Home அரசியல் குதிரை பேர வழக்கு: சிபிஐ கோரிக்கை; தீர்ப்பை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்… – Kumudam

குதிரை பேர வழக்கு: சிபிஐ கோரிக்கை; தீர்ப்பை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்… – Kumudam

0


 

ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசியதாக திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்த வழக்கையும் சிபிஐக்கு மாற்றக் கோரி, திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெ.பாலசுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், புகார் அளித்து நான்கு நாட்களுக்கு பின் வழக்கு பதிவு செய்ததும், புகார் கிடைக்கப் பெறும் முன்பே ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டதும், பேரம் பேசியதாக கூறப்படும் நிகழ்வு ஊத்தங்கரையில் நடந்த போது, திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்களை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறை உள்ள போது, திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த மனுவில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து விட்டு, தவெக-வில் இணைந்தது; மதிமுக-வைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யக் கூறும்படி முதலமைச்சர் விஜய் தெரிவித்ததாக வைகோ பேட்டியளித்தது; திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், சீனிவாசன் ஆகியோர், தங்களை ராஜினாமா செய்யும்படியும், பதிலுக்கு அமைச்சர் பதவியும், 50 கோடி ரூபாயும் வழங்குவதாக ஆளுங்கட்சி அமைச்சரே பேரம் பேசியதாக தெரிவித்தது; வழக்கில் கைது செய்த தன்னை தவெக-வில் இணையும் படி போலீசார் நிர்பந்தித்ததாக திமுக எம்.எல். ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தது போன்ற புகார்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

ஜனநாயக நடைமுறையையும், மக்கள் தீர்ப்பையும் பாதுகாக்க, இந்த விவகாரத்தில் நியாயமான, சுதந்திரமான விசாரணை தேவை என்பதால், இதுசம்பந்தமாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. மேலும், தவெக எம் எல்.ஏ.விடம் பேரம் பேசியது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில்  விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி, தமிழகத்தில் நடந்து வரும்  குதிரை பேரங்களை  கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஊத்தங்கரையில் இருந்து வந்து சென்னை வந்து எம்.எல்.ஏ. அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், ஐந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சம்பந்தமான புகார் மீது எந்த  நடவடிக்கையும் எடுக்காதது, ஒரு கண்ணில் வெண்ணெயும், மறு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் பாரபட்சமான நடவடிக்கை. ஊத்தங்கரை எம்.எல்.ஏ. புகாரில் கைது செய்யப்பட்டவர்கள், தங்களிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகக் கூறியுள்ளனர் என வாதிட்டார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், புகார் அளித்தவர்கள் யாரும் வழக்கு தாக்கல் செய்யவில்லை. மாநில போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்றால் சிபிஐ-க்கு மாற்றலாம். இந்த வழக்கில், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்பதால், சிபிஐ-க்கு மாற்றக்கூடாது என வாதிட்டார்.

விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், வழக்கி விசாரணை நடந்து வரும் நிலையில், மற்ற புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யாததால் விசாரணையை மாற்ற வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பி, மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்தனர்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version