back to top
12.1 C
London
Thursday, October 22, 2026
No menu items!
Homeசினிமாதோழிகளின் அன்பைச் சொல்லும்....‘இதோ இதோ என் நெஞ்சிலே பாட்டு..!’ - Kumudam

தோழிகளின் அன்பைச் சொல்லும்….‘இதோ இதோ என் நெஞ்சிலே பாட்டு..!’ – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


படம் அவுட்டு… பாட்டு ஹிட்டு! – வி.ராம்ஜி

நண்பர்களின் அன்பைச் சொன்ன படங்களும் பாடல்களும் ஏராளம் ஏராளம். ’டேய், உங்க ரெண்டுபேரையும் பிரிச்சிவைச்சிருவாய்ங்கடா’ என்று ‘டோரத்தி’ படத்தில் வடிவு அண்ணன் கார்த்தியிடமும் சுப்புவிடமும் சொல்லுவார். ‘எங்களை யாருண்ணே பிரிக்கப்போறாய்ங்க?’ என்று கேட்பார்கள். ஆனால், கார்த்தியிடம் சிறுவயது முதலே பழகிய உயிர் நண்பனான சுப்பு, பெண் தன்மைகொண்டவன் என்பதே அவர்களைப் பிரித்துப் போடும். 

நண்பன் சுப்பு, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஓடிவந்து கட்டிக்கொள்ளும்போது, கார்த்திக்கிடம் அருவெறுக்கிற குணம் மேலோங்கியிருக்கும். நண்பனாக, பெண்ணாக, சக மனுஷியாகக் கூட மதிக்காமல் நடந்துகொள்கிற ஆணாதிக்க கட்டுக்குள் அடங்கியவனாக இருப்பான் கார்த்தி. 1978 ஆம் ஆண்டு வெளியான ‘வட்டத்துக்குள் சதுரம்’ என்ற படமும் நட்பைச் சொன்ன படம்தான். தோழிகளுக்குள் நடக்கிற கதைதான். படிப்பு படிப்பு என்றிருக்கிறவளுக்கு படிப்பே ஏறாத புத்தியைக் கொண்டிருக்கிறவள் தோழி.

ஆனால் தன் தோழியின் படிப்புக்காகவும் சமூக அவலத்தால் சிக்கிச் சின்னாபின்னமாகி விட்டதையும் சொன்ன ‘வட்டத்துக்குள் சதுரம்’ நீண்ட நாட்கள் ஓடவில்லை. ஆனால் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் என் தோழி, சாகும் வரை என் தோழிதான் என்று சொன்ன ‘வட்டத்துக்குள் சதுரம்’ படத்தையும் ‘அண்ணே அது பொண்ணுன்னே. நான் தான் இது தெரியாம இம்புட்டு வருசமா கஷ்டப்படுத்தியிருக்கேன்’ என்று புரிந்து உணர்ந்து தெளிந்து, கார்த்தி எடுக்கிற ‘டோரத்தி’யும் எனக்கு ஒன்றாகத்தான் தெரிந்தன!

எஸ்பி முத்துராமன் இயக்கிய இந்தப் படத்துக்கு கதை, வசனம், பாடல்கள் எல்லாமே பஞ்சு அருணாசலம்தான். இளையராஜாவின் இசை ராஜாங்கம், 1976ல் தொடங்கியது. இந்தப் பட,ம் 1978ல் வெளிவந்தது. ஸ்ரீகாந்த், சரத்பாபு ஹீரோக்கள் என்றாலும் லதாவும் சுமித்ராவும்தான் கதையின் மையப்புள்ளிகள். கிராமத்தில் ஒன்றாகப் படிக்கும் ‘டோரத்தி’ கார்த்தி, சுப்புவைப் போலத்தான் லதாவும் சுமித்ராவும் ஒன்றாகப் படித்தார்கள். லதாவின் அம்மா சரியில்லை, தப்பானவள் என்றெல்லாம் சொல்லி, லதாவிடம் பேசுவதைக் கண்டிக்கிறது குடும்பம். லதாவை ‘கழுதை கழுதை’ என்று கூப்பிட்டு அவமானப்படுத்துகிறான் சுமித்ராவின் அண்ணனான ஸ்ரீகாந்த். கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வருகிறார்கள். அவரவர் தேவைக்காக வரும்போது, சுமித்ரா சரத்பாபுவைப் பார்க்கிறார். காதலிக்கிறார்கள். லதாவோ, விபச்சாரத்தில் ஈடுபடுகிற குரூரத்துக்கு ஆட்படுகிறாள்.

’லதாவைப் பார்க்கக்கூடாது, பேசக்கூடாது’ என்று காதலிக்கு தடை போடுகிறார் சரத்பாபு. சிறுவயதில் ‘கழுதை’ என்று அவமானப்படுத்திய சுமித்ராவின் அண்ணன் ஸ்ரீகாந்த், லதாவை விரும்புகிறார். இந்த நிலையில், லதா தன்னையே மாய்த்துக்கொள்ள முடிவு செய்கிறாள். தன் தோழிக்காக, தோழியின் எதிர்காலத்துக்காக தன் உயிரையே கொடுக்கிறாள் என்பதுடன் படம் முடிகிறது. ஆனால் படம் மட்டும் ஓடவில்லை. பாட்டு எங்கும் ஓடாமல், காற்றில் கலந்து இன்றைக்கும் நமக்கு இதம் தந்துகொண்டே இருக்கிறது.

படம் தொடங்கும்போதே பாட்டு தொடங்கிவிடும். பாடலின் தொடக்கத்தில் பேபி சுமதியாக, பேபி இந்துவாக இருப்பவர்கள், பாடலின் நடுவே லதாவாகவும் சுமித்ராவாகவும் வளர்ந்துவிடுவார்கள். ஜானகியம்மாவும் பிஎஸ் சசிரேகாவும் இந்தப் பாடலைப் பாடினார்கள். பஞ்சு அருணாசலம் இந்தப் பாடலை எழுதினார். இதுபோன்ற எத்தனையோ பாடல்களை பஞ்சு அருணாசலம் எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் என் மன அலமாரியில் தனி ரகம்.

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

‘கொடி நீ, மலர் நான். கிளை நீ, கனி நான்’ என்று இணைபிரியாத தோழமையை இவ்வளவு இலகுவாகவும் அழகாகவும் உவமைப்படுத்திய பஞ்சு அருணாசலத்தின் இலவம் பஞ்சு வரிகளும் பாடலுக்கு கனம் சேர்க்கிற இளையராஜாவின் இசையும் நம்மை அப்படியே பால்யத்துக்கு கூட்டிச் சென்றுவிடும்.

ஓடுது ரயில் பாதை மனம் போலவே
பாடுது குயில் அங்கே தினம் போலவே
மா மரம் பூ பூத்து விளையாடுது
காடெங்கும் புது வாசம் பறந்தோடுது
பார்த்தது எல்லாம் பரவசம் ஆக
புதுமைகள் காண்போம் எந்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் முந்திரித்தோப்பு. இதற்கு அருகில் தண்டவாளப்பாதை. திருச்சியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் ரயில்வழி அது. தண்டவாளத்தில், ரயில் சக்கரத்தில் காசு வைத்து ஏமாந்துபோய், சாமியைத் திட்டியவர்களில் நானும் ஒருவன். ‘ஓடுது ரயில்பாதை மனம் போலவே’ என்று நண்பர்களுடன் தண்டவாளம் கடக்கும்போது, பாடிக்கொண்டே வந்தபோது, ஆறாவது ஏழாவது எட்டாவது! இந்தக் காலங்களிலெல்லாம் இந்தப் பாட்டு என்னை அழவைக்கிற பாடலாகத் தெரியவில்லை. பொன்மலைப்பட்டி அன்னை தியேட்டரில் படம் பார்த்தபோது கூட, இரண்டுபேர் சந்தோஷமாகப் பாடுகிறார்கள் என்பதுதான் எனக்குள் பச்சக்கென ஒட்டிக்கொண்டது.

தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்
தேன்கொண்ட மலராக மறு பாதி நீ
காற்றினில் ஒலியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருவாயடி
நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்
கொடிக்கொரு கிளைபோல் துணை நீயம்மா
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

ஒளியில் ஒரு பாதி, மலரில் ஒரு பாதி, காற்றினில் ஒலி, கனவுக்குள் நினைவு, நிலவுக்கு வானம், நீருக்கு மேகம், கொடிக்கொரு கிளை என உவமைகளை எளிமையாகச் சொல்லி, எல்லோருக்கும் உணர்த்தும்படியான வரிகளில் பஞ்சு அருணாசலம் உள்ளம் தொட்டிருப்பார். இளையராஜாவோ நம் உயிரையே அசைத்திருப்பார். ’பதினாறு வயதினிலே’ படத்தில் ‘செந்தூரப்பூவே செந்தூரப்பூவே’ பாடலில் ஸ்ரீதேவி சிரித்து ஆடிக்கொண்டுதான் இருப்பார். ஆனால் பாடலுக்குள் சுகத்துடன் சோகமும் ஊடுருவியிருக்கும். அதேபோலத்தான் இந்தப் பாடல் என்றும் பின்னாளில் உணர்ந்தேன்.

என்னுயிர்த்தோழி நளினி, சென்னை மடிப்பாக்கத்தில் இருக்கிறாள். எங்களின் குடும்பம் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கிற அவளின் மொத்தக்குடும்பத்தின் அன்பும் எல்லைகளே இல்லாதது. இருவரும் சென்னைக்கு வந்துதான் அறிமுகம். இரண்டுபேருக்குமே திருச்சிதான் பூர்வீகம். நளினிக்கு போன் செய்தால், ‘இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்’ என்று ஜானகியம்மாவும் சசிரேகாவும் என்னை வரவேற்பார்கள். ‘செம பாட்டு நளினி. ஹய்யோ… மனசை அப்படியே அள்ளிரும்’ என்றேன். ‘எனக்கும்தாம்பா’ என்றாள் அவள்!

இத்தனைக்கும் ‘வட்டத்துக்குள் சதுரம்’ என்றொரு படம் வந்தது. அந்தப் படத்தில் இவர்களெல்லாம் நடித்தார்கள், அதில்தான் இந்தப் பாட்டு என்பதெல்லாம் அவளுக்குத் தெரியாது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் நளினியும் அவள் தோழியும் அரசுப்பள்ளியில் படித்தார்களாம். இந்தப் பாடல் தங்களுக்காகவே எழுதிய பாடலாக உணர்ந்து, பாடலுக்கும் தங்களுக்குமாக உறவை வளர்த்துக்கொண்டார்களாம். 

சினிமாவில் குடும்பப்பாட்டு போல, எங்கள் தோழமையை நினைக்கும் பாட்டு இது. தோழியின் அப்பாவுக்கு டிரான்ஸ்பர், வெளியூர், வெளிமாநிலம் என்றெல்லாம் சென்றுவிட்டாள். ஒன்பதாவது வரை ஒன்றாகப் படித்தோம். இப்போது அவள் எங்கே இருக்கிறாள், என்ன செய்துகொண்டிருக்கிறாள், இருக்கிறாளா இல்லையா என்று எதுவுமே தெரியாது. ரொம்ப ரொம்ப அன்பானவள். அதற்குத்தான் இந்தப் பாடலை காலர் டியூனாக வைத்தேன்’ என்று சொன்னாள்.

ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா
தோழமை உறவுக்கு ஈடேதம்மா
நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா
உனக்கென நானும் எனக்கென நீயும்
உலகினில் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

என்ற வரிகளைப் பாடும்போது, என் பால்ய நண்பர்கள் பலரும் நினைவுக்கு வருவார்கள். கபடி, கோலிக்குண்டு, சிகரெட் அட்டை விளையாட்டு, பொன்வண்டு பிடித்தல் என காரியங்களில் என்னுடன் இருந்தவர்களின் முகங்களுக்கு மீசையும் வழுக்கையுமாக வரைந்து பார்த்து ஆறுதல் பட்டுக்கொள்கிறேன்.

ராமனின் குகனாக உனை பார்க்கிறேன்
மாலதி அனுவாக நான் வாழ்கிறேன்
இரு மனம் அன்பாலே ஒன்றானது
நேசத்திலே உள்ளம் பண் பாடுது
பறவைகள் போலே பறந்திடுவோம்
மகிழ்வுடன் வாழ்வோம் எந்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

படத்தில் லதா, சுமித்ராவுக்கு மாலதி, அனு என்றுதான் பெயர். அதை பாடலுக்குள்ளும் கொண்டு வந்திருப்பார் பஞ்சு அருணாசலம். பாடலில் சேருகிற ஒவ்வொரு இசையும் நட்பின் அடர்த்தியை, அன்பின் ஆழத்தைச் சொல்லிக்கொண்டே இருக்கும். நடுநடுவே ஜானகியம்மா, சசிரேகாவுக்குப் பதிலாக, இசைக்கருவிகள் பேசிக்கொண்டிருக்கும்.

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

என்ற பாடலைக் கேட்டுவிட்டு, சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் படத்தைப் பார்த்தேன். மறுநாள் நடிகை லதாவுக்குப்போன் செய்தேன். ‘சொல்லுங்க ராம்ஜி சார்’ என்றார் அதே அன்புச்சிரிப்புடன்! ‘வட்டத்துக்குள் சதுரம் படத்திலே அனுங்கற கேரக்டர்ல பிரமாதம் பண்ணிருந்தீங்கம்மா. உங்க எக்ஸ்பிரஷனுக்கு உங்க வாய்ஸும் மிகப்பெரிய பலம். படத்துல நீங்களும் சுமித்ராவும்தான் தோழிகள். ஆனா இந்தப் படம் பாக்கற ஆண்களாகட்டும் பெண்களாகட்டும், அவங்க எல்லாருமே தங்களின் பால்ய ஸ்நேகிதத்தைத் தேடுவாங்க இல்லன்னா நினைச்சிக்குவாங்கம்மா’ என்றேன்!

இளையராஜாவின் இசையில் பஞ்சு அருணாசலம் எழுதி, ஜானகியம்மாவும் சசிரேகாவும் பாடிய ‘இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்’ பாடலைக் கேளுங்கள். நீங்களும் உங்கள் பால்யத்துக்குச் செல்வீர்கள். அந்தத் தோழமையைத் தேடுவீர்கள்!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here