தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், த.வெ.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் முதல்-அமைச்சர் விஜய் நாளை மீண்டும் தாராபுரத்தில் ரோடு ஷோ மேற்கொள்ள உள்ளார். திறந்தவெளி பிரசார வாகனத்தில் பயணித்து, தொகுதி முழுவதும் மக்களை நேரடியாக சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
அக்டோபர் 6-ல் இடைத்தேர்தல் :
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந்தேதி நடைபெற உள்ளது. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் களத்தில் இருப்பதால் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தொகுதிகளில் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இறுதிக்கட்டத்தை எட்டிய பிரசாரம் :
இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களது இறுதிக்கட்ட பிரசாரத்தை வேகப்படுத்தியுள்ளன.
முதல்-அமைச்சர் விஜய் ஏற்கனவே தாராபுரம் தொகுதியில் கடந்த 30-ந்தேதி ரோடு ஷோ மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு த.வெ.க. வேட்பாளர் சத்ய பாமாவுக்கு ஆதரவு கோரினார்.
மதுராந்தகத்தில் ரோடு ஷோ :
இதற்கிடையே நேற்று மதுராந்தகம் தொகுதியிலும் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டார். பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்த அவர், வழியில் டிராக்டர் ஓட்டியது மற்றும் தேநீர் கடையில் டீ குடித்தது உள்ளிட்ட நிகழ்வுகள் கவனம் பெற்றன.
இதையடுத்து தாராபுரம் தொகுதியிலும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார்.
30 கி.மீ. தூரம் திறந்த வேனில் பயணம் :
நாளை தாராபுரத்தில் நடைபெற உள்ள பிரசாரத்தில் பொதுக்கூட்டம் இல்லாமல், ரோடு ஷோ மூலம் தொகுதி மக்களை சந்திப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இதற்காக சென்னையில் இருந்து காலை 11 மணியளவில் தனி விமானம் மூலம் கோவை வரும் விஜய், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் செல்ல உள்ளார். அவரது வருகைக்காக ஹெலிபேடு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தாராபுரம் சென்றதும் மாருதி நகர் பகுதியில் இருந்து பிரசார வாகனத்தில் ஏறி ரோடு ஷோவை தொடங்க உள்ளார். சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகள் என 40-க்கும் மேற்பட்ட இடங்கள் வழியாக அவர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சுமார் 30 கிலோமீட்டர் தூரம் திறந்தவெளி வேனில் பயணிக்கும் விஜய், வழிநெடுகிலும் பொதுமக்களை சந்தித்து த.வெ.க. வேட்பாளருக்கு ஆதரவு கோர உள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூடுதல் ஏற்பாடுகள் :
நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் விஜய்யை பார்ப்பதற்கும், அவரது பிரசாரத்தை நேரில் காண்பதற்கும் அதிகளவில் பொதுமக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தாராபுரம் தொகுதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங் தலைமையில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.
சி.சி.டி.வி. மற்றும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு :
விஜய் பயணிக்க உள்ள சாலைகள் முழுவதும் போலீசாரின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதுடன், துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்பாக நின்று ரோடு ஷோவை பார்ப்பதற்காக சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போலீசார் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளனர்.
தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தாராபுரத்தில் விஜய்யின் இந்த இறுதிக்கட்ட ரோடு ஷோ தேர்தல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.





