
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும்,தற்போதைய எம்,எல்.ஏவுமான சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது என்னை கொலை செய்ய எதிர்க்கட்சியினர் முயற்சித்தனர். அப்போது எனது சகோதரரும், மைத்துனரும் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்குப் பின் எனக்கும் எனது குடும்பத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் அச்சுறுத்தல் உள்ளதால் பாதுகாப்பு வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது சிவி சண்முகத்துக்கு கொலை மிரட்டல்கள் வருவதால் இது சம்பந்தமாக சென்னை விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இது சம்பந்தமான வழக்கு மற்றும் புகார்களை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் பிறப்பித்துள்ள உத்தரவில்,தொடர்ச்சியாக மிரட்டல்கள் வருவது குறித்து வெவ்வேறு விதமான குற்றச்சாட்டுகளுடன் சிவி சண்முகம் புகார் அளித்துள்ளதால் அதனை சிபிஐக்கு மாற்ற வாய்ப்பில்லை.
தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வருவதால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய தேவையை சிவி சண்முகம் நிரூபித்துள்ளார். எனவே அவருக்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பை டிஜிபி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.



