படம் அவுட்; பாட்டு ஹிட்டு!- வி.ராம்ஜி
சில படங்களின் பெயரை, நடித்தவர்களை, இயக்கியவர்களை, ஏன்… இசையமைத்தவர்களைக் கூட மறந்திருப்போம். ஆனால், ஒரு நான்கு நிமிடப் பாடல், மொத்தத்தையும் நம் நினைவு அலமாரியில் இருந்து எடுத்துக்கொண்டு வந்து, நம் கைகளில் தந்துவிடும். நம் நண்பர்களிடம் இந்தப் பாடலைக் கேட்டால், வரி பிசகாமல், உடனே அந்தப் பாடகராகவே மாறி, பாடத் தொடங்கிவிடுவார்கள்.
இந்தப் பாட்டுல யாரு நடிச்சது?’ என்று கேட்டால், ‘சிவாஜின்னு நினைக்கிறேன்’ என்பார்கள். ‘சிவாஜிக்கு டிஎம்எஸ் இப்படிப் பாடமாட்டாருப்பா’ என்று இன்னொருவர் சொல்லுவார். ‘முத்துராமன்… ஜெமினி… ஜெய்சங்கர்…’ என்று அறுபதுகளில் சக்கைப்போடு போட்ட நடிகர்களையெல்லாம் சொல்லுவார்கள். இந்தப் பாடலில் நடித்தவர் ஏவிஎம் ராஜன். நாயகி நடிகை பாரதி.
‘சரி… இசையமைப்பாளரையாவது கரெக்ட்டா சொல்லு’ என்று என் திருச்சி நண்பன் சிவாவிடம் கேட்டேன். ‘மியூஸிக்கைக் கேட்டாலே தெரியுது கேவி மகாதேவன் தானே…’ என்று எதிர்க்கேள்வி கேட்டான். என் தந்தை வயதைக்கொண்ட அன்பு மனிதரிடம் கேட்டதற்கு, ‘இப்படிப்பட்ட பாட்டைக்கொடுக்க மெல்லிசை மன்னர்களை விட்டா, ஆளே கிடையாது’ என்று உறுதிபடக் கூறினார்.
திருமணமாகி பேரன் பேத்தியெல்லாம் எடுத்துவிட்ட எனக்குத் தெரிந்த அக்காவிடம் கேட்டேன். ‘படம் ‘பூவும் பொட்டும்’. டிஎம்எஸ். பி.சுசீலா பாடியிருப்பாங்க. கோவர்த்தனம் ஐயா இசையமைச்சிருப்பாரு’ என்றார்கள். ‘நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான்’ என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? அத்தனை டென்ஷனில் இருந்தும் டிப்ரஷனில் இருந்தும் இந்தப் பாட்டும் இசையும் மிகப்பெரிய வடிகாலாக இருக்கும். ரிலாக்ஸைக் கொடுத்துவிடும்.
அந்த அக்காவுக்கு பல வருடங்களாக திருமணம் நடக்கவில்லை. தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இந்தப் பாடலை மாலைவேளையில் எங்களையெல்லாம் உட்காரவைத்து, அடிக்கடி பாடுவார். அப்போது இந்தப் பாடலை ஏன் அடிக்கடி பாடுகிறார் என்பது தெரியவோ புரியவோ இல்லை. ஆனால் பாடும்போது சில இடங்களில் விம்முவார்; அழுவார். பாடலைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, தாவணியில் முகம் புதைத்து, துடைத்துக்கொள்வார்.
பல வருடங்கள் கழித்து, அக்காவின் உணர்வைப் புரிந்துகொண்ட போது, அவருடைய வலி எனக்குத் தொற்றிக்கொண்டது. ஆனால் அக்கா இப்போதும் பாடுவாள். அதில் முகம் முழுக்க மலர்ச்சியும் ஜெயித்தலுக்கான கம்பீரமும் இருக்கும். ஆமாம்… அவருக்கு திருமணமாகிவிட்டிருந்தது. ஒரு பாடல் இரண்டுவிதமான உணர்வுகளைக் கொடுக்கமுடியுமா? முடியும் என்பதற்கு பல உதாரணப் பாடல்கள் இருக்கின்றன. ‘நாதஸ்வர ஓசையிலே’ பாடலையும், அந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
நாயகியின் கனவில் இருந்துதான் பாடல் தொடங்கும். கனவில் நாயகன் வந்து நம்பிக்கையைக் குழைத்துக் கொடுக்கிறான். கவியரசு கண்ணதாசன் பாடலுக்குள் பெண்ணின் ஏக்க துக்கங்களையும் அவளின் ஆகப்பெரும் சந்தோஷங்களையும் சொல்லியிருப்பார். முதல் வரிக்குத் தகுந்தபடியே நாகஸ்வரத்தில் இருந்துதான் பாடலும் தொடங்கும்.
நாதஸ்வர ஓசையிலே – பூவும் பொட்டும்
நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான்
சேர்ந்து வரும் மேளத்திலே தேவி நடம் ஆடுகின்றாள் என்று டி எம் செளந்தர்ராஜன் பாடிமுடிக்க, சுசீலாவின் ஹம்மிங் உடனே வரும். அதையடுத்து சுசீலாவின் குரல், நம்மைக் குதூகலிக்கும். ஏங்கவைக்கும்.
கோலமிட்ட மணவறையில் குங்குமத்தின் சங்கமத்தில்
மாலையிட்ட பூங்கழுத்தில் தாலி கட்டும் வேளையிலும்
ஊரார்கள் வாழ்த்துரைக்க ஊர்வலத்தில் வரும்பொழுதும்
தேவன் வந்து பாடுகின்றான் தேவி நடம் ஆடுகின்றாள்
என்று கவியரசர் எழுதியிருப்பார். கோலம், மணவறை, குங்குமம், மாலை, தாலி, ஊரார், ஊர்வலம் என்று திருமண வைபவத்தை நாலே வரிகளில் நம் கண்ணுக்கு எதிரே கொண்டுவந்து நிறுத்தினார் கண்ணதாசன்.
அத்துடன் நின்றுவிட்டாரா? கோவர்த்தனமும் சும்மா இருந்துவிட்டாரா? மேளதாளங்கள், நாகஸ்வரம், தபேலா என விளையாடுவார்.
மை வடித்த கண்ணிரண்டும் மண் பார்க்கும் பாவனையில்
கைப் பிடித்த நாயகனின் கட்டழகு கண்டு வர…
என்று பாடியதும் அடுத்த வரிகளுக்குள் செல்வதற்கு முன்னதாக, வீணையை இழையோடவிட்டிருப்பார்.
மெய்சிலிர்த்து முகம் சிவக்கும் மெல்லிடையாள் கூந்தலிலே தேவி நடம் ஆடுகின்றாள் தேவன் வந்து பாடுகின்றான். தமிழ் சினிமாவுக்கு செளராஷ்டிரம் தந்த தங்கக்குரல் டி.எம்.எஸ்.செளந்திரராஜனுடையது. தமிழை அவர் உச்சரிக்கும் விதம், வரிகளுக்குள் அடர்த்தியாக இருக்கும் அர்த்தங்களை உள்வாங்கி வெளிப்படுத்துகிற நேர்த்தி… டிஎம்எஸ் குரலுக்கு இந்த பாண்டிய நாடு மட்டுமல்ல… மொத்த தேசமும் அடிமை! அக்கட தேசத்தில் இருந்து சுசீலாம்மாவின் குரல், சோகத்துக்குள் சுகத்தையும் சுகத்துக்குள்ளே சோகத்தையும் பொதித்துத் தருகிற தெய்வீகக் குரல்!
கற்பில் ஒரு கண்ணகியாய் காதலுக்கு ஜானகியாய் சிற்ப மகள் வாழ்க்கை என்று தேவன் வந்து பாடுகின்றான் என்று நாயகி பாடுவாள். இதுவொரு சத்தியம். பத்தினியைக் காவல் கொண்டு பார் புகழ வாழ்க என்று சத்தியத்தின் மேடையிலே தேவி நடம் ஆடுகின்றாள் என்று நாயகன் தருவதும் உறுதி. கோவர்த்தனம் இசையமைத்த படங்கள் என்பது மிகமிகக் குறைவுதான். ஆனால், போட்ட மெட்டுகளெல்லாம் அல்வாத்துண்டு. கர்நாடக சங்கீதத்துக்கு எந்தவொரு செய்கூலியும் சேதாரமும் வராமல், டியூன் போடுவார். அந்த டியூன் எப்பேர்ப்பட்டவரையும் மயக்கும்.
நாதஸ்வர ஓசையிலே’ பாடல், நான் அடிக்கடி முணுமுணுக்கிற பாட்டு. இந்தப் பாடலைப் பாடும்போதெல்லாம் அந்த அக்கா நினைவுக்கு வருவார். தாவணி போட்ட அக்காவாக இல்லாமல், ரெட்டைஜடை அக்காவாக இல்லாமல், பூசின உடம்பும், பெரிய வட்டக்குங்குமமுமாக,பேத்தியுடன் கொஞ்சுகிற சிரித்த முக அக்கா ஞாபகத்துக்கு வருவார்.
சில வருடங்களுக்கு முன்பு, வல்லக்கோட்டை முருகன் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்யும் இளம்பெண் என் கவனம் ஈர்த்தாள். அவளிடமும் அவளின் பெற்றோரிடமும் பேசினேன். நம்பர் பரிமாறிக்கொண்டோம். ‘அவ்ளோ சொத்து, பிஸ்னஸ் எல்லாம் இருக்குங்க. ஒரே பொண்ணு, கல்யாணம் இன்னும் தகைஞ்சபாடில்ல’ என்று வருந்தினார்கள். நிறைய்ய பேசினோம். பிறகு இரண்டுநாள் கழித்து அந்தப் பெண் பேசினாள். அவளை உற்சாகப்படுத்தும் விதமாக, ‘நாதஸ்வர ஓசையிலே…’ பாடலையும் வரிகளையும் சொல்லிப் பாடினேன். ஜென் ஸீ வயது கொண்ட அந்தப் பெண், அழுதேவிட்டாள். ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் திருமணப் பத்திரிகையுடன் வீட்டுக்கு வந்தார்கள். அவளின் செல்போனை ‘ஓபன்’ செய்து, எது எதையோ தட்டினாள். அதில் இருந்து ‘நாதஸ்வர ஓசையிலே…’ பாடல் ஒலிக்கத் தொடங்கியது.
‘இந்தப் பாட்டுக்கு ரசிகையாயிட்டேன் அங்கிள்’ என்றாள். மங்கல வார்த்தைகளும் மங்கல இசையும் நம்மை என்னவோ செய்யும். பாஸிட்டீவ் சிந்தனையை நிரப்பி, புதுப்பிறப்பெடுக்கவைக்கும்!
‘நாதஸ்வர ஓசையிலே’ பாட்டு கேட்டால், கல்யாணம் சீக்கிரம் நடந்திடுமா என்று சொல்லவில்லை. ஆனால் அந்தப் பாட்டு தருகிற எனர்ஜியே சகலத்தையும் சரிசெய்துவிடும்! எண்ணம் போல்தானே வாழ்க்கை!





