
இது குறித்து ஏற்கனவே திருமாளவளவன் நான் துணை முதல்வர் பதவிக்கு ஆசைபடவில்லை என்றும் திருச்சி கிழக்கில் போட்டியிடப்போவதில்லை என்றும் விளக்கமாக கூறியுள்ளார்.
ஆனால் தற்போது தீர்மானம் நிறைவேற்றிப்பட்டிருப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு பிறகு திமுக கூட்டணியிருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது விசிக. அதற்கு பதிலாக விசிகவுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருந்தார் முதலமைச்சர் விஜய்.
ஆனால் தமிழக வெற்றி கழகத்திற்கு விசிகவின் ஆதரவு மட்டுமே போதவில்லை. அதனால் திமுகவின் ஆதரவு கட்சிகளும் இடம்பெற வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்யின் விருப்பமாக இருந்தது. இதற்காக திமுக கூட்டணியிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என்று விசிகவிடம் வலியுறுத்தியபோது விசிக இது குறித்து உறுதியாக நிலைப்பாட்டை எடுக்காமல் இருந்தது.
இது குறித்து விளக்கம் அளித்த திருமாளவளவன் விசிக தரப்பில் 3 முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன.ஒன்று திருச்சி கிழக்கில் திருமாளவளவன் போட்டியிடுவது, இரண்டாவது அமைச்சரவையில் வழங்கப்பட்ட துறையை மாற்றி தருவது, மூன்றாவது வாரிய பதவிகள். இதற்கெல்லாம் ஓகே சொன்னால் திமுக கூட்டணியிலிருந்து விலக தயார் என்று விசிக டிமாண்ட் வைத்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது போல் நாங்கள் எந்தவொரு டிமாண்டையும் வைக்கவில்லை என்று விளக்கமளித்தார்.
அதனைத் தொடர்ந்து சமீபத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற தோழமைக்கட்சி கூட்டத்தில் திருமாளவளவன் பங்கேற்றிருந்தார். மறுபக்கம் இன்று சேலம் ஓமலூரில் நடைபெற்ற விசிக கூட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதியில் திருமாவளவன் போட்டியிட வேண்டும் என்றும், துணை முதலமைச்சராக வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. திருச்சி கிழக்கில் போட்டியிட மாட்டேன் என்று திருமாளவளவன் கூறிய நிலையில் தற்போது இந்த தீர்மானம் நிறைவேற்றி இருப்பது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
திமுக பாணியை பின்பற்றுகிறதா விசிக? திமுக ஆட்சியில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு நிலவியது. ஆனால் அடுத்தடுத்த கட்சி கூட்டங்களில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதே பாணியை தற்போது விசிகவும் பின்பற்றுகிறதா? என்ற கேள்வி ஓமலூர் கூட்ட தீர்மானத்திற்கு பிறகு எழுந்திருக்கிறது.
ஏற்கனவே இதற்கு திருமாவளவன் மறுப்பு தெரிவித்த நிலையில் கடந்த காலங்களில் அவர் பேசும் பேச்சுக்கும் செயலுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். உதாரணமாக தவெகவுக்கு ஆதரவு குறித்த கேள்விக்கு திருமாளவளவன் கூறியது இடதுசாரிகள் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்களோ அதே விசிகவின் நிலைப்பாடும் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது இடதுசாரிகள் அமைச்சரவையில் பங்கெடுக்கவில்லை விசிக பங்கெடுத்தது.இதை போல் திருச்சி கிழக்கு தொகுதியிலும் நடைபெறாது என்பதற்கு என்ன உறுதி? என்று அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழுப்புகின்றனர்.



