தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக செப்-10 ஆம் தேதி லண்டன் சென்ற நிலையில், இங்கிலாந்தில் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று ரூ 3,000 கோடி முதலீடு செய்ய விருப்பக்கடிதம் அளித்தது.ஒட்டுமொத்தமாக இவர்களின் பயணத்தில் பல கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நேற்று தமிழ்நாடு அரசு நேற்று (14.09.2026) இரவு 8.52 மணிக்கு வெளியிட்ட செய்திக் குறிப்பில், இங்கிலாந்து, இலண்டனில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இந்தியாவில் தான் மேற்கொள்ளவிருக்கும் ரூ.3,000 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாட்டையே விரும்பத்தக்க இடமாகக் கருதும் தனது விருப்பத்தைத் தெரிவித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு. தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. அவர்களிடம் தனது விருப்பக் கடிதத்தைச் சமர்ப்பித்தது.
இந்நிறுவனத்தால் முன்மொழியப்பட்ட இந்த முதலீட்டைச் சாத்தியமாக்கவும், தமிழ்நாட்டில் அதன் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறுவவும் தேவையான அனைத்து ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாகத் தமிழ்நாடு அரசு அந்நிறுவனத்திற்கு உறுதியளித்தது. இந்நிறுவனத்தின் முதலீட்டைச் செயல்படுத்தவும், தமிழ்நாட்டில் அதன் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறுவவும் தேவையான அனைத்து ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாக தமிழ்நாடு அரசு உறுதியளித்தது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில், “ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம்” என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அந்த நிறுவனத்தின் பெயர் ஏன் வெளியிடப்படவில்லை என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே, முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், “அந்நிய மூலதனத்தை ஈர்ப்பதற்காக தொழில்துறை அமைச்சரைக் கூட அழைத்துச் செல்லாமல் முதலமைச்சர் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளார். நூறு நாட்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாக அரசு கூறினாலும், எந்தெந்த நிறுவனங்கள், எத்தகைய உற்பத்தி, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து எந்த விவரமும் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை. அந்நிய மூலதனத்தை மட்டுமே நம்பியிருக்காமல் உள்நாட்டுத் தொழில்களை பாதுகாக்க வேண்டும்” என தெரிவித்தார்.
அதேபோல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் குறித்து “லண்டனில் தொழில் முதலீடுகளை முதலமைச்சர் விஜய் ஈர்த்ததற்கான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. வேறு நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்களே வெளியாகி வருகின்றன. முதலீடுகளை ஈர்க்கச் சென்றதாக கூறப்படும் நிலையில், அதற்கான தெளிவான ஆதாரங்கள் வெளியாகவில்லை. தவெக அரசு விளம்பரத்தின் மூலம் ஆட்சி நடத்துகிறது” என அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், முதலமைச்சரின் விஜயின் லண்டன் பயணத்தில் முதலீடுகள் குறித்து முழுமையான தகவலை வெளியிடப்படாததால் அதிமுக மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சந்தேகத்தை எழுப்புகின்றன. இதனிடையே விஜயின் லண்டன் பயணம் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.





