
முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றபோது, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா அவருடன் செல்லவில்லை. இதுகுறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, கீர்த்தனாவுக்கு உடல்நலப் பிரச்னை இருந்ததாகவும், ஓய்வு எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், கீர்த்தனாவுக்கு காலர் எலும்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், மருத்துவர்கள் நீண்ட நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியபோதும் அவர் சில நாட்களிலேயே மீண்டும் பணிக்குத் திரும்பியதாகவும் கூறியிருந்தார். மருத்துவமனையில் இருந்தபோதும் முதலமைச்சரின் லண்டன் பயணத்துக்கான ஏற்பாடுகளை கீர்த்தனா கவனித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தச் சூழலில், கீர்த்தனாவின் சிகிச்சை தொடர்பான மருத்துவமனை ஆவணம் வெளியாகியுள்ளது. அதில் செப்டம்பர் 10-ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அன்றே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், செப்டம்பர் 12-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதான் தற்போது விவாதத்துக்கு காரணமாகியுள்ளது. காரணம், செப்டம்பர் 10-ம் தேதி கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்திலும் தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத் திட்டம் குறித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
https://x.com/Keerthana4VNR/status/2097997833790226564?s=20
அந்தப் பதிவில் திட்டம் விரிவான திட்டத் தயாரிப்பு கட்டத்துக்கு முன்னேறியிருப்பதாகவும், DFR மற்றும் DPR பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனால், “செப்டம்பர் 10-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அன்றே அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால், அதே நாளில் கப்பல் கட்டும் தளத் திட்டம் தொடர்பான கூட்டத்தில் அவர் எப்படி பங்கேற்றிருப்பார்?” என்ற கேள்வியை சில நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
கீர்த்தனாவின் உடல்நிலை குறித்த விளக்கங்களுக்கும், செப்டம்பர் 9–12 வரையிலான நிகழ்வுகளின் காலவரிசைக்கும் இடையே சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் லண்டன் பயணத்தில் கீர்த்தனாவை அழைத்துச் செல்லாததற்கு வேண்டுமென்றே திணிக்கப்பட்ட காரணமாக இந்த அறிக்கை வெளியாகிறதா? உண்மையில் அமைச்சர் கீர்த்தனாவுக்கு அறுவை சிகிச்சை நடந்ததா? இல்லை இது மக்களை ஏமாற்றும் வேலையா? என்று ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



