‘அ.தி.மு.க.வில் பிரிந்து கிடப்பவர்களை ஒன்று சேர்த்து ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்பேன்’ என்று சலிக்காமல் பேசிவந்த சசிகலா இன்று, ‘அரசியலே வேண்டாம்’ என துறவறம் மூடுக்கு வந்துவிட்டார் என்பதுதான் இலை முகாமின் ஹாட் டாபிக்.
இதுகுறித்து விவரம் அறிந்த அதிமுக சீனியர் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். அ.தி.மு.க.வில் மறைந்த ஜெயலலிதா தலையெடுத்த நாள் முதலாகவே சசிகலா வைத்ததுதான் சட்டம். கட்சியிலும் ஆட்சியிலும் ஜெயலலிதாவின் நிழலாக வலம் வந்த சசிகலாவின் கடைக்கண் பார்வைபட்டவர்கள் எல்லாம் ஒரே நாளில் உச்சம் தொட்டார்கள்.
இப்படி பவர்ஃபுல்லாக இருந்த சசிகலாவுக்கு கட்சியில் ஏற்பட்ட தொடர் சரிவும், பின்னடைவும் அவரை அரசியலை விட்டே விலக வைத்துவிட்டது. அதாவது. 2016ல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியை டி.டி.வி.தினகரனிடமும் அதிமுக ஆட்சியை எடப்பாடியிடமும் ஒப்படைத்தார். சசிகலா தொடர்ந்து, சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
தண்டனை காலம் முடிந்து சென்னை திரும்பிய சசிகலாவை அப்போதைய முதல்வர் எடப்பாடி கண்டுகொள்ளவே இல்லை. அதே காலகட்டத்தில் அதிமுகவில் இருந்து டி.டி.வி.தினகரனும் விலக்கி வைக்கப்பட்டிருந்தார். எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்த ஓ.பன்னீர்செல்வமும் சசிகலாவை ஏறெடுத்துப் பார்க்கவில்லை.
சசிகலாவால் அரசியலில் வளர்க்கப்பட்டவர்கள்கூட, எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ்ஸின் ஆதரவாளராக மாறிப் போனார்கள், அ.ம.மு.க.வை தொடங்கிய தினகரன் மட்டுமே சசிகலாவுக்கு ஆதரவாக நின்றார். அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியும் சசிகலாவுக்காக காலியாகவே வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் ‘நான் அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியை பெற போராடிக்கொண்டிருக்கிறேன்’ என சொல்லி அப்பதவியையும் சசிகலா நிராகரித்துவிட்டார். தினகரனுக்கும், இதனால் சசிகலாவுக்கும் இடையே மனக்கசப்புகள் அதிகரிக்க, நாளடைவில் இருவருக்கும் இடையேயான தொடர்பும் முறிந்துபோனது. அதனால், அமமுகவினரும் சசிகலாவை புறக்கணித்து விட்டார்கள்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக திடீரென சசிகலா, அரசியலில் இருந்து விலகுகிறேன்’ என அறிக்கை வெளியிட்டது. தினகரனையும் அ.ம.மு.க. தொண்டர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. அந்தத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியில் அமர, அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரமும் தலை தூக்கியது. ஓ.பி.எஸ்ஸை இரண்டாம் கட்ட தலைவர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க, அ.தி.மு.க.வை முழுமையாக கைப்பற்றினார் எடப்பாடி. இதைத்தொடர்ந்து அவரையும் அவரின் ஆதரவாளர்களையும் ஒட்டுமொத்தமாக நீக்கினார் எடப்பாடி அதற்கடுத்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்தது.
அதைக் கண்டு அச்சமடைந்த இரண்டாம் கட்ட தலைவர்கள், அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட சசிகலா, தினகரன். ஓ.பி.எஸ். உள்ளிட்ட அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என அழுத்தமாக குரல் கொடுக்க தொடங்கினார்கள். அதே வேகத்தில் ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி ஒன்றாக இணைய வேண்டும். அவர்களை இணைத்து வைக்கும் பொறுப்பை நான் மேற்கொள்ளப்போகிறேன்’ என பேச ஆரம்பித்தார் சசிகலா. ஆனால், 2026ல் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தல் வரை அவரது இணைப்பு முயற்சி வெற்றிபெறவில்லை.
எடப்பாடியை எதிர்த்து போராடிய ஓ.பி.எஸ். திமுகவில் ஐக்கியமானார். இதனால் சசிகலாவின் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிட்டன. இதைத்தொடர்ந்து அதிமு.க. மீதான உரிமை கோரிக்கைகளை தவிர்த்துவிட்டு, அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி ராமதாஸ் பாமகவுடன் கூட்டணி அமைத்து 13 தொகுதிகளில் தன் ஆதரவாளர்களை களமிறக்கினார் சசிகலா. ஒரு இடத்தில் கூட சசிகலா வேட்பாளர்களால் வெற்றிபெற முடியவில்லை என்றாலும் அதி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் பலரின் வெற்றியை பதம் பார்க்க முடிந்தது.
ஆனால், தவெ.க. ஆட்சி அமைந்தவுடன் சைலன்ட் மோடுக்கு சென்றுவிட்டார் சசிகலா. விஜய்யின் செல்வாக்கை கண்டு திராவிட கட்சிகளே திணறிவருவதை பார்த்து அரசியலில் இருந்து ஓய்வுபெறும் முடிவுக்கு வந்துவிட்டார் சசிகலா. பொதுவெளியில் அதிகமாக தலைகாட்டாமல் போயஸ் கார்டன் வீட்டுக்குள்ளேயே அவர் முடங்கிவிட்டார். தன் சகோதரர் திவாகரன் தவிர வேறு யாரையும் அவர் சந்தித்துப் பேசுவதும் இல்லை.
2026 தேர்தலுக்கு முன்பு வரை அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசைக் கண்டித்து அடிக்கடி அறிக்கை வெளியிட்டு தனது இருப்பை வெளிக்காட்டி வந்தவர் சசிகலா. ஆனால், தவெக ஆட்சி பொறுப்பு ஏற்று ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அந்த அரசைக் கண்டித்தோ அல்லது மற்ற பொதுப் பிரச்னைகளுக்கோ அவர் அறிக்கை எதுவும் வெளியிடுவதில்லை. அ.தி.மு.கவின் தொடக்கவிழாவை (அக்டோபர் 17) முன்னிட்டு ‘புரட்சித்தாய்’ என்ற பெயரில் பேருக்கு ஒரு அறிக்கை வெளியிட்டவர். போயஸ் கார்டன் வீட்டுக்குள் தொடர்ந்து முடங்கியிருப்பதுதான் அவரை நம்பியிருக்கும் ஆதரவாளர்கள் சிலரையும் கலக்கமடைய வைத்திருக்கிறது.” என விரிவாக சொல்லி முடித்தார்.
இதுகுறித்து சசிகலாவின் முன்னாள் ஆதரவாளர்களில் ஒருவரான பெங்களூரு புகழேந்தியிடம் கேட்டோம். “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அக்கட்சியில் இணைவதற்கு ஒரு சிறு துரும்பைக் கூட சசிகலா கிள்ளிப்போடவில்லை. வெறும் வாய்ப்பேச்சு மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். அவர் இப்போது நினைத்தால் கூட களத்தில் இறங்கி எடப்பாடியின் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிவிடலாம். இனி அதிமுகவில் மாற்றம் எதுவும் வரப்போவதில்லை” என்றார்.
இறுதியாக சசிகலாவின் ஆதரவாளர் பூவை கந்தனிடம் பேசினோம். ‘தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்துக்கு பிறகு சசிகலாவை தேடி வருபவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டதாக அர்த்தம் இல்லை. த.வெ.க. அரசுமீது வெறுப்பு அதிகரித்து, அரசியல் சூழ்நிலைகள் மாறும்போது சசிகலா நிச்சயமாக களத்துக்கு வருவார்” என்றார் நம்பிக்கையுடன்.
நம்பிக்கைதானே வாழ்க்கை!
