முதல்வர் விஜய் : தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர். ஆசிரியர். வசனகர்த்தா. இசையமைப்பாளர் என திரைக்கதை பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும். ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.தனித்துவமான கதையாக்கம்.
நகைச்சுவை கலந்த நடிப்பு. கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும். அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு.கே.பாக்யராஜ் இழந்து வாடும் அவர்களை குடும்பத்தினருக்கும். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும். திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
திமுக தலைவர் ஸ்டாலின் : ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்! இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர். சில மாதங்களுக்கு முன்புதான், திரு. பாக்யராஜ் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவுசெய்ததற்கான விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சராக மட்டுமின்றி, அவரது இரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.
திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு. அவரை இழந்து தவிக்கும் திருமதி. பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.தமது படைப்புகளால் பாக்யராஜ் அவர்கள் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: பிரபல திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய திரு. K பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த திரு. பாக்யராஜ் அவர்கள். “அண்ணா நீ என் தெய்வம்” என்ற புரட்சித் தலைவர் அவர்களின் முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டார்.
மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்களும் திரு. பாக்யராஜ் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார்.இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் : தமிழ்த் திரைப்பட உலகின் முன்னோடி இயக்குநரும், சிறந்த நடிகரும், தனித்துவமான திரைக்கதை ஆசிரியரும், எழுத்தாளருமான திரு. கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.அண்மையில் திரையுலகில் தனது 50 ஆண்டுகால சாதனைப் பயணத்தை நிறைவு செய்து, திரையுலகினராலும் ரசிகர்களாலும் சிறப்பாகப் பாராட்டப்பட்ட நிலையில், அவரது மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் :தமிழ் திரையுலகின் “திரைக்கதை மன்னன்” என்று போற்றப்பட்ட இயக்குநர் திரு. பாக்யராஜ் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தி என்னை மிகுந்த துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.ஒரு திரைப்படத்தின் திரைக்கதை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு அவரது படைப்புகள் இன்றளவும் சிறந்த பாடமாக விளங்கி வருகின்றன. எளிமையான கதை, நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவற்றை தனக்கே உரிய பாணியில் இணைத்து, தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற காலத்தால் அழியாத படைப்புகளை அவர் வழங்கியுள்ளார்.
