விண்வெளி ஆர்வலர்களுக்கு நாளை ஒரு சிறப்பு நாள். சூரிய குடும்பத்தின் வளைய கிரகமான சனி, நாளை அக்-4 ஆம் தேதி ‘எதிர்நிலை’ (Opposition) என்ற வானியல் நிகழ்வை சந்திக்கிறது. இதன் காரணமாக சனி வழக்கத்தைவிட பிரகாசமாகவும், இரவு முழுவதும் தெளிவாகவும் வானில் காட்சியளிக்கும். NASA-வின் வானியல் தகவலின்படி, இந்த ஆண்டில் சனியைப் பார்ப்பதற்கான சிறந்த வாய்ப்புகளில் அக்டோபர் 4-ம் தேதியும் ஒன்று.
சூரியனுக்கு எதிரே சனி… நடுவில் பூமி!
சூரியன், பூமி, சனி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது இந்த நிகழ்வு ஏற்படுகிறது. அதாவது, சூரியனுக்கும் சனிக்கும் இடையில் பூமி இருக்கும். பூமியில் இருந்து பார்க்கும்போது சனி, சூரியனுக்கு நேர் எதிர் திசையில் இருப்பதால் இதற்கு ‘எதிர்நிலை’ என்று பெயர். இந்த நிலையில் சனி சூரிய அஸ்தமன நேரத்தில் கிழக்கில் உதித்து, இரவு முழுவதும் வானில் பயணித்து, சூரிய உதய நேரத்தில் மேற்கில் மறையும்.
சுமார் 126 கோடி கி.மீ. தொலைவில் சனி
அக்டோபர் 4-ம் தேதி எதிர்நிலை ஏற்படும் நேரத்தில், சனி பூமியிலிருந்து சுமார் 126 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். எதிர்நிலையில் சனி பூமிக்கு ஒப்பீட்டளவில் அருகில் இருப்பதால், அதன் பிரகாசமும் அதிகமாக இருக்கும்.
இந்த நிகழ்வு இந்திய நேரப்படி மாலை சுமார் 5.30 மணியளவில் ஏற்படும் என வானியல் கணக்குகள் தெரிவிக்கின்றன. ஆனால், சனியைப் பார்ப்பதற்கு அந்த குறிப்பிட்ட நேரத்தையே காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சூரியன் மறைந்த பிறகு கிழக்கு வானில் சனியைத் தேடலாம்; அது இரவு முழுவதும் காட்சியளிக்கும்.
வெறும் கண்ணால் சனி தெரியுமா?
தெரியும்!
எதிர்நிலையில் சனி சுமார் 0.3 magnitude பிரகாசத்துடன் இருக்கும். எனவே, தெளிவான வானம் இருந்தால் தொலைநோக்கி இல்லாமலேயே சனியை ஒரு பிரகாசமான மஞ்சள் நிறப் புள்ளி போல பார்க்க முடியும்.
ஆனால், சனியின் புகழ்பெற்ற வளையங்களை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. சிறிய தொலைநோக்கியைக் கொண்டு பார்த்தாலே அதன் வளையங்களை ரசிக்க முடியும். நல்ல கருவி இருந்தால் சனியின் சில துணைக்கோள்களையும் காண வாய்ப்பு உள்ளது.
சனியை எங்கே, எப்படி பார்க்கலாம்?
நாளை மாலை சூரியன் மறைந்த பிறகு கிழக்கு வானத்தை கவனிக்க வேண்டும்.
-
நகரத்தின் ஒளி குறைவான இடத்தைத் தேர்வு செய்யுங்கள்.
-
திறந்த வெளி அல்லது மொட்டை மாடியில் இருந்து பார்க்கலாம்.
-
முதலில் கிழக்கு வானில் பிரகாசமாகத் தெரியும், நட்சத்திரங்களைப் போல மின்னாமல் நிலையாக இருக்கும் புள்ளியைத் தேடலாம்.
-
அதுவே சனி என்பதை உறுதிப்படுத்த வானியல் செயலிகள் அல்லது நட்சத்திர வரைபடங்களைப் பயன்படுத்தலாம்.
-
சனியின் வளையங்களைப் பார்க்க தொலைநோக்கி பயன்படுத்த வேண்டும்.
தெளிவான வானம் இருந்தால் இந்தக் காட்சியை இரவு முழுவதும் ரசிக்க முடியும். NASA-வும் அக்டோபர் 4-ம் தேதி சனியைப் பார்ப்பதற்கான சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது.
ஏன் ஆண்டுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு?
பூமி சூரியனைச் சுற்றி ஒரு முறை வருவதற்கு சுமார் ஒரு ஆண்டு ஆகிறது. ஆனால், சனி சூரியனை ஒரு முறை சுற்றிவர சுமார் 29.5 ஆண்டுகள் ஆகின்றன. பூமி சனியை விட வேகமாக சூரியனைச் சுற்றுவதால், சுமார் ஒரு வருட இடைவெளியில் பூமி சூரியனுக்கும் சனிக்கும் இடையில் கடந்து செல்கிறது. அப்போது சனி ‘எதிர்நிலை’ என்ற நிலையில் காணப்படுகிறது.
