மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை மருத்துவம் பயிலும் மாணவர்கள் பயிற்சி மருத்துவர்களாகவும் பணிபுரிவது வழக்கம். புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகளிலோ, அவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஊக்கத்தொகையை வழங்குவது மாதிரி வழங்கி, திரும்பவும் பெற்றுக்கொள்வதாகவும், ஒரு நாளில் 18 மணி நேரம் வரை டூட்டி பார்க்க சொல்வதாகவும் கண்ணீர் வடிக்கிறார்கள் வருங்கால டாக்டர்கள்!
இதுகுறித்து புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக்(CENTAC) மாணவர் பெற்றோர் நலச் சங்கத்தின் தலைவர் மு.நாராயணசாமியிடம் பேசினோம். “புதுச்சேரியில் நான்கு நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகள், மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள், புதுச்சேரி அரசு கல்லூரி, மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி என மொத்தம் ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2,122 இடங்கள் இருந்தும் 493 இடங்கள் மட்டுமே புதுச்சேரி மாணவர்களுக்கு கிடைக்கின்றன.
இந்த நிலையில், முதுகலை மருத்துவப் படிப்பான எம்.எஸ்., எம்.டி. படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் முதலாம் ஆண்டில் ரூ. 43 ஆயிரம், இரண்டாம் ஆண்டில் ரூ. 45 ஆயிரம், மூன்றாம் ஆண்டில் ரூ. 47 ஆயிரம் கொடுக்க வேண்டும். ஆனால், மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு மாதாமாதம் இந்த உதவித் தொகையை வழங்குவதில்லை. வருடத்திற்கு ஒருமுறை வழங்கிவிட்டு அந்தத் தொகையை மாணவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து எடுத்து கொடுக்கச் சொல்லி மீண்டும் கல்லூரி நிர்வாகங்களே பெற்றுக்கொள்கின்றன. இதை மாணவர்கள் வெளியில் சொன்னால், பரிட்சை எழுதத் தேவையான வருகைப் பதிவேடு இல்லையென சொல்லிவிடுவோம்’ என மிரட்டுகின்றன.
இது மிகப்பெரிய மோசடி அதிகாரிகளும் இதில் மவுனம் காக்கின்றனர். புதுச்சேரி மாநிலத்தைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் முதுகலை மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நேரடியாக வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் மட்டுமே இப்படி முறைகேடுகள் நடக்கின்றன. புதுச்சேரி அரசு உடனடியாக, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுத்து, மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பொதுநல அமைப்புகளை திரட்டி போராட்டம் நடத்துவோம்” என்றார்.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி புதுச்சேரி மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் நம்மிடம், “புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்கள், தினமும் சராசரியாக 12 மணி நேரம் முதல் 18 மணிநேரம் வரை டூட்டி பார்க்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உச்சபட்சமாக வாரத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து 36 மணி நேரம் தொடர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தொழிலாளர் நலச் சட்டம் அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும்போது, மருத்துவர்களுக்கு மட்டும் ஏன் பொருந்தவில்லை? தூக்கமின்மை, மாணவர்களைக் கடும் மன அழுத்தத்திற்கும், உடற்பிணிக்கும் தள்ளுகிறது. பணி முடிந்து திரும்பும்போது ஏற்படும் விபத்துகளில் சிக்கி பல மாணவர்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது.
தேசிய மருத்துவ ஆணையம் பணி நேரத்தை வரை முறைப்படுத்த உத்தரவிட்டும், அது காகித அளவிலேயே உள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி ஜூனியர் மூத்த மருத்துவர்களும் பேராசிரியர்களுமே மௌனம் காக்கின்றனர். தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து சென்டாக் வாயிலாக அதிக கட்டணம் செலுத்திவரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதுடன், பணத்தைத் திருப்பித் தந்தால்தான் ஹால் டிக்கெட் தரப்படும் என மிரட்டுவது வாடிக்கையாகிவிட்டது.
மருத்துவர்களின் உரிமைகளுக்கு பட்டம் கைக்கு வர வேண்டும், சான்றிதழ்களை முடக்கிவிடுவார்கள் என்ற அச்சத்தால் மாணவர்கள் எதையும் வெளிப்படையாகப் பேச முடிவதில்லை. பிள்ளைகளின் இத்தகைய அவலநிலையைக் கண்டு பெற்றோர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். இதுகுறித்து உயர்மட்டக்குழு அமைத்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என்றார்.
இதுகுறித்து விளக்கம் கேட்டு புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் எஸ்.செவ்வேளை தொடர்புகொண்டோம். நம் அழைப்பை ஏற்கவில்லை. குறுந்தகவல் அனுப்பியும் பதில் இல்லை. கடைசியாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செல்போனுக்கு தொடர்புகொண்டோம். அவரும் நம் அழைப்பை ஏற்கவில்லை.
மாணவர்களின் துயர் துடைக்குமா புதுச்சேரி அரசு?
(பி.கோவிந்தராஜு)
