back to top
17 C
London
Friday, October 9, 2026
No menu items!
Homeசினிமாஇசை இருந்தால் மரணமேது....ராஜாவின் ‘அமுதே தமிழே அழகிய மொழியே! - Kumudam

இசை இருந்தால் மரணமேது….ராஜாவின் ‘அமுதே தமிழே அழகிய மொழியே! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


படம் அவுட்டு; பாட்டு ஹிட்டு! – வி.ராம்ஜி

’கண்ணே மணியே… முத்தே பவளமே…’ என்று குழந்தைகளைச் சொல்லிக் கொஞ்சி மகிழ்கிறவர்கள்தான் நாம். அதேபோல், நம் தாய்மொழியான தமிழைக் கொஞ்சுகிறபோது, நாமே குழந்தையாகிவிடுகிறோம். மொழியின் குழந்தைகளான நம்மிடம் இருந்து, நம் தமிழ்மொழியைச் சீராட்டக் கிடைக்கிற தருணங்கள், சுகமானவை; அலாதியானவை.’தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாரதிதாசன் பாடிவைத்தார்.

‘தமிழ் தமிழ் தமிழ் தமிழ்…’ என்று சொல்லிக்கொண்டே இருந்தால், அமிழ்து அமிழ்து அமிழ்து என்று சொல்லும். தமிழின் அழகில் இதுவும் ஒன்று என்று என் தமிழ் வாத்தியார் சாலமன் தன்ராஜ், வகுப்புகளுக்கும் மாணவர்களுக்குமாக ஒரு பிணைப்பை ஏற்படுத்தினார். ‘அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே…’ பாடலும் அப்படியான பந்தம்தான்; பிணைப்புதான்!

கோயிலைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அங்கு சென்று வழிபட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். கோயிலின் ஓங்கி உயர்ந்த கோபுரங்களில் பறப்பதும் அமருவதுமாக இருக்கிற புறாக்களையும் பார்த்திருக்கிறோம்தானே! கடவுளுக்கும் பக்தனுக்கும் இருக்கிற உறவை விட, கோயில் புறாக்களும் கடவுளுக்குமான பந்தம், காற்றில் றெக்கைகட்டி, ஆயாசமாகப் பறக்கிற உன்மத்த உணர்வும் உறவுமாகத்தான் எனக்கு நினைப்பு வந்துகொண்டே இருக்கும். 1981ஆம் ஆண்டு, கே.விஜயன் இயக்கத்தில், சங்கர், சரிதா, வினுசக்கரவர்த்தி, ராஜா பகதூர் முதலானோர் நடிப்பில், ‘கோயில் புறா’ என்ற படம் வெளியானது.

கோபுரத்தில் இருந்து புறா, விருட்டெனப் பறந்து, எங்கோ சென்று விடுவது போல்தான், இந்தத் திரைப்படமும் தியேட்டரை விட்டு தடக்கென வந்தது. தடக்கெனப் பறந்தும் போனது. ஆனால், ‘கோயில் புறா’ திரைப்படம் எனக்குள் பதிந்ததற்கு படத்தின் காட்சிகள், சரிதாவின் நடிப்பு, வினுசக்கரவர்த்தியின் அழுத்தமான கதைக்கட்டமைப்பு முதலானவற்றையெல்லாம் கடந்து, இன்னொரு ஜீவபந்தம் இருந்தது. அந்த ஜீவபந்தத்தை ஏற்படுத்தியதுதான்.

இளையராஜாவின் இசை! எல்லாப் பாடல்களும் அமுது, தேன் என்ற வகையில் இருந்தாலும், ‘அமுதே தமிழே அழகிய மொழியே…’ எத்தனை முறை கேட்டாலும், பறவையின் சிறகுச் சிலிர்ப்பை, விரிப்பை மனசுக்குள் உண்டு பண்ணிவிடும்!

புலவர் புலமைப்பித்தனின் வரிகள், இந்தப் பாடலின் முதல் பலம். பி.சுசீலாம்மாவும் உமா ரமணனும் இணைந்து பாடிய அந்த இரண்டு குயில்களின் குரலும் கூடுதல் அழகு. சிலையின் கண் திறந்து, கற்சிலையைக் கடவுளாக்கும் சிற்பி போல பாடலைச் செதுக்கித் தந்திருப்பார் இசைஞானி இளையராஜா. சிறுவயதுப் பையனும் பெண்ணும் சேர்ந்து பாடுகிற பாடலாக அமைந்திருக்கும். ஆகவே இரண்டுபேருக்கும் பெண் குரல்கள். ’ஸ… ஸ… ரி… ரி… க… க… ம… ம…’ என்று ஒருவர் சொல்ல, இன்னொருவர் பின் தொடர… ‘அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே…’ என்று பாடும்போது, நம் உயிரின் முனை தொட்டு, அந்த இசை ஊடுருவுவதை, விகசித்து வியந்திருக்கிறேன்.

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே

சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுகம் பல தரும் தமிழ்ப் பா

சுவையொடு கவிதைகள் தா
சுவையொடு கவிதைகள் தா
 
தமிழே நாளும் நீ பாடு
தமிழே நாளும் நீ பாடு

தமிழே… நாளும் நீ பாடு… என்று அந்தப் பையன் பாடுவான். தமிழேநாளும் நீபாடு என்பாள். ‘அப்படி இல்லம்மா… தம்பி எவ்ளோ அழகாப் பாடுறாம் பாரு. தமிழே… நாளும் நீ பாடு என்று வினுச்சக்கரவர்த்தி சொல்லித் திருத்துவார். அதன்படி அந்தச் சிறுமி பாடுவார். அப்போது ஏதோ நம்மையும் திருத்துகிறார் எனும் உத்வேகம் புறப்பட்டு, நாமும் அந்த வரிகளை உரக்கப்பாடுவோம். அப்படித்தான் நான் இந்தப் பாடலுக்குள் பாடிப்பாடி மூழ்கிப்போனேன்.

நாகஸ்வர இசைதான் இந்தப் பாட்டின் உயிர் மூச்சு. தபேலாவும் நாகஸ்வரமும் பாடலுக்கு நடுவே பேசிக்கொள்ளும். அந்தப் பேச்சு, ‘தமிழ் அமுதுதானே…’, ‘ஆமாம்… என் உயிர்தான்’ என்பது போல் அவை தமிழை மெய்சிலிர்க்க, உச்சிமுகர்ந்து கொண்டாடுவது போலவே இருக்கும்.

தேனூறும் தேவாரம் இசைப்
பாட்டின் ஆதாரம்
தேனூறும் தேவாரம் இசைப்
பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே
தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே
நாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே

புலவர் புலமைப்பித்தனின் இந்த இலக்கிய வரிகளுக்குள் பித்துப்பிடித்துப் போய், அந்த மீசைக்கார கவிஞனின் முகத்தைப் பிறகுதான் தெரிந்து அறிந்து, உணர்ந்து சிலிர்த்தேன். பிறகான வரிகளும் வரிகளுக்குள் இருக்கிற அர்த்தங்களும் சொல்லுகிற சேதிகள் ஆயிரமாயிரம்!

பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலை பலவும் பயில வரும்
அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாய
தமிழே நாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் சுகம் பல தரும் தமிழ்ப் பா
தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு

பாட்டு தொடங்கி வளர்ந்து நிறைவுறும் வேளையில் அந்தச் சிறுமி சரிதாவாகி இருப்பாள். சிறுவன் நாகஸ்வர வித்வானாக ராஜா பகதூராக வளர்ந்திருப்பார். இந்த ராஜா பகதூர் யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டார்கள் என்று கொண்டாடப்படுகிற வரிசையில் பி.யு,சின்னப்பாவைத் தெரியும்தானே! அவருடைய மகன் தான் ராஜா பகதூர். முப்பதுகளின் இறுதியில், நாற்பதுகளில் மிகப்பெரிய உச்சநட்சத்திரங்களில், தியாகராஜ பாகவதர் போல், இவரும் சூப்பர்ஸ்டார்.

சொந்த ஊரான புதுக்கோட்டையில் முப்பத்தி ஐந்து வீடுகளுக்கு மேல் வாங்கினார். இதைக்கண்டு மிரண்டுபோன, புதுக்கோட்டை ராஜ வாரிசுகள், ‘போதும்பா… இதுக்கு மேல புதுக்கோட்டைல இடமோ வீடோ நீ வாங்கக்கூடாது’ என்று வாய்ச்சட்டமே போட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.  ஆனால் என்ன கொடுமை. குருவி சேர்ப்பதுபோல் வளர்த்த சொத்துகளையும் குருவி போல் அடைகாத்து வளர்த்த பையனையும் காப்பாற்ற முடியவில்லை காலம்! மிகப்பெரிய நடிகராக வலம் வராமல், ‘கரகாட்டக்காரன்’ படத்தில் சிறிய வேடத்திலும் இன்னபிற படங்களிலும் நடித்ததுடன் முடிந்துபோனது ராஜா பகதூரின் திரைப்பயணம்!

ஆனால், இந்தப் பாடல் இவற்றையெல்லாம் கடந்து, என்னை என்னவோ நிமிண்டிக்கொண்டே இருக்கும். உமா ரமணன் பற்றிய நினைவுகள் அலையலையாக வந்து நனைத்துக்கொண்டே இருக்கும். இளையராஜாவின் இசையும் பிற்பாடு அவரின் ஞானக்குரலிலும் காந்தக்குரலிலுமாக இந்தப் பாடலைக் கேட்கக் கேட்க, படத்தின் அந்தச் சிறுவனைப் போல சிறுமியைப் போல், அரை டிராயர் பருவத்துக்குள், உலாத்திவிட்டு வருவேன். இந்த வயதில் கேட்டாலும் அப்படித்தான்!

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. திருச்சி பொன்மலையில் மிகப்பெரிய ரயில்வே ஒர்க்‌ஷாப் உள்ளது. இங்குதான் அப்பா வேலை பார்த்தார். பின்னாளில் எனக்கும் வேலை கிடைத்தது. ‘பத்திரிகையில்தான் வேலை பார்ப்பேன், ரயில்வே வேலை வேண்டாம்’ என்று ‘எமக்குத் தொழில் கவிதை’ என்று பாரதியார் சொன்னது போல், எழுதிக்கொடுத்துவிட்டு, புறக்கணித்துவிட்டேன். இயக்குநர் கே.விஜயன், தொடக்கக் காலத்தில் பொன்மலை ரயில்வே ஒர்க்‌ஷாப்பில் வேலைபார்த்ததாகச் சொல்லுவார்கள்.

‘நார்த் டி, சவுத் டி, சி டைப், பி டைப், ஜி டைப் என்றெல்லாம் ரயில்வே குவார்ட்டர்ஸ்கள் உண்டு. நார்த் டி யில் எங்கள் வீடு. சவுத் டி ஏரியா கிரவுண்டில், ஒரு விழா. கே.விஜயனுக்குப் பாராட்டுவிழா. அது ‘கோயில் புறா’ படம் வெளியான சமயத்தில் நடக்கவேண்டும் என்பதும் அதற்கு இளையராஜா அங்கே வரவேண்டும் என்பதும் அந்த இசைராஜனை நானும் ஓரமாக நின்றேனும் பார்க்கவேண்டும் என்பதும் எழுதிவைக்கப்பட்ட விதி போல!

மேடையில் இளையராஜா. எதிரே கூட்டத்தில், ஆயிரத்தில் ஒருவனாக நான். வானிலிருந்து தேவர்கள் பூமாரி பொழிந்தது போல், மழை பொழியத் தொடங்கியது. ஆனால் இசைமழையில் நனைய வந்தவர்களுக்கு, இந்த மழை எம்மாத்திரம்?

இளையராஜா மைக் அருகில் வந்தார். பேசினார்.’நீ பேசினாலே இசைதான் ராசா…’ என்று எல்லோரும் ஆர்ப்பரித்து கரவொலி எழுப்பினார்கள். சொட்டச்சொட்ட மழையில் நனைந்துகொண்டிருந்த எங்களுக்காக, இசைமழையெனப் பாடினார். ‘அமுதே தமிழே அழகிய மொழியே…’ என்று அவர் பாடப்பாட… மழை எங்களைப்போலவே நின்று, நிதானித்துக் கேட்டு, இடியைக் கைத்தட்டலாக்கிக் கொடுத்தது.

அப்போது., ‘பொன்மலையில் மழை பொழிய… நீங்களெல்லாம் அதில் நனைய…’ என்று இசைஞானி எங்கள் ஊர்ப்பெயரையும் அந்தச் சூழலையும் இணைத்துப் பாட… இந்தப் பாடல் இன்னும் இன்னுமாக, மார்த்தாண்டம் தேனென இன்னும் ஒட்டிக்கொண்டு, தித்திக்கிறது.

‘அமுதே தமிழே அழகிய மொழியே…’ என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? கேட்டவர்கள் பாக்கியசாலிகள். இனிமேல்தான் கேட்கணும் என்கிறீர்களா? நீங்கள் எங்களைவிட பாக்கியசாலிகள்!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here