தமிழ்நாட்டின் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி, அன்று நிதிநிலை அறிக்கையும், ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து, செப்டம்பர் 8ஆம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது.
இந்த சட்டசபை கூட்டத்தொடரில் மாநிலத்தின் வளர்ச்சி, நிதி மேலாண்மை, நகர்ப்புற நிர்வாகம், டிஎன்பிஎஸ்சி, தனியார் பல்கலைக்கழக விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்த வகையில், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களும் ஆளுநர் அர்லேகரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 6 மசோதாக்களுக்கு 4 நாட்களிலும், 5 மசோதாக்களுக்கு 5 நாட்களிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் 13 மசோதாக்கள்
- தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்ட மசோதா, 2026 (Tamil Nadu Town and Country Planning Amendment Bill).
- தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்ட மசோதா, 2026 (Tamil Nadu Private Universities Amendment Bill) – குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (MLAs) கார் வழங்கும் வசதி மற்றும் சம்பளப் படிகள் தொடர்பான திருத்த மசோதா (Tamil Nadu Payment of Salaries Amendment Bill).
- டாஸ்மாக் மதுபானங்களுக்கு மதிப்புக்கூட்டு வரி விதிக்கும் (VAT) திருத்த மசோதா (Tamil Nadu Value Added Tax Amendment Bill).
- உள்ளாட்சி அமைப்புகளுக்கான பணியாளர்களை TNPSC மூலம் தேர்வு செய்வதற்கான மசோதா (TNPSC Recruitment for Urban Local Bodies Bill).
- தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் தொடர்பான மசோதா (Tamil Nadu Investment Promotion Commission Act).
- விவசாய விளைபொருள் சந்தைப்படுத்துதல் (ஒழுங்குமுறை) இரண்டாவது திருத்த மசோதா (Agricultural Produce Marketing Regulation Second Amendment Bill).
- சரக்கு மற்றும் சேவை வரி (GST) திருத்த மசோதா (Tamil Nadu Goods and Services Tax Amendment Bill).
- தமிழ்நாடு பஞ்சாயத்துகள் திருத்த மசோதா.
- தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்ந்த திருத்த மசோதா.
- வணிகச் செயல்பாடுகளை எளிதாக்குதல் (Business Facilitation) தொடர்பான திருத்த மசோதா.
- தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்குவதற்கான திருத்தப்பட்ட புதிய மசோதா.
இந்த 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு குறுகிய காலத்திலேயே ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. அதேவேளை, தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்ட மசோதா மட்டும் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில், தனியார் பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்கான குறைந்தபட்ச நிலப்பரப்பு சென்னையில் 12 ஏக்கராகவும், பிற மாநகராட்சிகளில் 18 ஏக்கராகவும், மற்ற பகுதிகளில் 25 ஏக்கராகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலம் தேவைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிரந்தர வைப்பு நிதி ரூ.50 கோடியில் இருந்து ரூ.25 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் ஆசிரியர் அமைப்புகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளன. உயர்கல்வியில் தனியார் நிறுவனங்களின் பங்கு அதிகரிப்பதால் ஏழை, கிராமப்புற மற்றும் முதல் தலைமுறை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் இடஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
திமுக ஆட்சியில் ஆளுநரின் நடவடிக்கைகள்
திமுக ஆட்சிக் காலத்தில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அப்போது தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி ஒப்புதல் அளிப்பதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டதாக மாநில அரசு குற்றம்சாட்டியது.
இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு 2023ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அப்போது, மறுபரிசீலனை செய்து மீண்டும் சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என். ரவியின் நடவடிக்கை “சட்டவிரோதமானது மற்றும் பிழையானது” என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவின் கீழ் மசோதாக்கள் மீது ஆளுநர் காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
இந்த நிலையில், தவெக அரசு அமைந்த பிறகு நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் குறுகிய காலத்திலேயே ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த உடனடி ஒப்புதலுக்கு உச்சநீதிமன்றத்தின் 2025ஆம் ஆண்டு தீர்ப்பில் வழங்கப்பட்ட அந்த அதிரடியான தீர்ப்பு ஒரு காரணமாக இருக்கலாம் என ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தவெக – பாஜக கூட்டணி குறித்த சர்ச்சை
12 மசோதாக்களுக்கு குறுகிய காலத்திலேயே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை அரசியல் ரீதியாக பல்வேறு கோணங்களில் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கள்ளக் கூட்டணி தொடர்பு இருப்பதாகவும், இதனால் ஒரு வேளை உடனடி ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் மத்தியில் சந்தேகத்தை கிளப்பியுள்ளதாக கூறப்படுகிறது.





