back to top
19.1 C
London
Saturday, October 3, 2026
No menu items!
Homeசினிமாஉறவுகளின் சிக்கல் முதல் கமலின் குழந்தை நடிப்பு வரை... ‘பாத காணிக்கை’ ஏன் இன்றும் மனதில்...

உறவுகளின் சிக்கல் முதல் கமலின் குழந்தை நடிப்பு வரை… ‘பாத காணிக்கை’ ஏன் இன்றும் மனதில் நிற்கிறது? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


கொஞ்சம் பேச்சு… கொஞ்சம் சினிமா! – வி.ராம்ஜி

’இன்றைக்கு கூட்டுக்குடும்பெல்லாம் இல்லவே இல்லை. இன்னும் சொல்லப்போனால், கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்ந்தாலே, அது கூட்டுக்குடும்பம் போல் பார்க்கப்படுகிறது’ என்று மறைந்த வசனகர்த்தாவும் எழுத்தாளருமான கிரேஸி மோகன் தெரிவித்திருந்தார். உண்மைதான்..! இங்கே அப்பா – அம்மா, மகன்கள், மருமகள்கள், பேரன் பேத்திகள் என்றெல்லாம் சேர்ந்து வாழ்வது என்பது உலக அதிசயமாகிவிட்டது. ஆசைப்படுகிற வெறுங்கனவாகிப்போனது! அதேவேளையில், உறவுகளால்தான் எல்லாப் பிரச்சினைகளும் சிக்கல்களும் துன்பங்களும் வரும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

உறவுகள் கூடி வாழ்ந்த அந்தக் காலத்திலேயே, உறவால் ஏற்படுகிற சிக்கலையும் அதனால் அந்தக் குடும்பத்தில் நிலவுகிற கஷ்டநஷ்ட துக்கங்களும் என்று சொன்னதில் ‘பாத காணிக்கை’ தனித்துவம் பெறுகிறது!

1962ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாத காணிக்கை’ படத்தை இயக்குநர் கே.சங்கர் இயக்கினார். வாழ்க்கை, உறவுகள், காதல், ஏமாற்றம், எதிர்பார்ப்பு, பணம்காசு, சொத்துகள், திருமணபந்தம் என வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் சந்திக்கிற அல்லாட்டங்களையும் ஆட்டங்களையும் சொன்னதுதான் ‘பாத காணிக்கை!’

இந்தப் படம் வெளியாகி ஆறு வருடங்கள் கழித்துத்தான் நான் பிறந்தேன். அதையடுத்து, எனக்கு பனிரெண்டு வயதாகும்போது, இந்தப் படத்தைப் பார்த்தேன். திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டுக்கு அருகில் உள்ள சுப்ரமணியபுரம் சபியா தியேட்டரில், பொன்மலைப்பட்டி சரவணா திரையரங்கில், திருச்சி பிரபாத் தியேட்டரில், நான் வேலை பார்த்த மேலகல்கண்டார்கோட்டை சண்முகா டாக்கீஸில் என ‘பாத காணிக்கை’ படத்தை எத்தனைமுறை பார்த்தேன் என்பதையெல்லாம் கணக்கு வைத்துக்கொள்ளவில்லை.

ஆனால், ‘எம்ஜிஆர், சிவாஜி படம்னா ரெண்டு தடவை, நாலு தடவை கூட பாக்கலாம். ஜெமினி நடிச்ச படத்தைப் போய், விழுந்து விழுந்து போய் பாக்குறியேடா. சரியான சாம்பார் (!)டா நீ’ என்று என் முகத்துக்கு நேராகவே விமர்சனம் செய்த நண்பர்களை, நான் அப்பவே மன்னிச்சிட்டேன்!

ஒரு கதையை எடுத்துக்கொண்டு, அந்தக் கதைக்குள் கதாபாத்திரங்களை உள்ளுக்குக் கொண்டு வந்து, அவர்களுக்கு உரிய வசனங்களை எழுதி, அவர்களிடம் சரியான முகபாவனைகளையும் ஏற்ற இறக்க உச்சரிப்புகளை வாங்கி, ஒவ்வொரு கேரக்டரையும் பார்க்கிற ரசிகனுக்குள் கடத்துகிற முயற்சி, ஆகப்பெரிய சவால்தான். ‘எல்லா டைரக்டர்களும் அப்படித்தான் பண்ணுவாய்ங்க; எல்லாப் படங்களும் அப்படித்தான் எடுப்பாய்ங்க! நீயென்ன புதுசா கண்டுபுடிச்சிட்டியாக்கும்? இல்ல… இந்தப் படம் மட்டும்தான் இப்படியெல்லாம் எடுத்த ஒரேபடமா வந்திருக்குதாக்கும்?’ என்று கேலியெல்லாம் செய்து, கெக்கலித்தார்கள்.

ஆனாலும் இந்தப் படம் எனக்கு ஸ்பெஷல்தான்! படத்தில் கேரக்டர் முக்கியம்தான். அதைவிட ‘கேரக்டரைஸேஷன்’ ரொம்பரொம்ப முக்கியம்தானே! என் 12 வயதில், கேரக்டர்களும் கேரக்டரைஸேஷனும் வெகுவாகவே ஈர்த்ததைச் சொல்ல அப்போது காரண காரியமெல்லாம் சொல்லத் தெளிவில்லை. தெரியவில்லை!

எஸ்வி.சுப்பையாவுக்கு முதல் தாரம் இறந்துவிடுகிறார். அவருக்கு அசோகன், ஜெமினி என இரண்டு மகன்கள். இரண்டாம் தாரமாக வந்த எம்.வி.ராஜம்மாதான் எல்லோருக்கும் அம்மாவாக இருந்து பாசத்தையும் அன்பையும் பாரபட்சமில்லாமல் வழங்கிக்கொண்டிருப்பார். எஸ்வி சுப்பையாவின் முதல் மனைவிக்கு சகோதரர் உண்டு. அவர்தான் எம் ஆர். ராதா. அதாவது ஜெமினியும் அசோகனும் ஹீரோக்களென்றால்… இதோ… இந்த தாய்மாமாதான் வில்லன்.

மொத்தக் குடும்பத்துக்குமே வில்லாதிவில்லன். எம் ஆர். ராதாவின் மனைவியாக சிகே.சரஸ்வதி. மகனாக சந்திரபாபு, மகளாக விஜயகுமாரி. எஸ்வி. சுப்பையாவின் இரண்டாவது மனைவியான எம்வி.ராஜம்மாவின் சகோதரர் மகளாக சாவித்திரி. ஆக, காதல்மன்னன் ஜெமினிகணேசனுக்கு விஜயகுமாரியும் சாவித்திரியும் முறைப்பெண்கள்! அசோகனுக்கு கல்யாணமாகியிருக்கும்; மனைவி இறந்திருப்பார். மகன் மட்டும் இருப்பார். அந்தப் பையன்… சிறுவன்… மாஸ்டர் கமலஹாசன்.

தன் மகளைத் திருமணம் செய்துகொடுத்து, அந்த வீட்டின் சொத்துகளையெல்லாம் ‘ஆட்டை’யைப் போடவேண்டும் என்பதுதான் எம் ஆர்.ராதாவின் ப்ளான். அதற்கு வலு சேர்க்கும் விதமாக, விஜயகுமாரி, ஜெமினிகணேசனை விரும்புவார். ஆனால் ஜெமினியோ சாவித்திரியைக் காதலிப்பார். சாவித்திரியும்தான்!

ஒருகட்டத்தில், எம் ஆர். ராதாவின் சூழ்ச்சியில் பாதி நிறைவேறிவிடுகிறது. அதேசமயம்,திரிகொளுத்திப் போட்டுவிட்டு, குண்டு வெடிக்கக் காத்திருப்பதைப் புரிந்துகொண்ட எஸ்வி.சுப்பையா, சொத்துகளையெல்லாம் தன் 2ஆவது மனைவியின் பெயரில் எழுதிவைத்துவிடுகிறார். இந்த விஷயம்… இன்னும் குடும்பத்தில் அனலைப் பரப்புகிறது. அசோகனுக்கு கொம்பு சீவிவிடுவார் எம் ஆர்.ராதா. காதலால், திருமணத்தால், குடும்பப் பகையால் வீடு ரெண்டுபட்டு அல்லாடிக் களேபரமாக இருக்க, சொத்துப் பிரச்னை கோர்ட் வரைக்கும் செல்கிறது.

’சொத்துக்காக கோர்ட்டுக்குப் போனால் அவன் பையனே இல்லை. அப்படியொரு நிலைமை வந்தும் உயிரோடு இருந்தால் அவன் அப்பனே இல்லை’ என்று சொல்லியிருப்பார் சுப்பையா. இதெல்லாம் நினைவுக்கு வந்து இம்சை பண்ணும். அதேபோல், எம்.ஆர்.ராதாவின் பேச்சைக் கேட்டு நடந்து கொண்டாலும் மனதில் உளைச்சலுடனும் கவலையுடனும் இருப்பார் அசோகன். கோர்ட்டுக்குக் கிளம்பும் வேளையில் வாசலில், நெஞ்சுவலி வந்து மயங்கிச்சரியும் சுப்பையா இறப்பார். எதிரணியாகப் பிரிந்திருந்தாலும் அப்பாவின் நிலை கண்டு ஓடிவரும் அசோகன் விபத்தில் சிக்கிக்கொள்வார். கால் இழப்பார்.

பிறகு அசோகன் மனம் மாறுவார். மாமனார் வீட்டில் இருந்து வெளியேறி, அம்மா, தம்பி இருக்கும் வீட்டுக்கே வந்துவிடுவார். எவ்வளவு பேர் மனம் மாறினாலும் எம் ஆர்.ராதா மட்டும் குணம் மாறாமல் குரூரத்துடனேயே இருப்பார்.  இதைத்தொடர்ந்து அந்தக் குடும்பத்துக்குப் பிரச்னைக்கும் மேல் பிரச்னை; சிக்கலுக்கு மேல் சிக்கல்; துயரங்களுக்கு மேல் துயரம்!

இவ்வளவு துக்கங்களுக்கு நடுவே அந்தப் பையன் கமலுக்கு ‘தாத்தா இல்லை’ என்பதுதான் பெருங்கவலை. ‘போய் ஆத்துல குதி. உங்க தாத்தாகிட்ட போகலாம்’ என்று எம்.ஆர்.ராதா சொல்ல, ஆற்றில் குதிக்க ஓடுவார் கமல். இதை அறிந்து, ஜெமினி ஓடுவார். விஜயகுமாரி தற்கொலைக்காக ஓடுவார். அங்கே கமலை நிறுத்தி விஜயகுமாரி கேட்க, கமல் விவரம் சொல்ல, கமலைக் காப்பாற்ற விஜயகுமாரி ஆற்றில் குதிக்க, இருவரையும் காப்பாற்றுவார் ஜெமினி.

இறுதியில் எல்லா விவரமும் சொல்லி, இருவரையும் சேர்த்துவைத்துவிட்டு இறப்பார் விஜயகுமாரி. எல்லோரும் ஒற்றுமையுடன் வாழத் தொடங்குவார்கள்; இயக்குநர் கே.சங்கர் ‘வணக்கம்’ போட்டு, ‘வீட்டுக்குக் கிளம்புங்க, அடுத்த ஷோ ஆரம்பமாகப்போவுது’ என்பது போல், ஸ்கீரினில் படம் முடிந்திருக்கும். வெள்ளித்திரை தெரியும். நம் மனத்திரையில் அந்தக் குடும்பத்து சோகங்கள் ஒவ்வொன்றாக ஓடிக்கொண்டே இருக்கும்!

உள்ளுக்குள், உள்ளுக்குள்… என்று ஏகப்பட்ட சிக்கல்களையும் பிணக்குகளையும் உறவுகளுக்குள் வைத்துக்கொண்டு கதை பண்ணியிருப்பதும் அதைப் படமாக்குவதும் லேசுப்பட்ட விஷயமிலை. எம்.எஸ்.சோலைமலை கதை வசனம் எழுதினார். மிகச்சிறந்த கதாசிரியர் இவர். கவியரசு கண்ணதாசன் பாடல்கள் மொத்தத்தையும் எழுதினார். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்தார்கள். கருப்புவெள்ளைப் படம்தான்; ஆனாலும் ஒவ்வொரு காட்சியும் ஒற்றிக்கொள்ளும்படியாக இருக்கும்.

‘ஏண்டா… சரியான லூஸாடா நீ? ஒருவேளை இது கலர்ப்படமா இருந்தாலும் ரெண்டுமூணு தடவை பாக்கலாம். இது பிளாக் அண்ட் ஒயிட் படமாம்ல..! எங்க அத்தை சொல்லுச்சு. இதைப் போய், இம்புட்டு தடவை பாக்கறியேடா?’ என்று ஏதோ காலை 11 மணி ஷோவை, முகத்தை மறைத்துக்கொண்டு பார்த்துவிட்டு, மாட்டிக்கொண்டால் எப்படி இருக்குமோ… அப்படித்தான் என்னைப் பார்த்தார்கள். ஆனால் காலாண்டுத் தேர்வு லீவுக்கு, காரைக்குடி கோட்டையூரில் உள்ள தாத்தாதான் எனக்கு ‘சபாஷ்’ சொல்லி மார்க் போட்டார். அவரிடம் கதையையும் வசனங்களையும் சொல்லிச் சொல்லி, கைத்தட்டல்களை அள்ளிக்கொண்டேன்.

அதுமட்டுமா? ராசாக்கிளி மாமா கடையில் எனக்கு கடலை அச்சு (கடலை மிட்டாய்) மிட்டாயும் நன்னாரி சர்பத்தும் வாங்கித்தந்தார் தாத்தா. பிறகு கோட்டையூரில் அப்போதிருந்த லட்சுமி தியேட்டரில் தாத்தாவுடன் ‘பாத காணிக்கை’ பார்த்துவிட்டு, தெருவிளக்கு இல்லாத அந்தக் காலத்தில், அரிக்கேன் விளக்கை ஒருகையிலும் என்னை மறுகையிலும், எனக்குள் இருக்கிற சினிமாவை புத்திக்குள்ளும் வாங்கி ஏந்தி, தாங்கிக் கொண்டார் தாத்தா!

சரவணா பிலிம்ஸ் ஜி.என்.வேலுமணி தயாரிக்க, கே.சங்கர் இயக்கினார். எஸ்.வி.சுப்பையாவும் எம்.வி.ராஜம்மாவும் தந்ததெல்லாம் அபார எக்ஸிபிரஷன்கள். அசோகன் இயல்பான, கொஞ்சம் அதீதமாக நடித்து அசத்தினார். ஜெமினியின் மென்மையான நடிப்பும் சாவித்திரி, விஜயகுமாரியின் பாந்தமான நடிப்பும் நம்மை அசரடிக்கும். சந்திரபாபுவின் காமெடி ரசிக்கவைத்தது. எம்.ஆர்.ராதா எனும் நடிப்பு அசுரனைச் சொல்லவா வேண்டும்? பட்டாளத்து வீராச்சாமி எனும் கேரக்டர் அவருக்கு! படம் முழுக்க, கால்களை ஒருமாதிரி தூக்கித்தூக்கி நடப்பதும் அவருடைய பாடி லாங்வேஜும் மிரட்டியெடுக்கும். முக்கியமாக… அந்தச் சிறுவன் கமல்… படம் நெடுக, அவர் வரும் காட்சிகளில் எல்லாமே அசத்தியிருப்பார்.

சி.கே.சரஸ்வதியை நக்கலடிப்பதும், எம்வி.ராஜம்மாவிடம் பாட்டி பாட்டி என உருகுவதும், எம்.ஆர்.ராதா போல் குரல் மாற்றி நடித்துக் காட்டுவதும், க்ளைமாக்ஸில், ‘தாத்தா சொன்னதை யாருமே செய்யல’ என்று பாட்டியிடம், அப்பாவிடம், சாவித்திரியிடம், விஜயகுமாரியிடம் என்று வரிசையாகாச் சொல்லுவதும் என கலைஞானி கமல், தம்மாத்துண்டு வயசிலேயே கலக்கியிருப்பார்! 64 ஆண்டுகளுக்கு முன்பு வந்த படமாக இருந்தாலும்… ஒரு படத்துக்குள் என்னென்ன தேவை, எவ்வளவு அவசியம், சிட்டிகை, லிட்டர், கிலோ கணக்குகள் என அளந்து தந்த  சினிமாப் பாடம் இது என்பதாகவும் நான் உணருகிறேன்!

உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட ‘பாத காணிக்கை’யின் எல்லாப் பாடல்களும் செம ஹிட்டு! ’காதல் என்பது வரை’ பாட்டு ஒருவிதம். ‘சொன்னதெல்லாம் நடந்திடுமா சொல்லடி கிளியே’ என்றொரு பாடல் அதுவொரு ரகம். ‘உனது மலர் கொடியிலே எனது மலர் கையிலே’ என்றொரு பாடல் அழவைத்துவிடும். சந்திரபாபுவின் ‘தனியா தவிக்கிற வயசு’  குதூகலிக்கச் செய்துவிடும்.

’அத்தை மகனே போய் வரவா’ என்றொரு பாடல். இது சாவித்திரிக்கு. ‘பூஜைக்கு வந்த மலரே வா’ பாடல். இது விஜயகுமாரிக்கு. க்ளைமாக்ஸில் ‘எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்’ என்ற பாட்டு, காதல், கல்யாணத் தோல்விக்கான ஒத்தடம்! தோற்றுப் போன காதலர்கள் எல்லோருக்கும் இந்தப் பாடல்தான் மயிலிறகு! ஹைலைட் பாடல்… வாழ்க்கையை தத்துவமாக, எளிய வரிகளில், நான்கரை நிமிடப் பாடலுக்குள் சாறு பிழிந்து கொடுத்தார் கண்ணதாசன். 

குரலால் கலங்கவைத்தார் டி.எம்.எஸ். ‘வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?’ என்கிற பாடல், காலம் கடந்தும் இன்றைக்கும் காயப்பட்ட மனங்களுக்கு மருந்து போட்டுக்கொண்டே இருக்கிறது.

உடற்காயங்களுக்கு மருந்து கொடுக்க மருத்துவர்கள் நிறைந்திருக்கிறார்கள். மனக்காயங்களுக்கு மருந்து போடத்தான் பாட்டு, வசனம், இசை, குரல், நடிப்பு என சினிமா என இன்னும் இயங்கிக்கொண்டே இருக்கிறது; முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here