Home உலகம் ஸ்மித் மச்சாருக்கு உதவிய மருத்துவர் யார்? Flydubai விமானத்தில் ஏன் 4 Pilotகள்? வெளியான EXCLUSIVE...

ஸ்மித் மச்சாருக்கு உதவிய மருத்துவர் யார்? Flydubai விமானத்தில் ஏன் 4 Pilotகள்? வெளியான EXCLUSIVE தகவல்! – Kumudam

0


செப்டம்பர் 30-ம் தேதி, துபாயில் இருந்து டெல் அவிவ் நகருக்குப் புறப்பட்ட Flydubai நிறுவனத்தின் FZ1073 விமானத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் காக்பிட்டில் துணை விமானி ஒருவர் கேப்டனைத் தாக்கியதாகவும், விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றதாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து விமானம் திடீரென உயரத்தை இழக்கத் தொடங்கியது. விமானத்தில் சட்டவிரோதத் தலையீடு நடப்பதைக் குறிக்கும் சர்வதேச 7500 அவசரக் குறியீடு அனுப்பப்பட்டதால், விமானக் கடத்தல் குறித்த அச்சமும் எழுந்தது. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இஸ்ரேல் போர் விமானங்களும் தயார் நிலையில் அனுப்பப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், விமானத்தின் முன்பகுதியில் அமர்ந்திருந்த சில பயணிகள் காக்பிட்டை நோக்கிச் சென்றனர். அப்போது, விமானத்தில் கூடுதலாகப் பயணித்த இரண்டு விமானிகள் பின்புற இருக்கைகளில் அமர்ந்திருந்ததை ஒருவர் கவனித்துள்ளார்.

“அவர்களை எழுப்பி முன்பக்கம் அழைத்துச் சென்றேன்!”

சம்பவத்தின்போது உதவிய இஸ்ரேலியப் பயணி ஒருவர் தி ஜெருசலேம் போஸ்ட் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், விமானம் வேகமாகக் கீழே இறங்கிக்கொண்டிருந்ததால், பின்புறத்தில் அமர்ந்திருந்த கூடுதல் விமானிகளை எழுப்பி காக்பிட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அவர்களில் ஒருவர் காக்பிட்டுக்குச் சென்று விமானத்தின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டார். மற்றொருவர் ஆரம்பத்தில் அதிர்ச்சியில் உறைந்துபோனது போல இருந்ததாகவும் அந்தப் பயணி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, இஸ்ரேலியப் பயணிகள் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரை எதிர்கொண்டு கட்டுப்படுத்தினர். அவரைக் கட்டிப்போடுவதற்கு மொபைல் சார்ஜிங் கேபிள்களையும் பயன்படுத்தியதாகப் பயணி தெரிவித்துள்ளார். விமானத்தில் இருந்த இஸ்ரேலியப் பல் மருத்துவர், காயமடைந்த கேப்டனுக்கு முதலுதவி அளித்ததாகவும் கூறப்படுகிறது.

30 விநாடிகளில் 14,000 அடி சரிந்த விமானம்!

விமானத்தின் பயணத் தரவுகளின்படி, போயிங் 737 ரக விமானம் 30 விநாடிகளுக்குள் சுமார் 14,000 அடி உயரத்தை இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவசரச் சமிக்ஞை அனுப்பப்பட்டு, விமானம் சவுதி அரேபியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள தபுக் விமான நிலையத்துக்குத் திருப்பிவிடப்பட்டது. அங்கு விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் துணை விமானி விசாரணைக்காகக் காவலில் எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தின் காக்பிட்டில் மோதல் ஏற்பட்டதை Flydubai நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது. விமானத்தில் பயணித்த நிறுவனப் பணியாளர்கள் நிலைமையைக் கட்டுப்படுத்தி, விமானத்தை வேறு விமான நிலையத்துக்குத் திருப்பி, பாதுகாப்பாகத் தரையிறக்க உதவியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், விசாரணை முடிவடைவதற்கு முன்பாகத் தாக்குதலின் நோக்கம் குறித்து முடிவுக்கு வர வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் செல்லும் விமானங்களில் Flydubai-க்கு ஏன் முக்கியத்துவம்?

இந்தச் சம்பவம், இஸ்ரேலுக்கான விமானப் போக்குவரத்தில் Flydubai நிறுவனத்தின் பங்கையும் மீண்டும் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

2023 அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் பதற்றங்களால் பல சர்வதேச விமான நிறுவனங்கள் இஸ்ரேலுக்கான சேவைகளை இடைநிறுத்திய காலகட்டங்களிலும், Flydubai தொடர்ந்து விமானங்களை இயக்கிய நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்றொரு முக்கிய விமான நிறுவனமான Etihad-உம் சில காலகட்டங்களில் இஸ்ரேலுக்கான சேவையைத் தொடர்ந்தது.

பிராந்தியத்தில் வான்வழிப் பாதைகள் திடீரென மாற்றப்படும்போது, பயண நேரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், விமானிகளின் அனுமதிக்கப்பட்ட பணி நேர வரம்பை மீறாமல் இருக்க கூடுதல் விமானிகளை ஏற்பாடு செய்வது அவசியமாகிறது.

அப்படியான வழக்கமான பணித் திட்டமிடலின் காரணமாகவே FZ1073 விமானத்தில் நான்கு விமானிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விமானி ஒருவர் காயமடைந்து, மற்றொருவர் விமானத்தைக் கீழே கொண்டு செல்ல முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்த நேரத்தில், பயணிகள் பகுதியில் அமர்ந்திருந்த அந்த இரண்டு கூடுதல் விமானிகளின் இருப்பு மிக முக்கியமானதாக மாறியது.

முன்கூட்டிய பாதுகாப்பு எச்சரிக்கையால் அல்ல.. வழக்கமான பணி நேரத் திட்டமிடலால் விமானத்தில் இருந்த கூடுதல் விமானிகள், ஆபத்தான தருணத்தில் விமானத்தின் கட்டுப்பாட்டை மீட்க உதவியுள்ளனர். எனினும், தாக்குதலின் நோக்கம் என்ன என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version