட்டு செய்யப்பட்டது என்றும் சொல்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமென்றால், 95 சத விகித பணிகள் முடிந்த 1,320 மெகாவாட் திறன்கொண்ட உடன்குடி அனல் மின் நிலையம், 75 சதவிகிதம் பணிகள் முடிவுற்ற 1,320 மெகாவாட் திறன்கொண்ட எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல அனல் மின் நிலையம், 35 சதவிகிதம் மட்டுமே முடிந்திருக்கிற உப்பூர் 1,600 மெகாவாட் அனல் மின் நிலையம், கிடப்பில் கிடக்கும் 660 மெகாவாட் எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் ஆகியவற்றை துரிதகதியில் முடித்து உற்பத்தியைத் தொடங்க வேண்டும். அப்போதுதான் நிலைமையை சமாளிக்க முடியும்” என்றனர்.

மின் உற்பத்தியில் தேக்கம்!

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன், ‘தற்போது கேஸ் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைத்தான் ஒரு யூனிட் 37 ரூபாய் வரை கொடுத்து கொள்முதல் செய்யவிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலும், தனியார் கட்டுப்பாட்டிலும் இயங்கிவரும் அனல், காற்றாலை, சோலார், ஹைட்ரோ என அனைத்து வகையான மின் உற்பத்தி நிலையங்களிலும் சேர்த்து, 49 ஆயிரம் மெகாவாட் அளவுக்கான மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய உற்பத்தித் திறன் நம்மிடம் இருக்கிறது.

எனினும், மின் உற்பத்தி அதில் பாதியைக்கூட எட்டவில்லை. சொல்லப்போனால், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் மூலம் அனல் மின் நிலையங்களின் அதிகபட்ச மின் உற்பத்தி திறன் 5,130 மெகாவாட். அதுவும் முழுமையாக இயங்காததால், 3,800 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஹைட்ரோ எனப்படும் நீர் மின்சாரம் மூலம் 2,363 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் அளவுக்கு உற்பத்தித் திறன் இருந்தும், முழுமையாக கிடைக்கப்பெறவில்லை.

அடுத்ததாக, காற்றாலை மூலம் மின்சாரம் முழுமையாக தனியாரிடம் தான் உள்ளது. சூரிய ஒளி மின்சாரம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் செயல்படும் அதானியின் சோலார் பிளான்ட்டில் இருந்து 305 மெகாவாட் 5 ரூபாய் 5 பைசாவுக்கும், 310 மெகாவாட் 7 ரூபாய் 1 பைசாவுக்கும் வாங்கப்படுகிறது. மின் உற்பத்தி மற்றும் ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தங்களின் மூலம் மொத்தமே 13 ஆயிரம் முதல் 14 ஆயிரம் மெகாவாட் வரை தான் நமக்குக் கிடைக்கிறது. ஆனால் ஒரு நாளின் தேவை 21 ஆயிரம் மெகாவாட்டைத் தாண்டுகிறது.

எங்கே தவறு நடந்தது?

த.வெ.க. அரசு செய்த ஒரே தவறு என்னவென்றால், ஏற்கெனவே தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட லாங் மற்றும் மீடியம் டெர்ம் செட்டில்மென்ட்களை ரத்து செய்ததுதான். சப்ளை செய்யாமல் இருந்தால்தான் டெண்டரை கேன்சல் செய்தாலும் பிரச்னை இல்லை. ஆனால், இப்படி ஆட்சி மாற்றத்தால் காரணமின்றி டெண்டர் ரத்து செய்யப்பட்டதால் அதற்குண்டான நஷ்டஈட்டை அவர்களுக்கு மின்வாரியம் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாடு இப்போது கிரிட் எனப்படும் நாடு தழுவிய மின் வழித்தடத்தில் இணைந்துவிட்டது. இதன்மூலம் ராஜஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கு நேரடியாகவே அனுப்ப முடியும். இதனால் எல்லா தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களும் தமிழ்நாட்டின் தேவையைப் பயன்படுத்தி விலையை ஏற்றுகின்றன. இந்தியாவில் 56 சதவிகிதம் மின் உற்பத்தி தனியாரிடம்தான் உள்ளது, 44 சதவிகிதம் தான் மத்திய, மாநில அரசுகளிடம் உள்ளது. இதனாலேயே, தனியார் நிர்ணயிக்கும் விலைக்கு வாங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

மூன்றாண்டு பணி, பத்தாண்டு இழுத்தடிப்பு

2016ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஊட்டியில் ஹைட்ரோ மின்சார உற்பத்தி நிலையம், உடன்குடி அனல் மின் நிலையம் ஆகியவற்றை அறிவித்தார். ஆனால் இவை எல்லாம் தற்போது கிடப்பில் உள்ளன. மூன்று வருடங்களில் முடிக்கவேண்டிய பணிகளை அரசு 10 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கிறது. வடசென்னை மூன்றாம் அலகு ஆரம்பிக்கும் போது 9 ஆயிரம் கோடி ரூபாய் என்று மதிப்பீடு செய்திருந்தோம். பிறகு 13 ஆயிரம் கோடி ரூபாயானது. இறுதியில் அத்திட்டத்தின் மதிப்பீடு என்பது 39 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது. அதில் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய 13 ரூபாய் செலவாகும். 

ஊழியர் சம்பளம், பராமரிப்பு எல்லாம் சேர்த்தால் இன்னும் கூடும். இதற்குப் பதிலாக வெளியில் ஆறு ரூபாய்க்கு கிடைக்கிறதே என்று மின்சார வாரியம் வெளியில் கொள்முதல் செய்துவிடுகிறது. நமது சொந்த உற்பத்தி என்றிருந்தால்தான், இப்போது ஏற்படுவது போன்ற அதிக டிமாண்டுகளை நாம் நிவர்த்தி செய்துகொள்ள முடியும்” என்றார் விரிவாக.

தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் காந்தியிடம் பேசியபோது, “தமிழ்நாடு அரசு என்.டி.பி.சி (NTPC National Thermal Power Corporation) என்ற நிறுவனத்திடம் இருந்தும், என்.வி.வி.என் (NTPC Vidyut Vyapar Nigam Limited) என்ற அதன் துணை நிறுவனத்திடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்கிறது. இந்த நிறுவனங்கள் எல்லாம் நேரடியாக மின் உற்பத்தி செய்வதில்லை. நமது தேவைக்கேற்ப மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து பர்சேஸ் செய்து நமக்குக் கொடுக்கிறார்கள். அதேபோல் பவர் டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற மத்திய அரசின் நிறுவனம் மூலம் தமிழ்நாடு மின்சாரத்தைக் கொள்முதல் செய்கிறது. நாஃப்தா என்ற கச்சா எண்ணெயை வடிகட்டுவதன் மூலம் கிடைக்கக்கூடிய எரிபொருளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தையும் மின்வாரியம் கொள்முதல் செய்கிறது.

செலவு பிடிக்கும் கேஸ் மின்சாரம்!

இதுமட்டுமின்றி, கேஸ் பிளான்ட் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தையும் மின்வாரியம் கொள்முதல் செய்கிறது. இது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாயு. இந்த வாயுவை 200 டிகிரிக்கு கீழாக குளிரூட்டி திரவ வடிவுக்கு மாற்றி, அதனை கப்பல் மூலம் இந்தியா கொண்டுவந்து, மறுபடியும் கொதிக்க வைத்து வாயுவாக மாற்றுகிறார்கள். அதிலிருந்துதான் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதனால்தான் விலை அதிகம் என்கிறார்கள். இதைத்தான் இப்போது 35 முதல் 37 ரூபாய் கொடுத்து மின் உற்பத்தி பகிர்மான கழகம் கொள்முதல் செய்கிறது.

அனல் மின் நிலைய திட்டங்கள் கிடப்பில் கிடப்பது பற்றியும், இருக்கும் அனல் மின் நிலையங்களில் கூட மின் உற்பத்தி குறைந்து வருவது பற்றியும், ஒப்பந்தம் போட்டவர்களிடம் இருந்து சரியாக மின் கொள்முதல் செய்யாதது குறித்தும் நான் அமைச்சரிடம் பேசியும் எந்தப் பதிலும் இல்லை. இவற்றை எல்லாம் கவனத்தில்கொண்டிருந்தால் சுமார் 4,000 மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைத்திருக்கும். இவற்றைத் தவறவிட்டதால் இன்று நாளொன்றுக்கு 77 கோடி ரூபாய் கொடுத்து மின்சாரத்தை வெளியில் கொள்முதல் செய்ய வேண்டியிருக்கிறது’ என்றார் விளக்கமாக.

இதற்கு எல்லாம் விளக்கம் கேட்டு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமாரை சாதாரண அழைப்பிலும், வாட்ஸ் ஆப்பிலும் பலமுறை தொடர்புகொண்டும் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. குறுந்தகவல் அனுப்பியும் பதில் இல்லை.

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்று சும்மாவா சொன்னார்கள்!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here