Home அரசியல் அப்பா – மகன்கள் வைத்த ஆப்பு… அறிவாலயத்திற்கு பறந்த வாக்குமூலங்கள்..! – Kumudam

அப்பா – மகன்கள் வைத்த ஆப்பு… அறிவாலயத்திற்கு பறந்த வாக்குமூலங்கள்..! – Kumudam

0


சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய திமுக தலைமை அமைத்துள்ள தேர்தல் கள ஆய்வுக் குழுவிடம், முன்னணி அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து கட்சியை மீண்டும் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் திமுக தலைமை இந்த ஆய்வை முன்னெடுத்து வரும் நிலையில், மூத்த தலைவர்கள் மீதே அதிருப்தி குரல்கள் எழுந்திருப்பது கட்சிக்குள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் திமுகவின் பலம் குறைந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்தின் செயல்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் அளித்துள்ள புகார் மனுக்களில், “உதவி கேட்டு சென்ற சாதாரண கட்சியினருக்கு அணுக முடியாத நிலை உருவாக்கப்பட்டது” என்ற குற்றச்சாட்டு முக்கியமாக இடம்பெற்றுள்ளதாம்.

உடல்நலக் குறைபாடு இருந்தபோதிலும், துரைமுருகனுக்கு பொதுச்செயலாளர் பதவியும், முக்கிய அமைச்சரவைப் பொறுப்பும் வழங்கி கட்சித் தலைமை முழு மரியாதை அளித்ததாக கூறும் நிர்வாகிகள், அதற்கு இணையான அரசியல் பலன் மாவட்டத்தில் கிடைக்கவில்லை என கள ஆய்வுக் குழுவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நீர்வளத் திட்டங்கள், ஆற்றுப்பாலங்கள் மற்றும் தடுப்பணை பணிகள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி மீது கட்சியினரிடையே கடும் அதிருப்தி நிலவுவதாகவும், அது தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்ததாகவும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. உதவி நாடி சென்ற கட்சித் தொண்டர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், முக்கிய பதவிகள் வழங்கப்பட்டதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் கள ஆய்வுக் குழுவிடம் பலர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கட்சிக்காக நீண்ட காலமாக உழைத்த நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதுடன், குறிப்பிட்ட நபர்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகவும், பதவி நியமனங்கள் மற்றும் அமைப்பு ரீதியான முடிவுகளில் அதிருப்தி இருந்ததாகவும் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

திமுகவின் தேர்தல் தோல்வியை ஆராயும் இந்த கள ஆய்வுக் குழு, மாவட்ட வாரியாக நிர்வாகிகள், முன்னாள் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களை நேரில் சந்தித்து கருத்துகளை சேகரித்து வருகிறது. அந்த வகையில் வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பதிவான புகார்கள் கட்சித் தலைமையின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கள ஆய்வுக் குழுவின் இறுதி அறிக்கையில் இந்த புகார்கள் எந்த அளவுக்கு இடம்பெற்றிருக்கின்றன, அதன்பிறகு கட்சித் தலைமை என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதே தற்போது திமுக வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version