டாஸ்மாக் நிர்வாகம், பாரத ஸ்டேட் வங்கியின் கார்ப்பரேட் சம்பளத்தொகுப்புத் திட்டத்தின் மூலம், தங்கள் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம், ரூ.50 லட்சம் வரையிலான எஸ்பிஐ-யின் விபத்து காப்பீடும் பணியாளர்களுக்கு கிடைக்கவுள்ளது. தமிழ்நாட்டில் செயல்படும் 4000 டாஸ்மாக் கடைகளில், 24 ஆயிரம் பணியாளர்கள். மேற்பார்வையாளர்களாகவும் விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களாகவும் ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களில், ஒப்பந்த பணியாளர்களாக உள்ள 22, 877 பேருக்கு பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் கார்ப்பரேட் சம்பள தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலான எஸ்பிஐ வங்கியின் விபத்து காப்பீடு கிடைக்கவுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார். டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த மாதம் 29-ம் தேதி நடந்த டாஸ்மாக் நிறுவன இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில், ஒப்பந்த அடிப்படையிலான டாஸ்மாக் கடை பணியாளர்களுக்காக பாரத ஸ்டேட் வங்கியின் கார்ப்பரேட் சம்பளத் தொகுப்புத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, டாஸ்மாக் மற்றும் பாரத ஸ்டேட் வங்கிக்கும் இடையே முறையான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு, அனைத்து மாவட்ட மேலாளர்களும், தங்களது மாவட்டங்களில் பணிபுரியும் டாஸ்மாக் கடைப்பணியாளர்களின் துல்லியமான விவரங்களை, வரும் 15-ம் தேதிக்குள் டாஸ்மாக் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த விவரங்கள் வங்கியில் பராமரிக்கப்படும் பதிவுகளுடன் பொருந்துவதை மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இத்திட்டத்தில் இணையும் டாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளர் ஆகியோருக்கு தனிநபர் விபத்துக் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சமும், உதவி விற்பனையாளருக்கு ரூ.30 லட்சமும் காப்பீடு கிடைக்கும். நிரந்தர முழு/பகுதி உடல் ஊனமுற்ற நிலைக்கான காப்பீடு, இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும். டெபிட் கார்டு மூலம் காப்பீட்டுப் பலன்கள் பணியாளர்களுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





