back to top
12.1 C
London
Thursday, October 22, 2026
No menu items!
Homeசினிமாசில்லறை கொடுத்த கைகள் இன்று கோடிகளின் நாயகன்....ரஜினியின் வெற்றி ஃபார்முலா என்ன? - Kumudam

சில்லறை கொடுத்த கைகள் இன்று கோடிகளின் நாயகன்….ரஜினியின் வெற்றி ஃபார்முலா என்ன? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் பெயர் கொண்ட எளிய மராட்டியக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பேருந்து நடத்துநர், இன்று உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை ஆளும் சூப்பர் ஸ்டார் ரஜினியாக உருவெடுத்தது, தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு மாயாஜாலம். விவரிக்க முடியாத இவ்வெழுச்சிக்கும், பெயர் மாற்றத்திற்கும் பின்னால் இருப்பது வெறும் அதிர்ஷ்டம் மட்டுமல்ல, கடும் உழைப்பு, சுயபரிசோதனை, தமிழ்ச் சமூகத்தின் மீதான ஈர்ப்பு.

கர்நாடகம், பெங்களூரில் எளிய குடும்பத்தில் பிறந்த சிவாஜி ராவ், தனது குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைச் சமாளிக்கப் பல்வேறு சிறிய வேலைகளைச் செய்தார். தச்சு வேலை, சுமை தூக்கும் வேலை எனத் தொடர்ந்த அவரது வாழ்க்கை, இறுதியில் பெங்களூர் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக நிலைபெற்றது. பஸ்ஸில் டிக்கெட் வழங்கும்போது அவர் காட்டிய ஸ்டைலும், எழுப்பிய விசிலும் பயணிகளைப் பெரிதும் ஈர்த்தன. அப்போது அவரிடம் மேடை நாடகங்கள் மீதான ஆர்வம் துளிர்த்திருந்தது. மேடைகளில் அவர் வெளிப்படுத்திய பாத்திரப் படைப்புகளும், துடிப்பான நடிப்பும் நண்பர்களை வியக்கச் செய்தன.

பெங்களூர் நாடகக் கழகத்திலிருந்து தொடங்கியது அவரது கலைப் பயணம். நாடகத் துறைமீது பற்றுகொண்ட சிவாஜிராவ், திரைப்பட நடிகராக வேண்டும் என்ற லட்சியத்துடன் பூனா திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். இதற்கு ராஜ்கபூர் போன்ற நண்பர்களின் உதவி இருந்தது. அங்கு அவர் கற்றுக்கொண்ட நுட்பங்கள், கேமரா கோணங்கள், உணர்ச்சி வெளிப்பாடுகள் அவரது இயல்பான நடிப்புத் திறனைச் செப்பனிட்டன. அங்குதான் தமிழின் முதன்மை இயக்குநர்களில் ஒருவரான கே.பாலச்சந்தரின் பார்வை அவர்மீது விழுந்தது.

பாலச்சந்தர் புதிய முகங்களைத் தேடிக்கொண்டிருந்த காலம் அது. சிவாஜிராவை கண்ட பாலச்சந்தர், அவரிடம் ஈர்ப்பைக் கண்டறிந்தார். அவரின் கண்களில் இருந்த தீவிரமும், குரலில் இருந்த தனித்துவமும் பாலச்சந்தரை ஈர்த்தன. 1975ம் ஆண்டு வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் சிவாஜி ராவ். அந்தப் படத்தில், பாலச்சந்தர் தனது பழைய படத்தின் பாத்திரப் பெயரான ‘ரஜினிகாந்த் என்கிற பெயரை அவருக்குச் சூட்டினார். ரஜினிகாந்த் என்றால் அதிசய ஒளி அல்லது கடவுளின் ஒளி. சிவாஜி ராவ் என்ற சாதாரண மனிதன், வெள்ளித்திரையில் ஓர் ஒளிப்பிழம்பாகப் பிரகாசிக்கத் தொடங்கிய அந்தத் தருணம் வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்தது.

தொடக்க காலத்தில் ரஜினிகாந்த் எதிர்மறை வேடங்களிலேயே கவனம் செலுத்தினார். ‘மூன்று முடிச்சு’ படத்தில் அவர் வெளிப்படுத்திய வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களைப் பரவசப்படுத்தியது. வழக்கமான தமிழ் நாயகர்களின் நடிப்பிலிருந்து அவர் முற்றிலும் மாறுபட்டிருந்தார். இந்தத் தனித்துவம் அவருக்கு வெகு விரைவில் மக்கள் மத்தியில் தனி இடத்தைப் பெற்றுத் தந்தது. இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மற்றும் தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம். தேவர் ஃபிலிம்ஸ், சத்யா மூவீஸ், கலைப்புலி எஸ். தாணு போன்றோருடன் அவர் இணைந்த கமர்ஷியல் படங்கள் அவரை அசைக்க முடியாத உச்சத்திற்குக் கொண்டுசென்றன.

‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’, ‘தளபதி போன்ற படங்கள் அவரை நடிகன் என்பதைத் தாண்டி ஒரு கலாசார அடையாளமாக மாற்றின. இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணாவுடன் அவர் இணைந்த படங்கள் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இலக்கணத்தை மாற்றி எழுதின. ஸ்ரீ ராகவேந்திரா (ஆன்மிகம்), தளபதி (நட்பின் ஆழம்), கபாலி (சப்பால்டர்ன் டான்), காலா (மண்ணின் மைந்தன் போராட்டம்), ஜெயிலர் (மாஸ் கம்பேக்) எனத் தனது வயதுக்கும் காலத்திற்கும் ஏற்ப ரஜினி கலை உலகில் தன் இடத்தை உறுதி செய்தார். இந்தியத் திரையுலகின் 100 கோடி  கிளப்பில் தென்னிந்திய சினிமாவிலிருந்து முதலில் இணைந்தவரும் ரஜினி தான்.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான முத்து, ஜப்பானில் வசூல் சாதனை படைத்தது. ஜப்பானிய மொழியில் வெளியிடப்பட்ட இப்படம், தமிழ் சினிமா ஒன்றை உலகளாவிய சந்தையைக் கண்டடைய வழிவகுத்தது. தியேட்டர்களில் 100 நாட்களைத் தாண்டி பல சாதனைகளைப் படைத்த படம் பாட்ஷா. இது ரஜினியின் மாஸ் ஸ்டேட்டஸை இமாலய அளவில் உயர்த்தியது. ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி, உலகளவில் வசூல் வேட்டையாடி முந்தைய சாதனைகளைத் தகர்த்தது.

தொடர்ந்து வந்த எந்திரன், இந்திய சினிமா வரலாற்றில் அதிகமான பொருட்செலவில் எடுக்கப்பட்டு, பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளைத் தலைகீழாக்கியது. இப்போது காலத்தைக் கடந்த மகுடமாக ஜொலிக்கிறது ஜெயிலர். பல தசாப்தங்களைக் கடந்து, நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து ஜெயிலர் 2 அந்த ரெக்கார்டை முறியடிக்கும் பயணத்தில் இருக்கிறது. ரஜினியின் ‘வசூல் சக்கரவர்த்தி டைட்டில் மீண்டும் உறுதியாகியிருக்கிறது. ‘கலைஞர்களுக்கு வயது ஒரு தடையில்லை’ என்பதை நிரூபித்து, பாக்ஸ் ஆபீஸில் ரஜினியின் ஆதிக்கம் இப்போதும் தொடர்கிறது. ரஜினியின் லெகசி என்பது வசூல் கணக்குகளுடன் நின்றுவிடுவதில்லை.

கோடிக்கணக்கான ரசிகர்களைக் கட்டமைத்த அவரின் ரசிகர் மன்றங்கள், பல்வேறு சமூக நல உதவிகள் மற்றும் நற்பணி இயக்கங்களாக மாறித் தமிழ்ச் சமூகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நடிப்புக்கு இலக்கணம் வகுத்த சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர். காலத்திற்குப் பிறகு, சினிமா என்பது கதை சொல்லல் மட்டுமல்ல. அது ஒரு கொண்டாட்டம், வெறித்தனம் ஸ்டைல் என்பதை, தன் உடல்மொழி மூலமாகத் தமிழ் சினிமாவுக்குப் பரிசளித்தவர் ரஜினிகாந்த் திரையுலகின் உச்சம் தொட்டபோதிலும், தனது எளிய வேர்களை ரஜினி எப்போது மறந்ததில்லை.

திரைக்குப் பின்னால் அவர் காட்டிய எளிமை, தத்துவார்த்த தேடல், ஆன்மிகம் மீதான காதல் அவரது ஆளுமையை மேலும் மெருகூட்டின. புகழின் உச்சியிலும் தனது ஆரம்பகால நண்பர்களைக் கைவிடாத அவரது பண்பு, அவரது ஆளுமையை மெருகூட்டியது. எங்கு பார்த்தாலும் போலியான பரிபூரணத்தன்மை தாண்டவமாடும் காலமிது.

தங்களின் குறைகளை மறைத்து மனிதர்கள் வாழும் சூழலில், ரஜினி பொதுவெளியில் விக்குகளோ செயற்கை அலங்காரங்களோ இன்றி, தனது இயல்பான தோற்றத்தோடு எளிமையாக வலம்வருகிறார். ‘நான் நானாகவே இருக்கிறேன்’ என்ற அந்த வெளிப்படைத்தன்மை, ஜென்ஸி தலைமுறைக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஸ்டைல் என்பது தோற்றத்தில் அல்ல, அது ஆளுமையில் உள்ளது என்பதை தனது வாழ்வின் மூலம் நிரூபித்துக் காட்டியவர் ரஜினி.

இன்றைய இளைய தலைமுறை தங்களின் உடல் தோற்றம் குறித்த தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளிவரப் போராடிக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், உலகமே கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ஒருவர் தனது உடலின் இயற்கையான மாற்றங்களை எவ்விதத் தாழ்வுமின்றி ஏற்றுக்கொள்வது இளைஞர்களுக்கு மிகப்பெரிய உளவியல் பலத்தையும், தைரியத்தையும் தருகிறது. ரஜினி படத்திற்குப் படம் தனது வயதுக்கேற்ற வேடங்களையும், நரைத்த தாடி மற்றும் தோற்றத்தையும் திரையிலும்கூட தயக்கமின்றி ஏற்றுக்கொள்கிறார். தன் மீதான எந்தப் போலி முக மூடியையும் அவர் அணிவதில்லை.

தன்மீதான விமர்சனங்களைக்கூட தன் சொந்த நகைச்சுவை உணர்வோடு எதிர்கொள்ளும் பக்குவம் அவரிடம் உண்டு. தன் தோற்றத்தை யாராவது விமர்சிப்பார்கள் என்கிற தயக்கம் அவரிடம் இருந்ததில்லை. அந்த அச்சமின்மைதான் அவரை எக்காலத்திற்கும் இளமையாகவும் துடிப்பாகவும் வைத்திருக்கிறது.

வயது ஏறினாலும், தன்னம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும் இருந்தால் எப்போதுமே சூப்பர் ஸ்டாராக இருக்கலாம் என்பதை ரஜினி நிரூபித்துள்ளதால், இன்றைய இளைஞர்கள் தங்களின் அடையாளமாக அவரைக் கொண்டாடுகிறார்கள்.

ஒரு சூப்பர் ஸ்டாரின் கதை எங்கே தொடங்கியது? அது ஆடம்பரமான மாளிகைகளிலிருந்தோ, கலை உலகப் பாரம்பரியத்திலிருந்தோ தொடங்கவில்லை. ஒரு சாதாரணப் பேருந்தின் படியில், சில்லறை மாற்றும் தொழிலாளியின் விரல்களில், தன் நண்பனின் மீதான நம்பிக்கையில், வறுமையை வென்று மேலே வரத் துடிக்கும் ஒரு எளிய மனிதனின் அடிமன நெருப்பில் இருந்து தொடங்கியது. அந்த எளிய தொடக்கம்தான், ரஜினி என்கிற சூப்பர் ஸ்டாரை இன்றும் கோடிக்கணக்கான மக்களின் இதய சிம்மாசனத்தில் அமர வைத்திருக்கிறது!

(தலைவர்கள் வருவார்கள்…)



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here