சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்காக ரஜினி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
ரஜினி – நெல்சன் கூட்டணியில் உருவாகும் இரண்டாம் பாகம் :
கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படத்தில் ரஜினிகாந்த் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார்.
ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்ணா, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. அனிருத் இசையமைத்திருந்தார். உலகம் முழுவதும் இப்படம் ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த வெற்றியை தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமாரே மீண்டும் இயக்குநராக களமிறங்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘ஜெயிலர் 2’வில் இணையும் நட்சத்திர பட்டாளம் :
‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிகாந்துடன் பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தில் இடம்பெற்ற சில முக்கிய கதாபாத்திரங்களுடன், புதிய நட்சத்திரங்களும் இப்படத்தில் இடம்பெற உள்ளனர்.
மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும், ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற முதல் பாடல் :
‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் பாடலான ‘அல்ல போலேலோ’ சமீபத்தில் வெளியானது. இந்த பாடலில் நடிகை பூர்ணா சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.
முதல் பாகத்தின் ‘காவாலா’ பாடல் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பை போலவே, ‘அல்ல போலேலோ’ பாடலும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
இன்று வெளியாகும் கேரக்டர் ரிவீல் அறிவிப்பு :
இந்த நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தின் புதிய அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.
இந்த அறிவிப்பு படத்தில் இடம்பெறும் முக்கிய கதாபாத்திரங்களின் அறிமுகம் அல்லது கேரக்டர் ரிவீல் தொடர்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 15-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.





