Home அரசியல் தனுஷ் வருகையால் காலியாகும் அண்ணாமலை கூடாரம்….கூண்டோடு வெளியேறும் வினோத்! – Kumudam

தனுஷ் வருகையால் காலியாகும் அண்ணாமலை கூடாரம்….கூண்டோடு வெளியேறும் வினோத்! – Kumudam

0


நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அண்ணாமலை நடத்தி வரும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த இளைஞர் நிர்வாகி ஒருவர் அந்த அமைப்பில் இருந்து விலகி, தவெக அல்லது தனுஷ் தொடங்கும் புதிய இயக்கத்தில் இணைய உள்ளதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், சமீபகாலமாக அரசியல் களத்திலும் பேசுபொருளாகி வருகிறார். அவரது ரசிகர் மன்றச் செயல்பாடுகள், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் அரசியல் நோக்கத்துடன் பார்க்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, திருவள்ளூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், ரசிகர்கள் ஒற்றுமையாக இருப்பதன் பின்னால் மிகப்பெரிய சக்தி இருப்பதாகவும், அந்த சக்திக்கு ஓர் அர்த்தத்தை உருவாக்க வேண்டும் என்றும் பேசியதாக கூறப்படுகிறது. இந்தப் பேச்சு அவரது அரசியல் நகர்வு குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

அதேபோல், தனுஷின் ரசிகர் மன்றத்தில் பயன்படுத்தப்படும் கொடி, ரசிகர் மன்ற நிர்வாகிகளின் செயல்பாடுகள், தொடர்ந்து நடைபெறும் நலத்திட்ட உதவிகள் என அடுத்தடுத்த நிகழ்வுகளும் கவனம் பெற்றுள்ளன.

இதற்கிடையே, தனுஷ் பெயரில் ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

மேலும், கடந்த அக்.19-ம் தேதி தனுஷ் திடீரென டெல்லி சென்றதும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. ஏற்கெனவே நிலவி வரும் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் பயணம் கூடுதல் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், அண்ணாமலை நடத்தி வரும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் இளைஞர் நிர்வாகியான சென்னை எம்.வினோத் வெளியிட்டுள்ள அறிவிப்பு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வினோத் தனது அறிவிப்பில், “விரைவில் வீ தி லீடர்ஸ் அமைப்பில் இருந்து விலகி, ஆயிரக்கணக்கான இளைஞர்களுடன் தவெக அல்லது தனுஷ் ஆரம்பிக்கும் புதிய இயக்கத்தில் இணைய உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு, அண்ணாமலை அமைப்பின் அரசியல் பயணத்திற்கு மத்தியில் கவனம் பெற்றுள்ளது. ஏற்கெனவே ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் அண்ணாமலை ஈடுபட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், அந்த அமைப்பைச் சேர்ந்த இளைஞர் நிர்வாகி ஒருவர் வேறு அரசியல் அமைப்பில் இணையப்போவதாக அறிவித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுவார்கள் என்று அண்ணாமலை ஏற்கெனவே அறிவித்திருந்தார். உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் புதிய தலைவர்களை உருவாக்கவும், அடிப்படை மாற்றங்களை கொண்டு வரவும் முடியும் என்றும் அவர் கூறியிருந்தார்.

அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்றாலும், அதன் பெயரை தற்போது வெளியிடப்போவதில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். தேவையானால் அரசியல் கட்சியின் பெயரில் அல்லாமல் ஓர் இயக்கமாகக்கூட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிர்வாகியான வினோத், தவெக அல்லது தனுஷ் தொடங்கும் புதிய இயக்கத்தில் இணைய உள்ளதாக அறிவித்திருப்பது, அண்ணாமலையின் அரசியல் கட்டமைப்புக்குள் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

அதேநேரத்தில், வினோத் மட்டும் விலகுகிறாரா அல்லது அவருடன் மேலும் இளைஞர்கள் வெளியேற உள்ளார்களா என்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இதனால், தனுஷின் அரசியல் வருகை உண்மையாகிறதா? அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பில் இருந்து மேலும் நிர்வாகிகள் வெளியேறுவார்களா? என்ற கேள்விகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.

 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version