Home அரசியல் “தவெக ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் இல்லை”..விஜய் குறித்து முத்தரசன் பரபரப்பு பேட்டி! – Kumudam

“தவெக ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் இல்லை”..விஜய் குறித்து முத்தரசன் பரபரப்பு பேட்டி! – Kumudam

0


த.வெ.க. கூட்டணிக்குள் இருந்துகொண்டே ஆளும் அரசு தவறு செய்தால் தட்டிக் கேட்பதில் இடதுசாரிகளுக்கு இணையாக வேறு ஓர் அரசியல் கட்சி இல்லை. ‘ஐந்து ஆண்டுகளுக்கு ஆதரவு தொடரும்’ என அறிவித்துவிட்டு அடிக்கடி ஆட்சியின் குரல்வளையையே நெரிக்கும் சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசனை சந்தித்துப் பேசினோம்.

இடைத்தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிடுவது த.வெ.க.வின் வெற்றியை பாதிக்காதா?

ஐந்துமுனைப் போட்டியில் நாங்கள் யாரையும் எதிர்த்துப் போட்டியிடவில்லை. ஜனநாயக சீர்குலைவுக்கு எதிரான ஓர் அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். ஜனநாயக சீர்குலைவு வடக்கில் நடந்தால் கண்டிக்கிறோம். தமிழகத்தில் நடந்தால் கண்டிக்கமாட்டோம் என்ற தர்மத்தை இடதுசாரிகள் ஏற்க தயாராக இல்லை. இந்த இடைத்தேர்தல் அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை. திணிக்கப்பட்ட தேர்தல். இப்படிப்பட்ட ஜனநாயக சீர்குலைவைக் கண்டித்து போட்டியிடுகிறோம்.”

இடைத்தேர்தல் போட்டி மூலம் த.வெ.க. தலைவர் விஜய்யை இடதுசாரிகள் மிரட்டுவதாக சொல்லப்படுகிறதே?

“யாரையும் மிரட்டவில்லை. மிரட்டல் என்ற வார்த்தையே அரசியலுக்கு பொருந்தாது. கொள்கையா.. கூட்டணியா என்பதுதான் முக்கியம். கொள்கையால் வெற்றிபெறலாமே தவிர மிரட்டி பணியவைப்பது பொருந்தாது. எங்கள் நூறாண்டு கால வரலாற்றில் எந்தவொரு அரசியல் கட்சியையும் நாங்கள் மிரட்டியதில்லை.”

முந்தைய தி.மு.க. ஆட்சியில் இடதுசாரிகள் அடக்கி வாசித்ததாக சொல்லப்படுகிறதே?

எந்தவொரு ஆட்சியிலும் மக்களுக்கு எதிரான பிரச்னைகளில் நாங்கள் சமரசம் செய்துகொண்டதில்லை. குறிப்பாக, தி.மு.க. ஆட்சியில் 12 மணி நேர வேலை கொண்டுவந்தபோது சட்டமன்றத்தில் எதிர்த்தோம். அந்த மசோதாவை வாபஸ் வாங்கவைத்த பெருமை எங்கள் இரு கட்சிகளுக்கு மட்டுமே உண்டு, தூய்மைப் பணியாளர்கள், சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னைகள் உட்பட பல்வேறு முக்கியமான பிரச்னைகளில் தி.மு.கவை எதிர்த்து போராடினோம் எங்களுக்கு மக்கள் நலன்தான் முக்கியம்.”

பிரதமர் வேட்பாளராக விஜய் முன்னிறுத்தப்படுவது ஏற்புடையதா?

“ஒவ்வொரு கட்சியும் அக்கட்சித் தலைவர்களை உயர்த்திப் பிடிப்பது வழக்கம். தவெக சார்பில் விஜய்யை ‘வருங்கால பிரதமர்’ என சொல்லலாம். ராகுலை, எதிர்கால பிரதமர் என காங்கிரஸ் சொல்லலாம். பிரதமர் பதவிக்கான தேர்தல் என்பது 2029ல்தான் நடக்கப்போகிறது. இத்தேர்தலில் பா.ஜ.க தலைமையில் ஓர் அணி, இண்டியா கூட்டணி தலைமையில் ஓர் அணி என இரு அணிகள்தான் இருக்கும். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இரு அணிகளிலும் பிரதமர் வேட்பாளருக்கு யார் தகுதியானவர் என்பதை முடிவு செய்வார்கள். அதேசமயத்தில் நான் யாரையும் பிரதமர் வேட்பாளராக நினைக்கவில்லை. த.வெ.க.வில் இருப்பவர்கள் வேண்டுமானால் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என சொல்லிக்கொள்ளலாம்.”

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பெண்களை இழிவுபடுத்துவதாக விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே? 

தமிழக சட்டமன்றத்தில் நடந்த காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்மீது உதயநிதி சரியாக பேசினார். அதேசமயத்தில் பெண்களை அவர் தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதாக பிரச்னைகள் வந்துகொண்டிருக்கின்றன. பெண்களை பற்றி உதாரணம் காட்டி, மேற்கோள் காட்டி யார் பேசினாலும் அது தவிர்க்கப்படவேண்டும். பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யாரும் பேசக் கூடாது. அது தவறான அணுகுமுறை.

போக்ஸோ வழக்கில் கைதான தொழிலதிபர் வீரமணி விவகாரத்தில் இடதுசாரிகள் மவுனமா இருப்பதாக சொல்லப்படுகிறதே?

“சிறுமிகளை பாலியல் இச்சைக்காக துன்புறுத்துவதை 20 ஆண்டுகளுக்கு மேலாக செய்துவந்திருக்கிறார் வீரமணி. இதற்காக நிறைய பணத்தை செலவழித்துள்ளார். இதை தெரிந்துகொண்ட பலரும் அவரை மிரட்டி பணம் பறித்தனர். தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னையில் வேறு ஒரு கூட்டணி இருந்துகொண்டே இருக்கிறது. அக்கூட்டணிதான் வீரமணி போன்ற நபர்களை தொடர்ந்து காப்பாற்றிவருகிறது. பொதுப் பிரச்னைகள் எதிலும் சமரசம் செய்துகொள்ளாத நாங்கள் ஏன் வீரமணிக்கு ஆதரவாக செயல்பட வேண்டும்? தவறான பிரசாரம் இது”

ஆட்சி நிர்வாகத்துக்கு புதியவர்கள் என்பதால் த.வெ.க.வினர் தடுமாறுவது உண்மையா?

“புதியவர்கள் ஆட்சிக்கு வருவது தவறல்ல. அவர்கள் நிர்வாகத்தை கற்றுக்கொள்ள அவகாசம் கொடுப்பதும் தவறல்ல, தி.மு.க முதலில் ஆட்சிக்கு வந்தபோது, அவர்கள் நிர்வாகத்தை கற்றுக்கொள்ள 6 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும் என சொன்னவர் காமராஜர். அதேபோல் தவெகவினருக்கும் அவகாசம் வழங்க வேண்டும். தவெக அரசு பிறப்பிக்கும் சில அரசாணைகள் ஒரு வாரம் கழித்து ரத்து செய்யப்படுகிறது. ஒரு அரசாணை என்பது மிகவும் முக்கியமானது. மக்களின் தேவைகளுக்காக பிறப்பிக்கப்படும் அரசாணைகளில் தவெகயினரால் உறுதியாக நிற்க முடியவில்லை. எனவே, அரசுக்கு கொஞ்சம் கவனம் தேவை.”

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை மாற்றும் விவகாரத்தில் த.வெ.க. உடன்பட மறுப்பது ஏன்?

“இதை எப்படி புரிந்துகொள்வது என தெரியவில்லை. தேர்தல் ஆணையத்தின் தலைவர் பாஜகவின் ஏஜென்ட்டாக செயல்பட்டு வருகிறார். அப்படிப்பட்ட ஒருவரால் தேர்தலை ஜனநாயகரீதியில் நடத்த முடியாது. பா.ஜ.கவுக்கு சாதகமாகவும், எதிர்க்கட்சிகளுக்கு பாதகமாகவும் செயல்பட்டிருக்கிறார் தேர்தல் கமிஷனர். தேர்தல் ஆணையம் என்பது யாருடைய உத்தரவையும் எதிர்பார்த்து செயல்படவேண்டிய அமைப்பு அல்ல. இது ஜனநாயகத்துக்கு ஏற்பட்டிருக்கிற மிகப்பெரிய பேரழிவு.”

த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்க இடதுசாரிகள் தயாராகிவிட்டதாக சொல்கிறார்களே?

“தவெக அரசுக்கு நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்துவருகிறோம். ஐந்து ஆண்டுகள் தவெ.க அரசு நீடிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். தவெக அரசை கவிழ்ப்போம் என இடதுசாரி தலைவர்கள் யாரும் எங்கேயும் சொல்லவில்லை. அரசின் நடவடிக்கைகளை நாங்கள் விமர்சிக்கிறோம். தவறுகளை சுட்டிக் காட்டுகிறோம். நாங்கள் பாசிட்டிவ் அப்ரோச்தான் செய்கிறோம். அதை சில அமைச்சர்கள் நெகட்டிவாக எடுத்துக்கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.”

கு.கணேஷ் குமார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version