விளையாட்டு தொடர்பான கணிப்பு நிறுவனமான NOVIG-க்காக உருவாக்கப்பட்ட இந்த விளம்பரத்தில், சிட்னி ஸ்வீனி குறைவான ஆடைகளுடன் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற காட்சிகளில் நடித்துள்ளார்.
இந்த விளம்பரம் பெண்களின் உடலை பாலியல் ரீதியாக காட்சிப்படுத்தி, விளையாட்டை விற்பனை செய்வதாக இருப்பதாக பல பெண் விளையாட்டு வீராங்கனைகள் விமர்சித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை அரியார்னே டிட்மஸ் உள்ளிட்ட பலரும் இந்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெண்களின் உடலை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தி விளம்பரம் செய்வது இன்னும் தொடர்வது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விளையாட்டு வீராங்கனைகளின் எதிர்ப்பு
இந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில் சில பெண் விளையாட்டு வீராங்கனைகள் தங்களது பயிற்சி மற்றும் போட்டி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
அந்தப் புகைப்படங்களில், அவர்களின் உடல் தோற்றத்தை விட விளையாட்டுக்கான கடின உழைப்பு, உடல் வலிமை, திறமை மற்றும் பயிற்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஒரு பெண் விளையாட்டு வீராங்கனையின் மதிப்பு அவரது தோற்றத்தில் இல்லை, அவர் வெளிப்படுத்தும் திறமையிலும் சாதனையிலும் உள்ளது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பெண்களின் உடல் தோற்றம் ஏன் முக்கியமாகிறது?
இந்த விவகாரம் ஒரு விளம்பரத்தைப் பற்றிய சர்ச்சையாக மட்டும் பார்க்க முடியாது. பெண்களை அவர்களின் தோற்றத்தின் அடிப்படையில் மதிப்பிடும் சமூக மனநிலை குறித்தும் இது கேள்விகளை எழுப்பியுள்ளது.
குறிப்பாக விளையாட்டில் பெண்களின் உடல் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகிறது. ஒரு வீராங்கனை சிறப்பாக செயல்பட வலிமை, வேகம், தசை வளர்ச்சி, சகிப்புத்தன்மை போன்றவை தேவைப்படலாம். அதே நேரத்தில், பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து சமூகத்தில் பல்வேறு அழகு சார்ந்த எதிர்பார்ப்புகளும் உள்ளன.
இதனால், “வலிமையாக இருக்க வேண்டும். ஆனால் அதிகமாக தசை வளரக்கூடாது. விளையாட்டு வீராங்கனையாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் பெண்ணாகவும் ஒரு குறிப்பிட்ட தோற்றத்தில் இருக்க வேண்டும்” என்ற முரண்பாடான அழுத்தம் உருவாகிறது.
விளையாட்டை விட தோற்றத்திற்கு முக்கியத்துவமா?
தொழில்முறை விளையாட்டு வீராங்கனைகள் தங்களது உடலைப் பற்றிய விமர்சனங்களை அதிகமாக எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. மைதானத்தில் ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அவர்களின் தோற்றம் குறித்து தொடர்ந்து கருத்துகள் தெரிவிக்கப்படுவது, அவர்களின் கவனத்தை விளையாட்டில் இருந்து திசைதிருப்பக்கூடும்.
ஆனால், விளையாட்டு தானாகவே உடல் தோற்றம் குறித்த கவலைகளை உருவாக்கும் விஷயம் அல்ல. மாறாக, உடல் எவ்வளவு திறன் கொண்டது என்பதை உணரச் செய்வதன் மூலம் விளையாட்டு பெண்களுக்கு நேர்மறையான அனுபவத்தையும் வழங்க முடியும்.
பிரச்சினை எப்போது உருவாகிறது என்றால், விளையாட்டு திறமைக்கும் உடல் தோற்றத்துக்கும் இடையே தேவையற்ற தொடர்பு ஏற்படுத்தப்படும்போதுதான்.
‘Fit’ என்ற பெயரில் புதிய அழுத்தம்
பெண்கள் உடல் எடையை குறைத்து மிகவும் மெலிந்த தோற்றத்தில் இருக்க வேண்டும் என்ற பழைய அழுத்தத்துக்கு பதிலாக, தற்போது ‘Fit’ ஆகவும், ‘Toned’ ஆகவும், வலிமையாகவும் இருக்க வேண்டும் என்ற புதிய தோற்றக் கட்டுப்பாடும் உருவாகி வருவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆரோக்கியமான அல்லது விளையாட்டு வீராங்கனை உடல் என்று ஒரே ஒரு குறிப்பிட்ட தோற்றத்தை நிர்ணயிக்க முடியாது. ஒவ்வொருவரின் உடலும் வேறுபட்டது. உடல் எப்படி இருக்கிறது என்பதை விட, அது நமக்கு என்ன செய்ய உதவுகிறது என்பதுதான் முக்கியம்.
குழந்தைகள் மீதும் தாக்கம்
இந்த விவகாரம் குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் தொடர்பிலும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வளரிளம் பருவத்தில் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த நேரத்தில் மற்றவர்களுடன் தங்களை ஒப்பிடுவது, தங்களது தோற்றம் குறித்து அதிகமாக சிந்திப்பது போன்றவை அதிகரிக்கலாம்.
விளையாட்டில் ஈடுபடும் சிறுமிகளுக்கு, “ஒரு விளையாட்டு வீராங்கனை இப்படித்தான் இருக்க வேண்டும்” என்ற எண்ணம் உருவானால், அவர்களின் உடல் மாறும்போது தன்னம்பிக்கை பாதிக்கப்படலாம். உடல் தோற்றம் குறித்த கவலைகள் சில சிறுமிகள் விளையாட்டில் இருந்து விலகுவதற்கும் காரணமாக இருக்கலாம்.
எனவே, பெற்றோர்களும் பயிற்சியாளர்களும் குழந்தைகளின் உடல் எடை அல்லது தோற்றத்தை விமர்சிப்பதைவிட, அவர்களின் முயற்சி, திறமை, மகிழ்ச்சி, குழு உணர்வு மற்றும் விளையாட்டு மீதான ஆர்வத்தை பாராட்டுவது முக்கியம்.
பெண்களை அவர்களின் தோற்றத்தால் மதிப்பிட வேண்டாம்
சிட்னி ஸ்வீனியின் விளம்பரத்தைச் சுற்றி எழுந்துள்ள விவாதம், நடிகையின் உடலை விமர்சிப்பது பற்றியது அல்ல. பெண்கள் எப்படி ஆடை அணிய வேண்டும் அல்லது எப்படி தோன்ற வேண்டும் என்பதற்கான புதிய விதிகளை உருவாக்குவதும் தீர்வாகாது. மாறாக, பெண்களின் தோற்றத்திற்கு நாம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதையே சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
நமது உடல் நம்மை வேலை செய்யவும், விளையாடவும், பயணம் செய்யவும், ஓய்வெடுக்கவும், நமக்கு பிடித்தவர்களை அணைத்துக்கொள்ளவும், உலகை அனுபவிக்கவும் உதவுகிறது. ஆனால், ஒரு மனிதரின் அடையாளம் அவரது உடல் தோற்றத்தால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அவரது திறமைகள், குணம், உறவுகள், ஆர்வங்கள், அனுபவங்கள் மற்றும் மதிப்புகளும் அவரை வரையறுக்கின்றன.
குறிப்பாக விளையாட்டில், “அவர் எப்படி இருக்கிறார்?” என்பதை விட “அவரது உடல் என்ன செய்ய முடிகிறது?” என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதே ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்கும்.





