Home மாவட்டம் நீட் தேர்வுக்கான ஆலோசனை கூட்டம்

நீட் தேர்வுக்கான ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (இளநிலை) 2026, நடைபெறுவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (இளநிலை) 2026 (NEET) (UG) 2026) எதிர்வரும் 03.05.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை 11 தேர்வு மையங்களில் (கிருஷ்ணகிரி -6, ஊத்தங்கரை -2, ஓசூர்-3) மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வு நடைபெறுவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இத்தேர்வில் OMR முறையில் 4,755 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளார்கள். தேர்வர்களுக்கு தேர்வுக்கூடங்களில் அடிப்படை வசதிகள், தடையில்லா மின்சாரம், மருத்துவ சேவை, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சிறப்பு பேருந்து வசதிகள் வழங்க சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்களின் அனுமதி சீட்டில் (Hall Ticket) குறிப்பிட்டுள்ளவாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வுக் கூடங்களுக்கு சரியான நேரத்திற்குள் வரவேண்டும். தாமதமாக வருபவர்களை தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட இயலாது என தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளதை தொடர்ந்து தேர்வர்கள் சரியான நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் கீதா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

0

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version