back to top
21.3 C
London
Tuesday, September 29, 2026
No menu items!
Homeசினிமா47 ஆண்டுகளாக மனதை விட்டு அகலாத ‘உதிரிப்பூக்கள்’... இளையராஜாவின் இசை மாயாஜாலம்! - Kumudam

47 ஆண்டுகளாக மனதை விட்டு அகலாத ‘உதிரிப்பூக்கள்’… இளையராஜாவின் இசை மாயாஜாலம்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


கொஞ்சம் பேச்சு… கொஞ்சம் சினிமா! – வி.ராம்ஜி

யாராவது நமக்குத் தெரிந்தவர் திடீரென பல இடைவெளிக்குப் பிறகு போன் செய்தாலோ, நேரில் வீட்டுக்கு வந்தாலோ… ‘அட… அத்திப்பூத்தது மாதிரி வந்திருக்கே’ என்று அதிசயிப்போம். இப்படி அத்திப்பூபோல், எப்போதாவது ஒரு படம் வரும்; உலுக்கியெடுக்கும்; ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகமும் கொண்டாடிக் கூத்தாடும்; ரசிகர்கள் சிலிர்ப்பார்கள். இன்றைக்கும் ஒரு படத்தைப் பற்றி, வியந்து, நெகிழ்ந்து, நெக்குருகி, கனத்த இதயத்துடன் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், அது சினிமாவில் பூத்த பூ… அத்திப்பூ. அந்த அத்திப்பூக்கள்தான்… ‘உதிரிப்பூக்கள்’. படத்தைப் பார்த்துவிட்டுத்தானே அழுவோம். நானெல்லாம் அம்மாவுடன் சிறுவனும் சிறுமியும் நிற்கிற அந்த போஸ்டரைப் பார்த்தே விசும்பியிருக்கிறேன். 

ஏனோ தெரியவில்லை. ‘டோரத்தி’யின் ‘முத்துமணி’ பாடலைக் கேட்டுக்கொண்டே இருந்த போது, ‘உதிரிப்பூக்கள்’ போஸ்டர் நினைவுக்கு வந்து நிமிண்டியது. இரவு நேரங்களில், படத்தின் டைட்டில், வருகிற பெயர்கள், எந்த இசை வரும்போது இளையராஜாவின் பெயர் டைட்டிலில் வருகிறது என்றெல்லாம் கவனிப்பேன். அப்படி இரண்டு நாட்களுக்கு முன்பு, ‘உதிரிப்பூக்கள்’ டைட்டில் பார்த்தேன். ‘ஏய்… தன்ன தானனா நா’ என்கிற இளையராஜா ஹம்மிங்குடன் நகர்ந்த டைட்டிலில் நான் என்னையே இழந்தேன். ‘ரிமோட்’டை அப்படியே ஓரமாக, ஓரங்கட்டினேன். முழுவதுமாகப் பார்த்தேன். மீண்டுமொரு முறை செத்தேன்; ஜனித்தேன்! 

அழகிய கிராமம். ரயில்வே ஸ்டேஷன். ரயிலில் சரத்பாபு மனைவியுடன் வந்து இறங்குவார். ஹெல்த் சென்டர் அதிகாரி. அதே ரயிலில், அதே ஊருக்கு சந்தர் வந்து இறங்குவார். இவர் பள்ளிக்கு வந்திருக்கும் வாத்தியார். அங்கே பள்ளி நிர்வாகி விஜயன். பெயர்தான் சுந்தரவடிவு. சுந்தரம் என்றாலும் வடிவு என்றாலும் அழகுதான். ஆனால் அருவெறுக்கத்தக்க குணம் கொண்ட ஆசாமி. அந்த விஜயனுக்கு அடுத்தவர்கள் நன்றாக இருப்பது பிடிக்காது. நல்ல சட்டை போட்டால் பிடிக்காது. அடுத்தவனுக்கு நல்ல பொண்டாட்டி அமைவது கூட பிடிக்காது. சாடிஸ்ட் எனும் ஆங்கில வார்த்தைதான் இந்தக் கிராமத்துக்காரருக்குப் பொருத்தமாக இருக்கும்! 

விஜயனின் மனைவி அஸ்வினி. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மனைவியை எப்போதும் திட்டிக் கொண்டிருப்பதுதான் விஜயனுக்கு வேலை. ‘உங்க அப்பாவையும் தங்கச்சியையும் ஊரை விட்டு போகச் சொல்லு’ என்பார். ‘உங்க அப்பனை, எங்கிட்ட வாங்கின கடனை அடைக்கச் சொல்லு’ என்பார். இப்படித்தான் அஸ்வினியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் போய்க் கொண்டே இருந்தது. முடி திருத்தும் சாமிக்கண்ணு,  ஓடிப்போன மனைவி குறித்து சிந்தித்துக் கொண்டே இருக்கும் குமரிமுத்து. வயோதிகமும் வறுமையும் கலந்து கட்டி சோகத்தில் ஆழ்ந்திருக்கும் அஸ்வினியின் அப்பா சாருஹாசன், கவலைகளைத் தூரப்போட்டுவிட்டு, கஷ்டம் மறந்து சிரித்து வளைய வரும் மதுமாலினி. இவ்வளவுக்கு இவ்வளவுதான் கதாபாத்திரங்கள்! 

புதிதாக வந்த வாத்தியாரும் அஸ்வினியின் தங்கையும் காதலிப்பார்கள். ’அவளை நீங்களே ஏன் கல்யாணம் செய்துகொள்ளக்கூடாது’ என விஜயனுக்கு தூபம் போடுவார் அல்லக்கை ஒருவர். அதற்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடியும். ‘அப்படி நடந்துவிடக்கூடாது’ என்று பாடம் பார்த்தவர்களெல்லாரும் வேண்டிக்கொண்டார்கள். 

ஊரில், ஹெல்த் சென்டருக்கு வந்திருக்கும் சரத்பாபு, ஒருகாலத்தில் அஸ்வினியைப் பெண் கேட்டிருப்பார். அவளின் துயரங்களை அறிந்துகொள்வார். இந்த விஷயம், விஜயனுக்குத் தெரியவர… இதைக் காரணம் காட்டியே மனைவியின் தங்கையை கட்டிக்கொள்ளப் பார்ப்பார். ஆனால், அது நடக்காது. விஷயம் பஞ்சாயத்து வரை போகும். அஸ்வினியை தரம் தாழ்த்திப் பேசுவார். ’அறுத்து விடுகிறேன்’ என்பார். பிரிந்துவிடுவார்கள். அஸ்வினி, அப்பாவின் வீட்டில் இருக்க, குழந்தைகள் விஜயனிடம் இருப்பார்கள். நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாகிவிடுவார் அஸ்வினி. பார்க்கக்கூட வராமல் இருப்பார் விஜயன். கொடூரனுக்கு வார்க்கப்பட்டவள், நரகத்திலிருந்து மீண்டவளாக, படுக்கையிலேயே இறந்துவிடுவார் அஸ்வினி.

இதன் பின்னர், வாத்தியாருக்கும் அஸ்வினி தங்கைக்கும் திருமணம் உறுதி செய்யப்படும். இதனிடையே அஸ்வினி இறந்த உடனேயே விஜயன் வேறொருத்தியைக் கல்யாணம் செய்து, அடுத்த வாழ்க்கைக்குள் நுழைந்திருப்பார். ஆக்கிப்போடவும் வேட்டிதுணியை துவைக்கவும் இரவு சுகத்துக்கும் ஒருத்தி வேணுமே அவருக்கு! இந்தநிலையில், திருமணத்துக்கு முதல்நாள், அக்கா கணவரான விஜயன் வீட்டுக்கு வருவார் தங்கச்சி. ‘என் அக்கா பசங்களை எங்கிட்ட குடுத்துரு’ என்பார். கதவு சார்த்தி, அவளின் ஆடைகளை ஒவ்வொன்றாக உருவிப் போடுவார் விஜயன். இதுதான் உனக்கு தண்டனை. உன் கல்யாணத்துக்கு என் ஆசீர்வாதம். சாகறவரைக்கும் இதை நீ மறக்கவே மாட்டே’ என்பார்.

விஷயம் ஊருக்குத் தெரியவரும். ஊரே கொந்தளிக்கும். திரண்டுவந்து, வீட்டை முற்றுகையிடும். விஜயனைப் பிடிக்கும். ஊர்மக்கள் ஆற்றங்கரைக்கு விஜயனை அழைத்து வருவார்கள். ’’நீயே ஆத்துல மூழ்கி செத்துப்போயிரு. நீ செத்தாதான் இந்த ஊரு நிம்மதியா இருக்கும்’ என்று ஊர் சொல்லும். அனைத்தையும் மெளனமாக ஏற்றுக்கொள்ளும் விஜயன், ‘நீங்களாம் உங்களை மாதிரி என்னையை மாத்தணும்னு நெனைச்சீங்க. ஆனா என்னை மாதிரி, உங்க எல்லாரையும் மாத்திட்டேன். நான் செஞ்சதுலயே மிகப்பெரிய தவறு இதுதான்’ என்று சொல்லிவிட்டு, ஆற்றில் இறங்குவார்; மூழ்குவார்; இறப்பார்! அம்மாவை இழந்து, அப்பாவையும் இழந்து, அந்த இரண்டு குழந்தைகளும் கரையோரத்தில் அப்பா ஒதுங்கி வந்துவிடமாட்டாரா… என்று கரையையோட்டியே ஓடிவருவார்கள். அவர்கள்தான்உதிரிப்பூக்கள்! அப்பாவைத் தேடியபடி ஓடிக்கொண்டே இருக்க… படமோ முடிந்துவிட்டிருக்கும்.

சைலண்ட் கில்லர் என்ற வாசகம் விஜயனுக்குப் பொருந்தும். இயலாமையால் புழுங்கும் தந்தை சாருஹாசன், அன்பே இல்லாத கணவனிடம் மாட்டிக்கொண்டு வேதனைப்படும் அஸ்வினி, ‘உங்க பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். சம்மதமா’ என்று கேட்கும் சரத்பாபு, பிறகு வேறொரு பெண்ணை கல்யாணம் செய்துகொண்டு ஊருக்கு வந்திருக்க, அஸ்வினி படும் வேதனையில் தவிக்கும் ஈர மனசு, விடலை மாறாதிருந்தும் அக்கா குழந்தைகள் மீது வாஞ்சையுடன் இருக்கும் மதுமாலினி, ‘இன்னும் பையனுக்கு மொட்டை போடலியேம்மா’ என்று கேட்கும் முடிதிருத்தும் சாமிக்கண்ணு, ரெண்டாந்தாரமாய் வாக்கப்பட்டு மாட்டிக்கொண்டதை பளிச்சென்று சொல்லும் விஜயனின் மனைவி என அத்தனைக் கதாபாத்திரங்களும் வாழ்ந்திருப்பார்கள். முக்கியமாக, அஸ்வினியின் குழந்தைகளாக படம் முழுக்க வசனமே இல்லாமல் காஜா ஷெரீப்பும், பேபி அஞ்சுவும் நம் மனசைப் போட்டு பிழிந்தெடுத்துவிடுவார்கள்! 

‘உங்க பொண்ணை ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என்பார் விஜயன். ‘நான் என் பொண்ணுக்கு அப்பாவாவே இருக்கேன். புரோக்கராக விரும்பலை’ என்பார் சாருஹாசன். கை விரல் ஆட்டி விளையாடிக் கொண்டிருப்பார் மதுமாலினி. என்னம்மா இது என்பார் சாருஹாசன். விளையாட்டுப்பா என்பார். ‘நாளைக்கு காலைல இந்த ஊரை விட்டு போறோம்’ என்பார் அப்பா. ஏம்பா என்று கேட்பார் மகள்.  ‘இதுவும் ஒரு விளையாட்டுதாம்மா’ என்பார். ஆனால் இதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளமுடியாமல், ஒவ்வொரு ரசிகனும் கைபிசைந்து தவித்துக் கலங்கினான். 

அஸ்வினி சாகக்கிடப்பார். கன்னம் தடவி, முத்தமிட்டு, கை பிடித்திருப்பார் குழந்தை அஞ்சு. அஸ்வினி இறந்துவிடுவார். அவரின் வளையல்களை தள்ளி விளையாடிக்கொண்டே இருக்கும் அந்தக் குழந்தை. இதை வெண் திரையில் பார்க்கிறோம்தான் என்றாலும், அதையெல்லாம் மறந்துவிட்டு, அந்தப் பிஞ்சு அஞ்சுவை அப்படியே வாரியணைத்துக்கொள்ள மனம் அல்லாடும் நமக்கு! அஸ்வினி இறந்ததும், மகனான சிறுவன் காஜாஷெரீப் மொட்டையடிக்க வேண்டும். ‘என்னால மொட்டையடிக்க முடியாதுங்க.

ஒவ்வொரு முறையும் கேட்டுக்கிட்டே இருந்தேன். காலம் வரட்டும் காலம் வரட்டும்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க அம்மா. இதுதான் அந்தக்காலம்னு நினைக்கும்போது, என்னால முடியலீங்க’ என்று கதறுவார் சாமிக்கண்ணு. இவரைப்போன்ற நடிகர்களை நம் தமிழ் சினிமா இன்னும் பயன்படுத்திக்கலியே… எனும் கோபம் ஒரு பக்கம் வரத்தான் செய்தது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு, என் அப்பா இறந்த தருணத்தில், சலூன் கடை வைத்திருக்கும் என் நண்பன் பழனிதான் என் தாடியையும் மீசையும் மழித்தான். அப்போது 40 வயது கடந்திருந்தாலும் ஏனோ அந்த காஜாஷெரீப் வயதுக்காரனாக என்னை நினைத்துக்கொண்டேன்.’மாப்ளே…’ என்று பழனி என்னைக் கட்டுக்கொண்டு அழுதான். .

சின்ன கிராமம். கிராமத்தின் நாலு தெருக்கள். ஆறு. ஆற்றங்கரை. இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு, அசோக்குமாரின் கேமிரா ஜாலம் காட்டியிருக்கும். எழுத்தாளர் புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ கதையை, சிந்தாமல், சிதறாமல், அழகியல் கோர்த்து,  திரைக்கதையாக்கி, காவியம் படைத்திருப்பார் இயக்குநர் மகேந்திரன்.

ஆற்றங்கரையில் விஜயனும் சரத்பாபுவும் பேசிக்கொள்வார்கள். கருத்து மோதல் கைகலப்பாகிவிடும்.  ஆனால் சண்டையைக் காட்சிப்படுத்தாமல், ஆறு, செடிகொடி, தரையில் விழுந்திருக்கும் மூக்குக்கண்ணாடி, வீசப்பட்ட துண்டு, கரையில் உள்ள நாணல், எங்கிருந்தோ ஒரு சிறுவன் தலை திருப்பிப் பார்ப்பது என்றெல்லாம் காட்டிவிட்டு, பிறகு ரத்தம் வழியும் மூக்கைக் கழுவிக்கொண்டிருப்பார் சரத்பாபு என்று காட்டுவார் மகேந்திரன். 
மச்சினியின் உடலில் இருந்து ஒவ்வொரு ஆடையாகக் கழற்றிப் போடுவார் விஜயன். வார்த்தைக்கு வார்த்தை ‘ஆசீர்வாதம் ஆசீர்வாதம்’ என்பார். விஜயனை அடித்துக் கொன்றுவிடலாமா என்று எனக்கெல்லாம் தோன்றியது. .

‘வீட்டை விட்டு போகவிடாம என்னைத் தடுத்து நிறுத்தற பலம் உங்களுக்கு இருக்குதான். ஆனா, உங்களுக்குப் போடுற சாப்பாட்டுல, விஷம் கலந்து உங்களைக் கொன்ன பாவத்துக்கு என்னை ஆளாக்கிடாதீங்க’ என்று விஜயனின் இரண்டாவது மனைவி சொல்லும் போது, தியேட்டரே கைத்தட்டி, ‘அதைச் செய் முதல்ல, அதைச் செய் முதல்ல’ என்று அவள் சொல்வதை ஆமோதித்து ஆர்ப்பரித்தார்கள் ரசிகர்கள். ஆணாதிக்கத்தின் மொத்த உருவமென காட்சியாகியிருந்தார் விஜயன். 

ஊர் சூழ்ந்திருக்கும். செய்த தப்புக்குத் தண்டனை. ஆற்றில் இறங்கி மூழ்கிச் சாக யத்தனிக்கும் தருணம். தன் குழந்தைகளை அழைப்பார் விஜயன். ‘நல்லாப் படிக்கணும் நல்லவன்னு பேரெடுக்கணும். போயிட்டு வாங்க. அப்பாவுக்கு முத்தம் கொடுங்க’ என்பார். படத்தின் 14 ரீல் வரை விஜயனைக் கொன்னு போடணும் என்று நினைத்த நம் மனசு, ’போய்த்தொலையுது. மன்னிச்சிருவோம்’ என்று அல்லாடும்; புலம்பும்; தலையில் அடித்துக்கொள்ளும். கடைசி ரீலில், கடைசிக் காட்சியில், கடைசி வசனத்தில் ‘கெட்டகுமாரன் திருந்தியகுமாரன்’ ஆன பைபிள் கதையோ என்னவோ என்னை தூங்கவே விடவில்லை. 

’உதிரிப்பூக்கள்’ படத்தின் நாயகன் இளையராஜாதான். பின்னணி இசையின் மூலமாக, கதையின் கனத்தை, காட்சிகளின் சோகத்தை, சோகத்தின் வீரியத்தை, வீரியத்தில் உறைந்து கிடக்கும் துயரத்தை இசை வழியே நமக்குள் கடத்திவிடுவார் இளையராஜா. அந்த ‘அழகிய கண்ணே…’ பாடல் கேட்டு, மனம் கனக்காமல் எவருமே இருக்கமுடியாது. ‘உதிரிப்பூக்கள்’ மாதிரி ஒரு படம் எடுக்கமுடியாது என்று இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.   கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

‘உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தின் உதவி இயக்குநர் யார் கண்ணன் எனக்கு நல்ல நண்பர். அவரிடம் பேச வாய்ப்புக் கிடைக்கிற அரைமணி நேரத்தில், 25 நிமிடங்களேனும் மகேந்திரன் சார் பற்றித்தான் பேசுவோம். 

கதை விவாதம், வசனம் எழுதுவது, படப்பிடிப்புக்குச் செல்வது என்று எந்த வேலைகளுக்கும் அதிகமாகச் செலவெல்லாம் செய்யமாட்டார் மகேந்திரன் சார். ’உதிரிப்பூக்கள்’ படம் முழுக்க மேட்டுப்பாளையம் மற்றும் பவானி ஆற்றங்கரை ஆகிய பகுதிகளில் மட்டுமே நடந்தது. நாங்களும் அங்கே சாதாரண ஹோட்டலில்தான் தங்கியிருந்தோம். ‘அழகிய கண்ணே’ பாடலுக்கு மட்டும் ஊட்டிக்குச் சென்று படமாக்கினோம்.அதுவும் மொத்த யூனிட்டும் செல்லவில்லை. குறிப்பிட்ட சிலர் மட்டுமே பாடலைப் படம் பிடிக்கச் சென்றோம்.

‘சிற்றன்னை’ என்கிற புதுமைப்பித்தனின் கதையை மூலக்கருவாகக் கொண்டுதான் இந்தப் படம் எடுக்கப்பட்டது. விஜிபியில் டிஸ்கஷன், கம்போஸிங் என நடந்துகொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்கு ‘உதிரிப்பூக்கள்’ என்று பெயர் வைத்ததை மறக்கவே முடியாது. டைரக்டர் மகேந்திரன் சார், இளையராஜா சார் என எல்லோரும் அங்கே இருந்தோம். விஜிபியில், இளையராஜாவும் மகேந்திரன் சாரும் நடந்துகொண்டிருக்க, நான் பின்னால் நடந்துசென்றேன். அப்போது, கதையைப் பற்றி, ‘சிற்றன்னை’ பற்றி பேசிக்கொண்டே வந்தார் மகேந்திரன் சார். ‘படத்துக்கு நல்ல டைட்டிலா வைக்கணும்’ என்றார் டைரக்டர். உடனே இளையராஜா சொன்னதுதான் ‘உதிரிப்பூக்கள்’ ‘’ என்று அந்தப் பூக்களில் உதிராத பூவாக இருக்கும் உதவி இயக்குநராக இருந்த, இப்போது நடித்துக்கொண்டிருக்கிற யார் கண்ணன் சார் சொன்னவிஷயங்கள்… இந்த சினிமா ரசிகனுக்கு இயற்கையோ கடவுளோ வழங்கிய கொடை என்றுதான் சொல்லவேண்டும்! 

‘உதிரிப்பூக்கள்’ படத்தின் காட்சிகள், வசனங்கள், அவ்வளவு ஏன்… சிறியதான உதவி செய்ததற்காக அவரை தயாரிப்பாளராக்கிய மகேந்திரன் சார்… என்று பூக்கடையே மனதுக்குள் மணம் கமழ இருக்கிறது. இதை இன்னொரு அத்தியாயங்களில் சொல்கிறேன். 

1979ஆம் ஆண்டு வெளியானது ‘உதிரிப்பூக்கள்!’ 47 ஆண்டுகளாகிவிட்டன. 50 வருடங்களை நெருங்குகிற ‘உதிரிப்பூக்கள்’ படத்தையும் இயக்குநர் மகேந்திரன் சாரையும் சொல்லிவியப்பதற்கும் மலைப்பதற்குமான தமிழ் சினிமா இயக்குநர்கள் ஏராளம். மிகப்பெரிய வெற்றியைத் தொட்ட இயக்குநர்களாகட்டும்…புதிதாக வந்து முதல் படத்தில் ஜெயித்துப் பேரெடுத்தவர்களாகட்டும்… ‘உதிரிப்பூக்கள்’ காவியத்தைக் கொண்டாடுகிறார்கள்; இன்னும் கொண்டாடிக்கொண்டே இருப்பார்கள்! 

ஆனால் என்ன… ‘உதிரிப்பூக்கள்’ படத்துக்கு இணையாக ஒரேயொரு பூவைக் கூட எடுப்பதற்கு இங்கே எவரும் இல்லை; இதுதான் உண்மை!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here