மூன்று நாட்கள் நடைபெற்ற ராதே கல்யாண உற்சவம்
கிருஷ்ணகிரி மாவட்டம் : ஓசூரில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீ ராதாகிருஷ்ண திருக்கல்யாண மகோத்சவம் - பக்தர்கள் உற்சாகத்துடன் நடனமாடி மகிழ்ந்தனர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முனீஸ்வர் நகர் ரிங் ரோடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஜய விநாயகர் சத்சங்கம் திருக்கோயிலில் மூன்று நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, 15 ஆவர்த்திகளுடன் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. மாலையில் ஸ்ரீ முத்தாபாய் மகிலா பஜனை மண்டலி குழுவினரின் ஸ்ரீ லலிதாம்பாள் பஜனை பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர் மங்கள ஆவர்த்திகளுடன் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் தொடர்ந்தது. இதில் தோடாயமங்கலம், குருகீர்த்தனை, அஷ்டபதி, திவ்யநாமம் மற்றும் டோலோற்சவம் உள்ளிட்ட வைபவங்கள் அரங்கேறின.விழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீ ராதா கல்யாண மகோத்சவம் மூன்றாம் நாளான இன்று நடைபெற்றது. காலை உஞ்சவிருத்தி மற்றும் அஷ்டபதி பஜனைகளைத் தொடர்ந்து, வைஷ்ணவ சம்பிரதாயப்படி முத்துக்குத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற திருமாங்கல்ய பூஜையில், வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க, ஸ்ரீ கிருஷ்ணர் - ஸ்ரீ ராதைக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருக்கல்யாண வைபவத்தைக் காண திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், பக்தி பரவசத்தில் ஆனந்த நடனமாடி இறைவனை வழிபட்டனர்.
