back to top
24.7 C
London
Tuesday, September 22, 2026
No menu items!
Homeசினிமா"கன்னிப்பருவத்திலே"படத்தில் நடந்த சுவாரஸ்யங்கள்...டார்ச்சர் வில்லனாக பாக்யராஜ்! - Kumudam

“கன்னிப்பருவத்திலே”படத்தில் நடந்த சுவாரஸ்யங்கள்…டார்ச்சர் வில்லனாக பாக்யராஜ்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



கொஞ்சம் பேச்சு… கொஞ்சம் சினிமா! – வி.ராம்ஜி

சபலம் என்பது தடக்கென்று எப்போதாவது நடந்துவிடக்கூடியது. நம் பலத்தையே வேருடன் அழிக்கச் செய்வது. இந்த சபலத்தில் சிக்கிக்கொண்டால், குறுகுறுவென நெஞ்சை அதுவே குத்திப் போடும். இப்படியான சின்ன சபலத்துக்குள் தன்னை இழப்பவள், அதையடுத்து ஒவ்வொரு நொடியும் சித்திரவதைக்கும் பாலியல் டார்ச்சருக்கும் உள்ளானால் எப்படியிருக்கும்? இன்றைக்கு எவனாவது இப்படிப் பாலியல் தொந்தரவுகள் செய்து அத்துமீறினால், வாட்ஸ் அப் வாய்ஸ், செல்போன் வீடியோ என்றெல்லாம் வைத்துக்கொண்டு, ‘டிராக் ரிக்கார்ட்’ எடுத்து, அவனுங்களை உண்டு இல்லையென செய்துவிடமுடியும். பாவம் கண்ணம்மா…அவள் சிக்கிக்கொண்ட காலத்தில் இந்த டெக்னாலஜியெல்லாம் இல்லை.

நண்பனின் மனைவியிடம் சல்லாபிக்கிறான். பிறகு அதையே ‘ப்ளாக் மெயில்’ செய்து ருசிக்கப்பார்க்கிறான். இப்படி பெண்ணொருத்தி மாட்டிக்கொண்டதும் அவளுக்கும் நண்பனுக்கும் துரோகம் செய்யும் வஞ்சக நண்பனும் தமிழ் சினிமாவுக்கு புதுசுதான்! அதுதான் ‘கன்னிப்பருவத்திலே!’ கிராமம்.

அந்தக் கிராமத்தில் நடக்கும் மஞ்சுவிரட்டில் காளையை அடக்குகிறான் சுப்பையா. கதையின் நாயகன். இவனுடைய வீரத்திலும் கண்ணியத்திலும் மனதைப் பறிகொடுக்கிறாள் கண்ணம்மா. இருவரும் விரும்புகிறார்கள். இந்த நிலையில், வெளியூருக்குப் படிக்கச் சென்ற சுப்பையாவின் உயிர் நண்பன் சீனு வருகிறான். கண்ணம்மாவை சுப்பையா பெண் கேட்க, அவளுடைய வீடு மறுக்கிறது. வேறொருவருக்கு மணம் முடிக்க நினைக்கிறது. பிறகு எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். 

முதலிரவு. இருவரும் கூடுகின்றனர். அப்போது தடக்கென்று நெஞ்சு வலியால் துடிக்கும் சுப்பையா விலகுகிறான். படபடப்புடன் இருந்து பிறகு ஆசுவாசமாகி, அப்படியே மூர்ச்சையில் தூங்கிப் போகிறான். மாடு பிடிக்கும்போது, மாடு முட்டி கீழே விழும் வேளையில், உயிர் நிலையில் அடிபட்டுவிட்டதால், தாம்பத்தியம் வைத்துக்கொள்ள முடியாது என மருத்துவர் சொல்கிறார். அதிர்கிறாள் மனைவி. எப்போது சரியாகும், சரியாகுமா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும் என மருத்துவர் சொல்ல, இடிந்துபோகிறார்கள் கணவனும் மனைவியும்! ம்.

இந்தநிலையில், சுப்பையாவின் உயிர் நண்பன் சீனு, அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வான். இந்த சமயத்தில், சீனு வரும்போது சுப்பையா வீட்டில் இல்லை. அப்போது சமைத்துக்கொண்டிருக்கும் கண்ணம்மாவின் புடவையில் தீப்பிடித்துவிடுகிறது. எகிறிப்பாய்ந்த சீனு காப்பாற்றுகிறான். இருவரும் ஒருவர் மீது ஒருவராகக் கிடக்கிறார்கள். அப்போது ஏற்படுகிற ஸ்பரிசம்… மனதுக்குள் அவளுக்குள் சபலத்தைத் தூண்டி, தன்னிலை இழக்கச் செய்கிறது. 

அவனுக்கும் சபலம். சீனு அவளை விடமறுக்கிறான். ஒருகட்டத்தில், சுதாரித்து, படக்கென்று எழுந்துவிடுகிறாள். ஆனால், இதைவைத்துக் கொண்டே, அவளை ஒவ்வொரு முறையும் டார்ச்சர் செய்கிறான் சீனு. அவனின் கொடுமையில் இருந்து ஒவ்வொரு தருணமும் தன்னைத் தற்காத்துக்கொண்டே இருக்கிறாள் கண்ணம்மா. இறுதியாக, ‘உன் புருஷனை விட்டுட்டு வா. இந்த ஊரை விட்டே போயிடலாம்’ என அழைக்கிறான் சீனு.

அவள் அவனின் இம்சையில் இருந்து தப்பித்தாளா? அவனுடன் சென்றாளா? நிம்மதியான வாழ்க்கைக்கு என்ன முடிவெடுத்தாள் என்பதை, உணர்வுபூர்வமாக, உணர்ச்சிபூர்வமாக திரைக்கதையாக செதுக்கியதுதான் ‘கன்னிப்பருவத்திலே’ திரைப்படம்! சுப்பையாவாக ராஜேஷ். கண்ணம்மாவாக வடிவுக்கரசி. சீனுவாக பாக்யராஜ். இந்த மூவரைக் கொண்டே கதையும் திரைக்கதையும் கட்டமைக்கப்பட்டிருக்கும்.

ராஜேஷுக்கு இது முதல்படம். ’சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் ‘சித்ரா’ என்கிற சிறிய கேரக்டரில் அறிமுகமான வடிவுக்கரசிக்கு, இதில் ஹீரோயின் ப்ரமோஷன். ’புதிய வார்ப்புகள்’ படத்தில் நாயகனாக நடித்த பாக்யராஜ்தான் அந்தச் சீனு என்கிற கொடூர வில்லன்!

வடிவுக்கரசிதான் படத்தின் மையம். ஒரு பக்கம் குதூகலம், இன்னொரு பக்கம் கணவனின் துயரம், அந்தப் பக்கம் பாக்யராஜ் மீது வருகிற ஆவேசம், இந்தப் பக்கம் எதுவும் செய்ய முடியாத இயலாமை… என மொத்த உணர்வுகளையும் கொட்டித்தீர்த்து, நம்மையெல்லாம் கலங்கடித்திருப்பார் வடிவுக்கரசி! ஒவ்வொரு முறையும் பாக்யராஜ் டார்ச்சர் செய்யும் போதெல்லாம், செய்வதறியாமல் கதறுவார், காலைப்பிடித்துக் கெஞ்சுவார் வடிவுக்கரசி. ‘பாக்யராஜ் மட்டும் கையில கிடைச்சா,அவ்ளோதான்’ என்று படம் பார்க்கிறவர்கள் அப்படி ஆவேசப்பட்டார்கள். கொந்தளித்தார்கள். சாபமெல்லாம் கொடுத்தார்கள். திருச்சி பேலஸ் தியேட்டரில்தான் படம் வெளியானது. பிறகு நூறாவது நாள் விழாவுக்கு, பாக்யராஜும் வடிவுக்கரசியும் ராஜேஷும் வந்து கலகலவெனப் பேசியபோதுதான், பாக்யராஜ் மீதான சாபத்தை வாங்கினார்கள் ரசிகர்கள். அந்தக் காலகட்டத்தில், தமிழ் சினிமாவுக்கு இப்படியொரு வில்லன் மிகப்பெரிய டெர்ரர்தான்!

ராஜேஷின் நடிப்பு, பக்குவப்பட்ட, பண்பட்ட நடிப்பு. காளையை அடக்குவதில் வீரம், வடிவுக்கரசியிடம் கோபமாகப் பேசி உதறுகிற நிதானம், பிறகு காதலித்து கல்யாணம் செய்துகொண்டு அன்பைப் பொழிகிற தருணம், உயிர் நண்பனான சீனு மீது கொண்டிருக்கும் பேரன்பு, மாறாத நம்பிக்கை, ஆண்மை போன நிலையால் நொந்துகொள்ளும் இயலாமை, ‘இன்னொரு கல்யாணத்தைப் பண்ணிக்க புள்ள’ என்று மனைவியைச் சொல்லும் பெருந்தன்மை… என படம் முழுக்க, தன் யதார்த்த நடிப்பால், முதல் படத்திலேயே அட்டகாசம் பண்ணியிருப்பார்  ராஜேஷ்.

படத்துக்கு திரைக்கதையும் வசனமும் எழுதி, வில்லனாகவும் நடித்து எக்கச்சக்க கைத்தட்டல்களையும் ஏகப்பட்ட வசவுகளையும் வாங்கினார் பாக்யராஜ். ஆரம்பத்தில், நண்பனின் மனைவியிடம் நல்லவிதமாக பழகுவது, வடிவுக்கரசியைக் காப்பாற்றும் வேளையில் ஏற்பட்ட ஸபரிசத்தால் சபலப்படுவது, பிறகு அதைக் கொண்டே வடிவுக்கரசியை மிரட்டிப் பணியை வைக்க முயலுவது, வீட்டில் திருமண ஏற்பாடுகளை வேண்டாம் என்பது, நண்பனுக்கு ஆண்மை இல்லை எனும் விவரத்தை ஊருக்குச் சொல்லிவிடுவேன் என மிரட்டுவது, கடைசியாக, ‘உன் புருஷனை விட்டுட்டு வா. நாம ஓடிப்போயிடலாம்’ என்று வடிவுக்கரசியிடம் சொல்வது… என பாக்யராஜ் வில்லத்தனம் செய்யும் போது, நடுங்கி கிடுகிடுத்து, ‘ச்சீ… நீயெல்லாம் ஒரு நண்பனாடா’ என்று பதறிப்போனோம்!

அந்த கேரக்டருக்கு, வில்லத்தனத்துக்கு, பாக்யராஜுக்கு கிடைத்த வெற்றி. ’புதிய வார்ப்புகள்’ போலவே இந்தப் படத்துக்கும் பாக்யராஜுக்கு டப்பிங் குரல்தான். அவர் குரலில்லை. அதில் கங்கைஅமரன். இதில் யாரென்று தெரியவில்லை.

‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’ படங்களுக்குப் பின்னர் மூன்றாவதாக ‘கன்னிப்பருவத்திலே’படத்தைத் தயாரித்தார் அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. ’16 வயதினிலே’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய பி.வி.பாலகுருதான் இயக்கினார். பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தன்னைச் சேர்த்துவிட்ட பாலகுருவுக்காக, படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதி, வில்லனாகவும் நடித்திருந்தார் பாக்யராஜ். இத்தனைக்கும் ‘புதிய வார்ப்புகள்’ படத்தின் மூலமாக அப்போது நடிகராக, ஹீரோவாகவும் ஆகிவிட்டிருந்தார் பாக்யராஜ்!

திருச்சியைச் சுற்றியுள்ள கிராமங்களில்தான் படமாக்கப்பட்டன. சங்கர் கணேஷ் இசையில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. ‘நடையை மாத்து’ என்கிற டைட்டில் பாடல், அன்றைக்கு டாப் மோஸ்ட், டாப் லிஸ்ட்டில் இருந்தது. அப்போது இந்தப் பாடல் ஒலிக்காத திருவிழாக்களே இல்லை. ‘ஆவாரம்பூ மேனி’ என்றொரு பாடல் அற்புத மெலடி. ‘அடிஅம்மாடி சின்னப்பொண்ணு… ஆசைப்பட்டா அவ நெஞ்சுக்குள்ளே’ என்ற பாடலைப் பாடாத இளசுகளே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த‘பட்டுவண்ண ரோசாவாம்’ பாட்டு! படத்தில் இரண்டு முறை வரும் இந்தப் பாடல், எண்பதுகளில், ரேடியோக்களில் அடிக்கடி நேயர்களால் விரும்பிக் கேட்ட பாடல். மலேசியா வாசுதேவனின் ஆரம்ப கால ஹிட் பாடல்களில் ’பட்டுவண்ண ரோசா’வும் ஒன்று!

இந்தப் படம் பல ஊர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடியது. சில ஊர்களில், 200 நாட்கள் ஓடின. படம் பார்த்துவிட்டு, பாக்யராஜ்தான் எல்லோரும் கவனத்தையும் ஈர்த்தார், என்றாலும் ராஜேஷ், வடிவுக்கரசியின் நடிப்பு தனிப்பாராட்டுகளைப் பெற்றது.

1979ம் ஆண்டு வெளியாகி, அதிரிபுதிரி ஹிட்டடித்தது இந்தப் படம். ’ராஜேஷ் கேரக்டருக்கு ஹீரோ கிடைக்கலை. தேடிக்கிட்டுருந்த சமயத்துல, தி.நகர் ரோகிணி லாட்ஜ்ல, வாட்டசாட்டமான, கிராமத்து முறுக்கோட இருந்தவரை ஏன் இந்தக் கேரக்டருக்கு போடக்கூடாதுன்னு யோசிச்சேன். அவரையும் வடிவுக்கரசியையும் வைச்சு,ஸ்டில்ஸ்லாம் எடுத்து, வெளியூர் போன பாலகுரு சாருக்காக காத்திருந்தேன். அப்போதான், ‘படத்துக்கு ஹீரோ கிடைச்சிட்டாரு. ராஜேஷ். பாலசந்தர் படம், வேற படம்னு சின்னச்சின்ன ரோல்ல நடிச்சிருக்கார்’னு சொன்னாங்க.

டைரக்டர் ஹீரோவை செலக்ட் பண்ணிட்ட பிறகு, நாம அதிகப்பிரசங்கித்தனமா குட்டையைக்ல் குழப்பக்கூடாதுன்னு என் யோசனையைச் சொல்லவே இல்ல. ஆனாலும் வடிவுக்கரசிகிட்ட, ‘நாம இந்தப் படத்துல இவரைப் பயன்படுத்தலேன்னா என்ன… நீ வேணா பாரு… இவரு பெரிய ஹீரோவா வருவாருன்னு சொன்னேன். அவர்தான் கேப்டன் விஜயகாந்த்’ என்று பாக்யராஜ் சாரைச் சந்தித்து நான்கரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தபோது மனம் திறந்து சொன்னார்.

அதுமட்டுமா? ‘கன்னிப்பருவத்திலே’ படத்துக்கு வெளியே நிகழ்ந்த சுவாரஸ்யங்களும் ஆச்சரியங்களும் ஏராளம். பாக்யராஜ் சொன்ன விஷயங்களைச் சொன்னால், ‘சினிமா உலகத்துல இப்படியெல்லாமா நடக்குமா? ரீல்ஸ் வுடாதீங்க’ என்று சொல்வார்கள். ஆனால் அதையெல்லாம் தனி எபிசோடாக,தனி அத்தியாயமாகச் சொன்னால்தான் பாக்யராஜ் எனும் மிக நேர்மையான கலைஞனுக்கு நாம் வைக்கிற சல்யூட்டாக இருக்கும்!

 
ஏனோ தெரியவில்லை… சில விஷயங்கள் ஏன், இப்படி, எப்படி என்றெல்லாம் புலப்படுவதே இல்லை. இந்தப் படத்துக்குப் பிறகு நான்கைந்து படங்களில் வடிவுக்கரசி நாயகியாக நடித்தார். அப்புறம் அக்கா, அண்ணி, அம்மா என கேரக்டர்கள் கிடைத்து இன்றைக்கும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல், ராஜேஷ் இதையடுத்து பத்துப்பனிரெண்டு படங்களில் நாயகனாக நடித்தார்.

அதையடுத்து, டாக்டர் கேரக்டர், தந்தை கதாபாத்திரம், போலீஸ், வக்கீல், புரட்சியாளர் என்றெல்லாம் இறக்கும் தருணம் வரை நடித்துக்கொண்டே இருந்தார். வில்லன் பாக்யராஜ், எல்லோருக்கும் குறிப்பாக எல்லாப் பெண்களுக்கும் பிடித்த பாக்யராஜானார். விஜயகாந்தின் முதல் படமாக இடம்பெறுவது கைவிட்டுப்போனது. ஆனாலும் அடுத்தடுத்த படங்களில் நடித்தார். புரட்சிக்கலைஞர் என்றும் கேப்டன் என்றும் இன்றைக்கும் கொண்டாடப்பட்டுக்கொண்டே இருக்கிறார்.

 
‘கன்னிப்பருவத்திலே’ கணக்கு தப்பிப் போயிருக்கலாம்; ஆனால் காலத்தின் கணக்கு தப்பாது போல..!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here