Home சினிமா வேலு நாயக்கர் நல்லவரா… கெட்டவரா? டிரெண்டிங்கில் கலக்கும் ‘நாயகன்’ வசனங்கள்! – Kumudam

வேலு நாயக்கர் நல்லவரா… கெட்டவரா? டிரெண்டிங்கில் கலக்கும் ‘நாயகன்’ வசனங்கள்! – Kumudam

0



கொஞ்சம் பேச்சு… கொஞ்சம் சினிமா! – வி.ராம்ஜி

’டோரத்தி’ படத்தில் கார்த்தியும் சுப்புவும் சிறுவர்களாக இருப்பார்கள். தெருவில், ‘கமல், சரண்யா நடிப்பில் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் என்று தெருவில் விளம்பரம் செய்துகொண்டு போகும்போது, ‘எங்க வீட்டுக்கு வந்து அப்பா, அண்ணன்களையெல்லாம் பாத்தியே… இப்ப சொல்லுடா… அவங்க நல்லவங்களா கெட்டவங்களா?’ என்று நண்பன் கார்த்தியிடம் சுப்பு கேட்பான். ‘தெரியலியேப்பா…’ என்று கார்த்தி பதில் சொல்லுவான். தியேட்டரே ரசித்துக் கைத்தட்டிய காட்சிகளில் இதுவும் ஒன்று! 1987ம் ஆண்டில் இருந்து இப்போது வரை, நாம் எல்லோரும் பல தருணங்களில், ‘நல்லவனா கெட்டவனா?’ என்று கேட்டிருப்போம் அல்லது நம்மிடம் கேட்டிருப்பார்கள். ‘தெரியலியேப்பா’ என்று நாம் சொல்லியிருப்போம் அல்லது சொல்லக் கேட்டிருப்போம்.

கிட்டத்தட்ட ஜென் ஸீ இளைஞர்கள் மத்தியிலும் கூட இந்த வசனம் ‘ரீச்’ ஆகியிருக்கிறது; தாக்கம் தந்திருக்கிறது என்பதுதான் 40ஆம் ஆண்டை நெருங்குகிற ‘நாயகன்’ எனும் படைப்பின் ஆகிருதி!

சில படங்களை ‘பாத்துட்டியா?’ என்று கேட்டால் அது அபத்தம்; ‘எத்தனை தடவை பாத்தீங்க’ என்று கேட்பதுதான் பொருத்தமாக இருக்கும். அப்படிக் கேட்கக் கூடிய செல்லுலாய்ட் காவிய நாயகன் தான் ‘நாயகன்!’

‘இவர் படிச்ச பையன். புதுசா யோசிக்கிறாரு. நல்லதா பண்ணனும்னு ஆசைப்படுறாரு. இவருக்கு ஒரு படம் கொடுங்க’ என்று மணிரத்னத்தின் ஆரம்பகாலங்களில் அவரின் திறமையை, பி.ஆர்.ஓ. போல் இருந்து சொன்னார் அவர். கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த மணிரத்னத்துக்குக் கிடைத்த வாய்ப்புதான் ‘பகல் நிலவு’ திரைப்படம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான  இந்தப் படத்துக்குச் சான்ஸ் வாங்கித்தந்தவர் இசைஞானி இளையராஜா! .

’டிரெண்ட் செட்டர்’ என்பது திரையுலகில் ரொம்பவே பிரபலம். தத்தக்காபித்தக்கா என சினிமா, பயணித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு பாதையைப் போட்டுத் தருவதற்கு யாரேனும் வருவார்கள். அப்படியானவர்களில் பட்டியலில் உள்ளவர்தான் மணிரத்னம். அப்படியான ஆகச்சிறந்த படம் தான் ‘நாயகன்! இதையடுத்து வருகிற படங்கள், இந்தப் படத்தின் தாக்கத்திலேயே எடுக்கப்படும்.

படத்தின் கதை, கதை சொல்லுகிற பாணி, வசன உத்தி, காட்சிகளின் நேர்த்தி, ஒளிப்பதிவின் வெளிச்சப் பாய், இயக்கத்தின் ஆளுமை என ஏதேனும் ஒரு விஷயத்தை அல்லது மொத்தமான விஷயத்தை அடிதொட்டு வரிசையாக இதேமாதிரி படங்களைப் பண்ணுவார்கள். எந்த இயக்குநரிடம் உதவி இயக்குநராக இருந்து வந்தாலும் அவர்கள் ‘டிரெண்ட் செட்டர்’ படத்தை இயக்கிய இயக்குநரின் பாணியில் படமெடுப்பார்கள். அப்படியொரு தாக்கத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படுத்திய டைரக்டர்கள் உண்டு. படங்கள் உண்டு. இதில் நாயகன் தாக்கம் என்பது இன்னும் ஏழெட்டு தலைமுறைக்குமானது!

’பல்லவி அனு பல்லவி’யில் இருந்து தொடங்கியது மணிரத்னத்தின் பயணம். ஆரம்ப கால அனில்கபூருக்கு இதுவொரு ஜாக்பாட் படம். அடுத்து முரளி, சத்யராஜைக் கொண்டு ‘பகல் நிலவு’ பண்ணினார். மோகன், அம்பிகா, ராதாவைக் கொண்டு ‘இதயக்கோயில்’ கொடுத்தார்.மோகன், ரேவதியை வைத்து ‘மெளன ராகம்’ ஹிட் கொடுத்தார்.

ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு விதமாக எடுத்துக்கொண்டிருந்தவருக்கு வந்ததுதான் ‘நாயகன்’ வாய்ப்பு. தரமான படங்களை எடுக்கும் நிறுவனம் என்று பேரெடுத்த முக்தா பிலிம்ஸ், மணிரத்னத்தை இயக்குநராகக்கொண்டு படமெடுக்க முன்வந்தது. பம்பாய் வரதராஜ முதலியார் எனும் மனிதரின் வாழ்க்கையைக் கருவாக, இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு, கதை ஒன்றை உருவாக்கினார். கமல் நடித்தால் நன்றாக இருக்குமே என்று சிந்தித்தார். கமலும் சம்மதித்தார்.

கமலுக்கு, ‘நாயகன்’ அநேகமாக இன்னொரு பரீட்சை. முயற்சி. முயற்சிப்பதிலும் தன்னைத்தானே பரீட்சித்துப் பார்ப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட கமல், ‘நாயகன்’ வேலுநாயக்கராகவே உருமாறினார். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு. லெனின் – வி.டி.விஜயனின் எடிட்டிங். இளையராஜாவின் இசை. எழுத்தாளர் பாலகுமாரன் முதன்முதலாக திரைப்படத்துக்கு வசனம் எழுதினார் என்பதும் ‘நாயகன்’ மீதான உருவாக்கத்துக்கு இன்னும் உயிரூட்டியது.

மக்களுக்கு ‘காட்ஃபாதர்’. அரசாங்கத்துக்கு எதிரி. இதுதான் ஒன்லைன். ‘நாலு பேருக்கு உதவும்னா எதுவுமே தப்பில்ல’ என்ற வார்த்தையை வாழ்க்கையாக்கிக்கொண்ட வேலு என்ற இளைஞனின் வாழ்வியலைச் சொன்னதுதான் ‘நாயகன்’.

தூத்துக்குடி. யூனியன் லீடர் அப்பா. போலீஸ் சுட்டுக்கொல்ல, அந்தப் போலீஸை கொன்றுவிட்டு, பம்பாய்க்கு (மும்பை) ஓடிவருகிற பத்து வயதுச் சிறுவன் வேலு, இஸ்லாமியப் பெரியவரிடம் அடைக்கலமாகிறான். செல்வம் என்பவன் நண்பனாகிறான். கொஞ்சம் கொஞ்சமாக, ‘இல்லீகல்’ விஷயங்களுக்குள் இறங்குகிறான். அந்த இஸ்லாமிய ‘வாப்பா’தான் சொல்கிறார் ‘நாலு பேருக்கு உதவும்னா எதுவுமே தப்பில்ல வேலு’ என்று! இதுதான் வேலுவுக்கு வேதவாக்காகிறது. பிறகு படம் பார்க்கிற நமக்கு வேலுவாக்காகவே ஆகிப்போனது.

ஏரியா மக்களையும் இஸ்லாமியப் பெரியவரையும் துன்புறுத்திய, ’வாப்பா’வைக் கொன்ற போலீஸ்காரரைக் கொன்று போடுகிறான் வேலு. அடுத்து மக்கள் மனதில் இடம்பிடிக்கிறான். விபச்சார விடுதியில் பார்க்கிற பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்னின் மீது ஏற்படுகிற கரிசனம், காதலாகிறது. திருமணம் செய்துகொள்கிறான். வேலு எனும் இளைஞன், மும்பை தாராவி பகுதியில் மெல்ல மெல்ல நாயகனாகிறான். வேலு… வேலு நாயக்கராகிறார்.

அந்த கெட்ட போலீஸ்காரரின் மகன் மனநிலை பாதிக்கப்பட்டவன். அவனுக்கும் அந்தக் குடும்பத்துக்கும் ஆதரவாக இருக்கிறார் வேலு நாயக்கர். இந்தத் தொழிலில் இருக்கும் பகையால், மனைவியை இழக்கிறார். மகனையும் மகளையும் சென்னைக்குப் படிக்க அனுப்புகிறார். வளர்ந்ததும் வருகிறார்கள்.அப்பாவின் நடவடிக்கைகள், செயல்கள் மகளுக்குப் பிடிக்கவில்லை.  அப்பாவின் தொழிலுக்குள் மகனும் நுழைகிறான். உயிரிழக்கிறான். நொந்துபோன மகள், அப்பாவை விட்டு எங்கோ சென்றுவிடுகிறாள்.

வேலு நாயக்கர் என்பவரின் வாழ்க்கை, இப்படியாக மக்களுக்காகவே போய்க்கொண்டிருக்கிறது. ஊருக்கு புதிதாக வரும் போலீஸ் அதிகாரி, நாயக்கரின் ஆட்களை ஓட ஓட விரட்டுகிறார். கைது செய்கிறார். அவரின் வாகனங்களைப் பறிமுதல் செய்கிறார். இடங்களுக்கு சீல் வைக்கிறார். நண்பன் செல்வத்தைப் போலீஸ் பிடித்துவிட, ஆவேசமாகிறார். அதிகாரியின் வீட்டுக்குப் போய்ப் பார்த்தால்…அங்கே மகள். போலீஸ் அதிகாரியின் மனைவியாக! அதிர்ந்து போகிறார் வேலு நாயக்கர். .

இந்த நிலையில், அப்ரூவர், வேலு நாயக்கருக்கு அரெஸ்ட் வாரண்ட் கொடுக்கப்படுகிறது. ஊரே கொந்தளிக்கிறது. நாயக்கரைக் காப்பாற்ற, தீக்குளிக்கிற பெண்களும் அரசு வாகனங்களைச் சூறையாடுகிற இளைஞர்களும் ஆவேசமாகிறார்கள். ‘இந்தக் கிழவனுக்காக இவ்ளோ பேர்…’ என்று மனம் நொந்து, கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்கிறார். சரண்டராகிறார். இந்தசமயத்தில்தான் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறவனுக்கு அப்பாவைக் கொன்றது வேலு நாயக்கர் என்பது தெரியவருகிறது.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார் வேலு நாயக்கர். போதிய சாட்சியங்கள் இல்லையென்று விடுதலையாகிறார். ஊரே மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது; ஆரவாரிக்கிறது; ஆர்ப்பரிக்கிறது. வேலு நாயக்கர் கோர்ட்டில் இருந்து வருகிறார். அந்த மனநிலை பாதிக்கப்பட்டவன், அப்பாவின் போலீஸ் உடையைப் போட்டுக்கொண்டு, வேலு நாய்க்கரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்கிறான். ‘நாலு பேருக்கு உதவும்னா எதுவும் தப்பில்ல’ என்று வாழ்ந்த வேலு நாயக்கர்… ’பட்டயம் எடுத்தவன் பட்டயத்தாலே வீழ்வான்’ எனும் சொல்லுக்கு ஏற்ப, அதாவது ‘கத்தியை எடுத்தவன் கத்தியாலேயே சாவான்’ என்பது போல, இறந்துபோகிறார்.

‘காட்சிப்படுத்துதல்’ என்றொரு அழகான வார்த்தை சொல்லப்படுவது உண்டு. அதுவும் ஒரு சினிமாவுக்குக் காட்சிப்படுத்துதல் என்பதுதான் மிக மிக முக்கியம். அப்படியான காட்சிப் படுத்துதலும் திரைக்கதை விரிவாக்கமும்தான் ’நாயகன்’ படத்தை, சாதாரணப் படத்தில் இருந்து பிரமாண்டமான, கவிமயமான, ஆகச்சிறந்த கதைச் சொல்லிப் படம் என்று எல்லோருக்குமாக உணர்த்தியது.

இந்தப் படத்துக்கு முன்பு வரை, மீசை இல்லாத கமலை நாம் கற்பனை கூட செய்ததில்லை. சொல்லப்போனால், கமலின் மீசைச் செதுக்கலுக்குள் சிக்கிக்கொண்ட பெண்கள், தங்கள் வீடுகளில், பீரோக்களில், சுவர்களில், கமலின் விதம்விதமான புகைப்படங்களை ஒட்டி வைத்திருப்பார்கள். ஆக, ’நாயகன்’ படத்தில் கழுக்மொழுக்கென, முழுக்க ஸேவ் செய்து, மீசை இல்லாமல் வந்த கமல் புதுசுதான். ஒவ்வொரு காலகட்டத்துக்கு தக்கபடி அவரின் தோற்றமும் நடை பாவனைகளும் படத்தில் மாறிக்கொண்டே இருக்கும். உச்சந்தலையின் நடுவே வழுக்கையைக் கூட காட்டியிருப்பார் கமல்.

அறுபதுகளில் நடக்கிற கதைக்கு ஏற்ப, பஃப் வைத்த ஜாக்கெட், ரெட்டை ஜடைப் பின்னல், சீட்டிப் பாவாடை என சரண்யாவின் ஆடைகளிலும் மற்ற கதாபாத்திரங்களிலும் வீடு, தொலைபேசி, கோடுபோட்ட கோட்டுசூட் என நேர்த்தி காட்டியிருப்பார் மணிரத்னம். முக்கியமாக, உணர்வுகளின் ஒரு அங்குலத்தைக் கூட விட்டுவிடாமல், மிக ஸ்டைலாகவும் நேர்மையாகவும் நமக்கு உணர்த்தியிருப்பார் இயக்குநர்.

விபச்சார விடுதியில், கமலுக்கு நேரே கேமிரா இருக்கும். பின்னே கண்ணாடி இருக்கும். அந்தக் கண்ணாடியில் சரண்யா தெரிவார். சாலையில் சரண்யா நடப்பார். கமல் பின் தொடருவார். நூற்றுக்கணக்கான புறாக்கள் பறக்கும். கவிதை மாதிரி இருக்கும் காட்சிகளில் இதுவும் ஒன்று. ரிக்‌ஷாவில் கமலும் சரண்யாவும் செல்ல, ஸ்டைலாகப் பார்த்து, அருகில் நெருங்கி வர ஜாடை காட்டுவார்.

அதேபோல, இருவரும் நடப்பார்கள். கமல் கைக்குட்டையை மடித்து பாக்கெட்டுக்குள் வைப்பார். அந்த நேர்த்தியைக் கவனித்து ஒருபார்வையை, லேசாக ஓரக்கண்ணால் பார்ப்பார் சரண்யா. கமலின் குழந்தைகள், கமலைப் போல நடித்து விளையாடும். பின்னர், ‘உங்களை மாதிரி ஆகணும்னு சொல்லுதுங்க’ என்பார் சரண்யா. அடுத்து வருகிற வாழ்வின் நகர்தலுக்கு அந்தக் காட்சி, ’லீட்’ போலவும் இருக்கும். ஜாலியாகவும் இருக்கும். கூடவே, பார்க்கிற நமக்கு வலிக்கவும் செய்யும்.

கமல் – ஜனகராஜ் ஜோடி அப்போதெல்லாம் ரொம்பவே ஸ்பெஷல். இதிலும் அந்த ஜோடி அழகான நட்பின் அடர்த்தியைச் சொன்னது.  உப்பைக் கட்டி கடத்தல் பொருளை கடலில் போடுவது, விபச்சார விடுதிக்கு அழைத்துச் செல்வது, ‘இனிமே இப்படித்தான்’ என்பது, ‘பாருப்பா இந்தப் புள்ளைய’ என்பது, ‘நீ போ நாயக்கரே, உனக்கு ஒண்ணும் ஆவாது நாயக்கரே’ என்று வீராப்பு காட்டுவது என்று படம் முழுதும் ஜனகராஜ், ஜமாய்த்திருப்பார். எந்தக் கேரக்டராக இருந்தாலும், ஜனகராஜ்.. ஜமாய்த்துவிடுகிற ராஜ்தானே!

சரண்யாவுக்கு முதல் படம். இப்போது சொன்னால், ரசிகர்கள் நம்பவே மாட்டார்கள். அப்படியொரு தேர்ந்த நடிப்பை வழங்கியிருப்பார். நிழல்கள் ரவி, கார்த்திகா, டெல்லிகணேஷ், விஜயன், பிரதீப் சக்தி, நாசர், ஏ.ஆர்.எஸ், கிட்டி எனப் பலரும் அவரவர் வேலையை, கடமையாகச் செய்திருப்பார்கள்.

கமலும் ஏ.ஆர்.எஸ்.ஸும் பேசிக்கொள்கிற காட்சி. ’தெரியும்’, ‘தெரியும்’ என்று சொல்லும் இடத்தில் கேமிரா கோணம் அபாரம் பண்ணும். கமல், கார்த்திகா, ஜனகராஜ் மூவருக்குமான காட்சி! ‘அவங்கள நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன்’ என்று கமல் சொல்லும் இடத்தில் கேமிராவும் நடிக்கும்.

அங்கே நடக்கிற புறாவையும் நடிக்கவைத்திருப்பார் மணிரத்னம்.  ’நாயக்கரே’ என்று நிழல்கள் ரவியை கமல் அழைக்கும் காட்சியின் கோணம், ‘நீலாவோட அஸ்தி கரையறதுக்குள்ளே ரெட்டி குடும்பத்துல ஒரு ஆம்பள கூட உயிரோட இருக்கக் கூடாது’ என்று சொன்னதும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு லோகெஷனில், ஒவ்வொரு விதமாகக் கொல்வது, ‘எனக்கு இந்தி தெரியும்’ என்று ஆரம்பித்து கடைசி வரை கமலுக்கு நெருக்கமாக இருக்கும் ஐயர் கேரக்டர் டெல்லி கணேஷ் என்று ‘நாயகன்’ படத்தின் அத்தனை கேரக்டர்களும் பிரம்மாண்டத் தூண்களாக, தாங்குகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் குழந்தையைசேர்த்துவிட்டு, டெல்லி கணேஷும் கமலும் பேசிக்கொள்ளும் இடத்தில் இருவரின் நடிப்பும் உயரம் தொட்டிருக்கும். ‘அஞ்சு வாங்கறோம்’ என்று ஆம்புலன்ஸ் குறித்துப் பேசும் காட்சியும் வசனமும் நடிப்பும் அவ்வளவு யதார்த்தமாக கட்டமைக்கப்பட்டிருக்கும்!

ஒரு காட்சிக்கு, காட்சியின் கனத்தை ரசிகனுக்குக் கடத்துவதற்கு எப்படி ஷாட் வைக்க வேண்டும் என்று படம் முழுக்கவே பாடம் எடுத்திருப்பார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். ஒவ்வொரு காலகட்டத்தையும் உணர்த்த கோடு போட்ட கோட்டுசூட்டு, அம்பாசிடர் கார் என்றெல்லாம் காட்டி, இறுதியில் மாருதி கார் வரைக்கும் காலகட்டத்தைச் சொல்லி, ஒரு பீரியடு காலப் படத்தை, ஒரு மனிதரின் வாழ்க்கையுடன் அழகாக, உறுத்தாமல் செயற்கையே இல்லாமல் படைத்திருப்பார் மணிரத்னம்.

இரண்டரை மணி நேரமும் படம் நெடுக வந்து நம் மனதை ஆக்கிரமித்துவிடுகிற முக்கியமானவர் இசைஞானி இளையராஜா. அவரின் பின்னணி இசை, மற்றுமொரு ராஜ சரித்திரம். படம் போட்ட கால்மணி நேரத்தில், ‘தென்பாண்டிச் சீமையிலே’ என்று ஆரம்பிக்கும் போதே, அந்தப் பையன் வேலுவுடன் நம்மையெல்லாம் இரண்டறக் கலக்கச் செய்துவிடுவார் இளையராஜா. படம் முழுக்க ஆங்காங்கே வருகிற இசை, நம்மைக் கலங்கடித்துவிடும்.

‘நான் சிரித்தால் தீபாவளி’ அப்படியே அறுபதுகளின் ஸ்டைல் பாடல். ‘நீயொரு காதல் சங்கீதம்’ காதல் ப்ளஸ் கவிதை. காட்சியையும்  கவிதைபோல் தீட்டியிருப்பார்கள். அதிலும் மழைக்கு கதவு திறந்துகொண்டு வருகிற புறாக்கள் கொள்ளை அழகு. பாடலுக்குள் ‘என்னை விட்டுட்டு போயிருவியா’ என்று கேட்பதும் தாலியை எடுத்து ஒற்றிக்கொள்வதும் அழுவதும் அவளை தேற்றுவதும் என்று இருக்கும்.

அடுத்து, இங்கேதான் வந்து விழுந்து கிடந்தேன் என்று சொல்ல, அப்போ இந்த அளவுக்கு உயரமா இருப்பீங்களா என்று கேட்பதும் அவர் சரி செய்து விவரிப்பதும் பாடலுக்குள் வரும் மெளனக் காட்சிகள். வசனங்களே இல்லாமல் இருக்கும். பாடலுக்குள் வருகிற காட்சிகள் இவை. அதாவது, இரண்டுபேரும் சேர்ந்த பிறகு, தன்னைப் பற்றி, தன் கடந்த காலம் குறித்து, கமல் விளக்குவது போலவும் சரண்யா கேட்பது போலவுமாக அமைந்திருப்பதெல்லம், நம் சினிமாவுக்குப் புத்தம்புது காப்பிதான்!

‘நிலா அது வானத்து மேலே’ ஆரம்ப இசையும் பாடலும் குதூகலப்படுத்திவிடும். ’அந்தி மழை மேகம்’ பாடலின் கொண்டாட்டம் நமக்குள்ளும் தொற்றிக்கொள்ளும். முக்கியமான இடங்களில் ஒவ்வொரு விதமாக உருமாறிக்கொண்டே வருகிற ‘தென்பாண்டிச் சீமையிலே’ பாடல் இன்றைக்கும் எல்லோருக்குமான விருப்பப் பாடல். கார்த்திக் சுப்புராஜின் ‘டோரத்தி’ இளையராஜா இசையமைத்த 1540வது படமாம்! ‘நாயகன்’ திரைப்படம் இளையராஜாவுக்கு  400வது படம்.

படத்தில் வருகிற பாலகுமாரனின் வசனங்கள், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய டிரெண்டாகவே மாறிப்போனது. ‘நாலு பேருக்கு உதவும்னா எதுவுமே தப்பில்ல’, ‘இது பயமில்லீங்க, பெருமை’, ‘நான் அடிச்சா நீ செத்துருவே’, ‘இனிமே இப்படித்தான்’, ‘நான் பாத்துக்கறேன் நான் பாத்துக்கறேன்’, ‘அவங்கள நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்’, ‘நமஸ்தே, மேரா பாவா மர்கயா’, ‘நாளைக்கு கணக்கு பரிச்சை.

ஒரு ஒருமணிக்கு விட்டீங்கன்னாக் கூட போதும். எஸ்.எல்.சி… தாதாபாய் நெளரோஜி ஸ்கூல்’, ‘பயமா இருக்கு… அழுதுருவேனோன்னு பயமா இருக்கு’, ‘ஏழைங்க உசுருக்கு அவ்ளோதான் மதிப்பு’, ‘ஐயரே, அஞ்சு வாங்கறோம், தாராவிலதான் நிறுத்துறோம்’, ‘பணத்தை வச்சுட்டு சரக்கை எடுத்துக்கோ’, ‘யாரு… யாரு போன்ல… யார் கூட பேசிட்டிருந்தே…’, ‘நீங்க நல்லவரா கெட்டவரா?’ என்று படம் முழுக்க தன் வசனங்களால் இன்னும் கேரக்டர்களுக்கு உயிரூட்டியிருப்பார் எழுத்தாளர் பாலகுமாரன்.

‘நாயகன்’ படத்துக்கு முன், பின் என்று தமிழ் சினிமாவின் தொழில்நுட்பத்தையும் மேக்கிங் ஸ்டைலையும் பார்க்கவேண்டும். அப்படியொரு உலகத்தரம் வாய்ந்த படமாக அமைந்தது. இந்தியாவின் தலைசிறந்த நூறு படங்கள் பட்டியலில், ‘நாயகன்’ படமும் உண்டு.

1987ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான ‘நாயகன்’ திருச்சி கலையரங்கம் தியேட்டரில் வெளியானது. அப்போதெல்லாம் ‘இன்று முதல் ரிசர்வ் செய்யப்படுகிறது’ என்று பேப்பரில் வரும் விளம்பரத்தை காலையில் எழுந்ததும் முதல் ஆளாக மலையாளத்தார் டீக்கடைக்குச் சென்று பார்ப்பது வழக்கம். அந்த வாசக அறிவிப்பு வந்த ரெண்டாவது மணிநேரம், தியேட்டர் கியூவில் ‘விஷ்க்’ என்று விட்டலாச்சார்யா படத்தில் பேய் வந்து நிற்பது போல், நின்றிருப்போம்.

அப்படி ‘க்யூ’வில் நின்று கொஞ்சம் கொஞ்சமாக ‘கவுண்ட்டர்’ நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும்போது, அத்தனை சாமிகளின் பெயர்களும் அடிமனசில் உச்சரித்தபடியே இருப்போம். ‘கவுண்ட்டர்’ நெருங்கி, கையை நீட்டினேன். ‘முத நாள் டிக்கெட் முடிஞ்சிருச்சு தம்பி. அடுத்த நாள், அதுவும் ஈவ்னிங் ஷோவுக்குதான் இருக்கு’ என்று டிக்கெட் கொடுக்கும் அண்ணன் சொன்னபோது, பாவம்… அவருக்கு நான் கொடுத்த சாபமெல்லாம் அவர் இதுவரை எவரிடமும் வாங்கியிருக்கமாட்டார்.

‘என்ன… தரட்டுமா?’ என்று அவர் கேட்க, ‘உள்ளதும் போச்சுடா’ என்றாகிவிடப் போகிறது என்று பயந்து, தீபாவளிக்கு அடுத்தநாள் மாலைக் காட்சிக்கான டிக்கெட்டுகளை வாங்கிவிட்டேன். ஆனால், தடக்கென உதித்தது அட்டகாச யோசனை.

திருச்சியில் வரும் பேப்பர் விளம்பரத்தில், ‘திருச்சி கலையரங்கம், தஞ்சாவூர் விஜயா, கும்பகோணம் விஜயா, மாயவரம் விஜயா’ என்று விளம்பரம் பார்த்தது நினைவுக்கு வந்தது. திருச்சியில் இருந்து தஞ்சைக்கு ஒருமணி நேரப்பயணம். ரயில் டிக்கெட் அப்போது ஆறு ரூபாயோ அஞ்சு ரூபாயோ… நினைவில் இல்லை. ஆக அங்கே சென்று தீபாவளியன்று முதல் நாள், முதல் ஷோவுக்கு தஞ்சாவூர் விஜயா தியேட்டரில் டிக்கெட் வாங்கியாச்சு.

தீபாவளித்திருநாளன்று, திருச்சியில் காலை ஐந்து மணிக்கு கிளம்பி, ஆறே முக்காலுக்கு தியேட்டர் சென்று, ஏழரைக்கு படம் போட்டார்கள். நாங்கள் போட்ட விசிலும் கைத்தட்டலும் இன்றைக்கும் ‘ரத்தமும் சதையுமான சினிமா வெறியன்’ என்று உள்ளே பறைசாற்றிக்கொண்டே இருக்கிறது.

பிறகு மறுநாள் திருச்சி கலையரங்கம். அப்போது காரைக்குடி அழகப்பாவில் படித்துக்கொண்டிருந்தேன். காரைக்குடியில் ராமவிலாஸ் என்றொரு தியேட்டர். எனக்கு அது ராம்ஜி விலாஸ்தான். அந்த தியேட்டரில் நான் பார்த்த படங்களின் எண்ணிக்கை, தினசரி காலண்டர் ஷீட்டை விட அதிகம். படத்தின் ஐம்பாதவது நாள் விழா. கமலும் மணிரத்னமும் தியேட்டருக்கு வருவதாக அறிவிப்பு. அந்த ஷோவுக்கு டிக்கெட் எடுத்து உள்ளே போனது… பதினேழாவது முறை! ஐம்பதாவது 17 முறை பார்த்தேன் அந்தப் படத்தை! செம கூட்டம். ‘கமல் எங்கே?’ என்று தேடினோம்.

‘அதோடா… அதோடா…’ என்று கூட்டம் கைகாட்டிய இடத்தைப் பார்த்தால், வெள்ளைத்திரைக்கு முன்னே வெள்ளைவெளேரென வந்து நின்றார் கமல். ‘என்னடா கமல், இப்படி இருக்காரு?’ என்று கேட்டுக்கொண்டோம். ‘கோயிலுக்கு நேர்த்திக்கடன்’ என்று யாரோ சொன்னார்கள்.’கமலுக்கு கோயில், சாமி, பக்தில எல்லாம் நம்பிக்கை இல்லீங்க’ என்று சொன்னேன். அப்படிச் சொல்லும்போது, ‘கமலைப் பத்தி உங்களுக்கு என்னடா தெரியும். எனக்கு எவ்ளோ தெரியும் தெரியுமா?’ என்கிற கித்தாப்பு இருந்தது எனக்குள்! மொட்டைத்தலையில் லேசாக வளர்ந்த முடி, கன்னத்தில் கருகருவென தாடி. மூன்று மாதம் கழித்துதான் ‘மாப்ளே… ‘சத்யா’னு ஒருபடம் வருதுல்ல. அதுல கமல் கெட்டப்டா இது’ என்று திருச்சி நண்பனுக்கு கடிதம் எழுதி, உலக ரகசியத்தை அம்பலப்படுத்தினேன்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு, முகநூலில் எனக்கு ஒரு மெசேஜ். ‘அங்கிள், உங்கள் நம்பர் கிடைக்குமா’ என்று! நானும் கொடுத்தேன். அந்தப் பையன் என்னிடம் லைனுக்கு வந்தான். ‘திருச்சி பொன்மலைல நார்த் டி 43ல் ரெண்டுல குடியிருந்தீங்களே…’ என்று என் ஜாதகத்தையே சொன்னான். எங்கள் வீட்டுக்கு அடுத்த வீடு, மஞ்சு அக்கா வீடு. அந்த அக்காவின் மகனாம் இந்தப் பையன்.

இப்பொது திருச்சியில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறானாம். அவனுடைய குழந்தைகள் பெயரையெல்லாம் சொன்னான். ‘நாயகன்’ படம் டிவில போட்டா உங்களைத்தான் அம்மா சொல்லிகிட்டே இருப்பாங்க அங்கிள்’ என்றான். அந்தப் படம் வந்தபோது இந்தப் பையனுக்கு ரெண்டுவயசு.அவனைத் தூக்கிக் கொஞ்சுவேன். ஊட்டிவிடுவேன். தூளியாட்டி, பாட்டுப்பாடி தூங்கவைப்பேன்.

‘தென்பாண்டிச்சீமையிலே பாட்டுப்பாடி, எம்பையனை தூங்கவைப்பியே… அதையெல்லாம் அவன்கிட்டச் சொல்லிக்கிட்டே இருப்பேன். அவன் தான், உன்னை எதுலயோ பாத்துட்டு, நம்பரும் வாங்கிட்டு, ‘ராம்ஜி அங்கிள்கிட்ட பேசி, தேங்க்ஸ் சொல்லப்போறேன்’னு சொன்னான். நல்லாருக்கியா கண்ணு’ என்று மஞ்சு அக்கா சொல்லச் சொல்ல… கருப்பு வெள்ளைக்காட்சிகளாக, மனதில் அந்த ஏரியா மொத்தத்தையும் ‘சாட் ஜிபிடி’யில் கேட்காமலேயே கொண்டு வந்து நிறுத்தியது.

எப்போது டிவியில் போட்டாலும் பார்க்கலாம் என்று எல்லோரும் நினைக்கிற படங்களில், ‘நாயகன்’ எப்போதுமே தனி நாயகன் தான்!  



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version