back to top
17.2 C
London
Monday, October 12, 2026
No menu items!
Homeசினிமாமேஜர் சந்திரகாந்த் - ல் ரஜினிகாந்த்...த்ரில்லரில் ஸ்டைல் காட்டிய பாலசந்தர்! - Kumudam

மேஜர் சந்திரகாந்த் – ல் ரஜினிகாந்த்…த்ரில்லரில் ஸ்டைல் காட்டிய பாலசந்தர்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


கொஞ்சம் சினிமா… கொஞ்சம் பேச்சு! – வி.ராம்ஜி

ரஜினிகாந்த் என்பவரை… சூப்பர் ஸ்டாரை, கடந்து 50 வருடங்களாகத் தெரியும் நமக்கு! ஆனால், ‘ரஜினிகாந்த்’ எனும் பெயர், தமிழ் சினிமாவுக்குக் கிடைத்து 60 ஆண்டுகளாகிவிட்டன என்பது தெரியுமா?

‘ரஜினியோட பேரு சிவாஜிராவ். பாலசந்தர்தான் ரஜினிகாந்த்னு பேரு வைச்சாரு’ என்று பெரும்பான்மையானவர்கள் சட்டென்று சொல்லிவிடுவார்கள். ‘அட ஆமாங்க… ‘கெளரவம்’னு ஒரு படம். நடிகர்திலகம் நடிச்சிருந்தாரு. டபுள் ஆக்ட் கொடுத்தாரு. அதுல பெரிய சிவாஜியோட பேரு ‘பாரீஸ்டர் ரஜினிகாந்த்’ என்றும் சிலர் சொல்லிவிடுவார்கள். ஆனால் 1966ஆம் ஆண்டு, பாலசந்தர் இயக்கிய ‘மேஜர் சந்திகாந்த்’ இயக்கிய படம் நினைவிருக்கிறதா? இந்தப் படத்தில் இருந்துதான் ‘ரஜினிகாந்த்’ என்ற பெயர் சினிமாவுக்குள் வந்தது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

‘என்ன கதை வுடுறீங்க. படத்தோட தலைப்பே மேஜர் சந்திரகாந்த்னுதான் இருக்கு. ரஜினிகாந்த்னா இருக்கு?’ என்று கேட்கலாம். படத்தில் ‘மேஜர்’ கதாபாத்திரத்துக்கு அதாவது மேஜர் சுந்தர்ராஜனுக்கு ‘மேஜர் சந்திரகாந்த்’ என்றுதான் பெயர். அவருக்கு இரண்டு மகன்கள். அவர்களுக்கு ஸ்ரீகாந்த் என்றும் ரஜினிகாந்த் என்றும் பெயர் சூட்டினார் இயக்குநர் கே.பாலசந்தர்!
 
1965-ல் ‘நீர்க்குமிழி’யை முதன்முதலாக இயக்கிய பாலசந்தர் அடுத்து அதே வருடத்தில், ‘நாணல்’ படத்தையும் எடுத்தார். 1966-ஆம் ஆண்டு, ஏவி.எம் நிறுவனம் தயாரிக்க பாலசந்தரின் இயக்கத்தில் உருவானதுதான் ‘மேஜர் சந்திரகாந்த்’.

ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றி, கண்களை இழந்து வீட்டில் இருக்கிறார் மேஜர் சந்திரகாந்த். இவருக்கு ஸ்ரீகாந்த் (முத்துராமன்), ரஜினிகாந்த் (ஏவி.எம்.ராஜன்) என்று இரண்டு மகன்கள். ஸ்ரீகாந்த் போலீஸ். ரஜினிகாந்த் கல்லூரியில் படிக்கிறார்.

ஏழ்மையான நிலையில் தையல் தொழிலில் இருப்பவர் மோகன் (நாகேஷ்). இவரின் தங்கை விமலா (ஜெயலலிதா). தங்கையின் மீது உயிரையே வைத்திருக்கிறார். கஷ்டப்பட்டு கல்லூரியில் படிக்கவைக்கிறார். ஒருகட்டத்தில், விமலாவுக்குத் திருமண ஏற்பாடுகள் செய்கிறார். இந்தத் தகவலை அண்ணன் சொன்னதும், விக்கித்துப் போகிறார் விமலா. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்து மருகுகிறார்.

மாப்பிள்ளை வீட்டார் வரவிருக்கும் நேரத்துக்கு முன்பு வரை, அந்த வீட்டில் மோகன் ஆடிப்பாடி துள்ளாட்டம் போடுகிறார். மாப்பிள்ளை வீட்டாரும் வந்துவிடுகிறார்கள். அலங்கரித்துக்கொள்ளச் சென்ற விமலா, வெளியே வரவில்லை. நேரமும் ஆகிக்கொண்டிருக்கிறது. பார்த்தால்… விமலா தற்கொலை செய்துகொள்கிறாள். அதிர்ந்துபோகிறார் நாகேஷ். குலைந்து விழுகிறார்!

இதன் பின்னர்தான், கல்லூரியில் படிக்கும் ரஜினிகாந்த் என்பவன் தன் தங்கையை ஏமாற்றிவிட்ட விஷயம் மோகனுக்குத் தெரிகிறது. ஆத்திரமும் கோபமுமாக, பழிவாங்கும் உணர்வுடன் சென்று அவனைக் கொல்கிறார். போலீஸ் துரத்துகிறது. தப்பித்து எங்கெல்லாமோ ஓடுகிறார். அப்படி ஓடுகிற மோகன், மேஜர் சந்திரகாந்தின் வீட்டுக்கே வந்து ஒளிந்துகொள்கிறார். பார்வை இல்லாதபோதும் புதிய நபர் வந்திருக்கிறார் என்பதை ஊகித்து மோகனிடம் பேசுகிறார் சந்திரகாந்த். கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் பரஸ்பரம் அன்பு பாராட்டிக் கொள்கிறார்கள். மோகனின் சூழலும் அவருக்குப் புரிகிறது.

இந்த நிலையில், தம்பியைக் கொன்ற மோகனைத் தேடி அலைகிறார் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த். அதேபோல, தன் மகன் ரஜினிகாந்தைக் கொன்றது மோகன் தான் எனும் விவரமும் மேஜருக்குத் தெரியவருகிறது. மகன் செய்த தவறும் புரிகிறது. நிலைகுலைந்து தவிக்கிறார். அதேசமயம், தன் இன்னொரு மகனான போலீஸிடம் சொல்லாமல், மோகன் மறைந்திருக்கவும் இடம் கொடுக்கிறார். இறுதியில் எல்லாமே தெரிகிறது இன்ஸ்பெக்டருக்கு!

நேர்மையும் கடமையும் தவறாத மேஜர், கொலையாளிக்கு உதவிய குற்றத்துக்காக, கொலையாளி மோகனுடன் சேர்ந்து மனநிறைவுடன் கைதாகிச் செல்கிறார் என்பதுதான் ‘மேஜர் சந்திரகாந்த்’ திரைப்படம்! வழக்க சினிமாக்களில் இருந்தும் பழக்க செண்டிமெண்டுகளில் இருந்தெல்லாம் விலகி, சினிமாவை அப்போதே பாலசந்தர் ‘ஒருகை’ பார்த்திருந்தார். பெரிய பெரிய நடிகர்களையெல்லாம் போடாமல், நாகேஷ், மேஜர், முத்துராமன், ஏவி எம். ராஜன் என வைத்துக்கொண்டு, உளவியலுக்கும் உணர்வுகளுக்குமான முடிச்சுகளுடன் கதையை நமக்குள் விவாதப் பொருளாக்கியிருப்பார் பாலசந்தர்!

நாகேஷ் தன் குணச்சித்திர நடிப்பால் உச்சம் தொட்டிருப்பார். தங்கையின் மீது பாசம், ஏழ்மை நிலையில் இருந்தாலும் கலகலப்பு, தங்கையை ஏமாற்றியவன் மீது ஆத்திரம், கொலை செய்துவிட்ட குற்ற உணர்ச்சி, போலீஸை ஏமாற்றுகிற சாதுர்யம், மேஜர் சுந்தர்ராஜனுடன் ஏற்படுகிற பழக்கம், அவரின் மகனைக் கொன்றுவிட்டோமே… எனும் கலக்கம் என சகல உணர்வுகளிலும் ஊடுருவி பிரமிக்கவைத்திருப்பார் நாகேஷ். ஜெயலலிதாவும் கொடுத்த கதாபாத்திரத்தை நிறைவாகவே செய்திருப்பார். அண்ணன் காட்டுகிற அன்பிலும் காதலனிடம் ஏமாந்த துக்கத்திலும் கலங்கடித்திருப்பார். ஏவி.எம்.ராஜனும் முத்துராமனும் கச்சிதமாக நடித்திருந்தார்கள்.

படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் உரிய நாயகன் மேஜர் சந்திரகாந்த். அதாவது மேஜர் சுந்தர்ராஜன். மிகச்சிறந்த நடிப்பை வழங்கினார். டிப்டாப் டிரஸ்ஸும், கையில் வாக்கிங் ஸ்டிக்குமாக மேஜர் எனும் உயர்ந்த பதவியில் இருந்த மிடுக்கும் கம்பீரமும் கொஞ்சம் திமிருமாக அவரின் உடல்மொழியே பாதி நடித்துவிடும். மீதமுள்ள நடிப்பை தன் டயலாக் டெலிவரியால் நிறைவு செய்து கதாபாத்திரத்துக்கு கெளரவம் சேர்த்திருப்பார்.

கண் தெரியாவிட்டாலும் இப்படி நடக்கிறீர்களே… என்று நாகேஷ் வியந்து கேட்பார். ‘வீட்டில் அடிக்கணக்கில் நடப்பதுதான் காரணம்’ என்று ஸ்டைலாகச் சொல்லிவிட்டு, ‘டக் டக் டக் டக் டக்’ என்று நடந்து திரும்புவார். அங்கே உள்ள பொருட்களைச் சொல்லுவார், மீண்டும் நடப்பார். அங்கேயிருக்கும் பொருட்களைச் சொல்வார். ஸ்டைலாகத் திரும்பி, அடியெடுத்துவைத்து, சோபாவில் அமருவார். ஆனால் அங்கே சோபா இருக்காது. கீழே விழுந்துவிடுவார். அந்த சோபா வழக்கமான இடத்தில் இல்லாமல் நகர்த்திப் போடப்பட்டிருக்கும். ‘கர்வம் மட்டும் கூடவே கூடாது’ என்பார் மேஜர். கர்வமும் அலட்டலுமாக இருப்பவர்களுக்காக வசனம் அது!

மேஜருடன் இருக்கும் நாய் ஒன்று அசத்தியிருக்கும். அதற்குக் கொடுக்கப்பட்ட பயிற்சியும் அமர்க்களம். அந்த வீட்டுக்கு வந்து அடிக்கடி புலம்பலுடன் கேரக்டர், படத்தின் த்ரில்லருக்கு கொஞ்சமேனும் தருகிற ரிலாக்ஸ் காமெடி! சுந்தர்ராஜன்   மேஜர் சுந்தர்ராஜன் என்று அழைக்கப்பட்டது இதையடுத்துதான்! நாடகத்தில் நடித்த ஹரிகிருஷ்ணன் எனும் நடிகர்தான் இந்த வேடத்தில் நடிப்பதாக இருந்தது.

‘மெல்லிசை மாமணி’ எனும் பட்டத்துடன் அழைக்கப்பட்ட, அதேசமயம் தமிழ்த் திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாத அற்புத இசையமைப்பாளர் வி.குமார், இந்தப் டத்துக்கு இசை. தனது நாடகங்களில் இசையமைத்த வி.குமாரை ‘நீர்க்குமிழி’ மூலம் திரைக்குக் கொண்டுவந்த கே.பாலசந்தர், மிகப்பெரிய ஏவி.எம். தயாரித்த இந்தப் படத்திலும் அவரையே பயன்படுத்தினார். ஒரு த்ரில்லர் படத்துக்கு உண்டான இசையை அத்தனை நேர்த்தியுடன் வழங்கினார் வி.குமார்.

அதேபோல, படத்தின் பாடல்களை கவிஞர் வாலி எழுத, எல்லாப் பாடல்களையும் செம ஹிட்டுகளாகவும் லட்டுகளாகவும் அமைந்தன! ’நேற்று நீ சின்னப்பப்பா இன்று நீ அப்பப்பா’ என்ற பாடல், ஏவி.எம்.ராஜனுக்கும் ஜெயலலிதாவுக்கும்! டி.எம்.எஸ்., சுசீலா இருவரும் பாடினார்கள். ’நானே பனி நிலவு வருவேன் பல இரவு’ என்ற பாடலை பி.சுசீலா பாடினார்.

’கல்யாண சாப்பாடு போடவா / தம்பி கூட வா/ ஒத்து ஊதவா/ இந்த ஊருக்கெல்லாம் பாக்கு வச்சி மேளம் கொட்டவா’ என்ற பாடல் ஹிட்டடித்தது. நாகேஷுக்கு டி.எம்.எஸ் பாடினார். படத்தில் மிகப்பெரிய ஹிட் பாடலாக அமைந்த ‘ஒருநாள் யாரோ…’ அப்படியொரு மெலடி ரகம்! ’ஒரு நாள் யாரோ…./ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ/ கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம்/என்னென்று சொல் தோழி/ என்ற பாடலில், ’உள்ளம் விழித்தது மெல்ல/ அந்தப் பாடலில் பாதையில் செல்ல/ மெல்லத் திறந்தது கதவு/ என்னை வாவென சொன்னது உறவு/ நில்லடி என்றது நாணம்/ விட்டு செல்லடி என்றது ஆசை என்று வாலி ஜாலம் காட்டியதெல்லாம் காதல்ஜாலம்! பாலசந்தர் படத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம் இதுதான்! அறிமுகப்படுத்திய இயக்குநர் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்தைத் தவிர ஜெயலலிதா ஸ்ரீதருடன் எப்படிச் சேரவில்லையோ… அதேபோல் பாலசந்தரிடமும் இணையவில்லை ஜெயலலிதா!

இந்த நாடகம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்போது, கதை உரிமையை பாலசந்தரிடம் கேட்க, ’நித்ய கல்யாணி பிலிம்ஸ்’ எனும் தயாரிப்பு நிறுவனத்துக்கு விற்றுவிட்டார் பாலசந்தர். அந்த நிறுவனமும் பட வேலையில் இறங்கியது. பி.மாதவன் இயக்கத்தில் ‘மேஜர் சந்திரகாந்த்’ கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகர் யார் தெரியுமா? நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஆனால் ஏனோ தெரியவில்லை… ஆரம்பித்த வேகத்திலேயே நின்றுவிட்டது. பிறகு இந்தியில் உரிமை வாங்கி, நாடகத்தை சினிமாவாக்கினார்கள்.

அதன் பிறகுதான் ஏவி.எம் தயாரிக்க, பாலசந்தர் இயக்கத்தில், மேஜர் சுந்தர்ராஜனே நடிக்க, ‘மேஜர் சந்திரகாந்த்’ உருவாகி வெளியானது. ரஜினிகாந்த் எனும் பெயர் பாலசந்தரை மட்டுமின்றி திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் ரொம்பவே ஈர்த்தது. ‘கெளரவம்’ படத்தில் சிவாஜியின் பெயர் ‘பாரீஸ்டர் ரஜினிகாந்த்’. பல வருடங்களுக்குப் பிறகு, சிவாஜிராவ் கெய்க்வாட்டைப் பார்த்து, தன் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகப்படுத்திய கே.பாலசந்தர், சிவாஜிராவுக்கு ‘ரஜினிகாந்த்’ என்று பெயர் சூட்டினார்.

ஆக, ‘ரஜினிகாந்த்’ எனும் பெயர் பாலசந்தரை ரொம்பவே ஈர்த்திருக்கிறது. அதேபோல், இந்த உலகையே ஈர்ப்பார் சூப்பர் ஸ்டார் என்பதும் முன்னமே பாலசந்தருக்குத் தெரிந்திருக்கிறது!

பார்வையற்ற கதாபாத்திரம் கொண்ட படங்கள் எத்தனையோ வந்திருக்கின்றன. அந்தப் படங்களுக்கெல்லாம் சூப்பர்ஸ்டார்தான் இந்த ‘மேஜர் சந்திரகாந்த்!’



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here