
வறட்சியால் உணவை தேடி ஊருக்குள் வரும் யானைகள்
கிருஷ்ணகிரி : வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்டு யானைகள் - தொடர் அட்டகாசத்தால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கனப்பள்ளி மற்றும் மகாராஜகடை வனப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கடந்த 5 வருடங்களாக முகாமிட்டுள்ளன. இந்த காட்டு யானைகள் அவ்வபோது வனப்பகுதியை விட்டு வெளியேறி வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவது தொடர் கதையாக உள்ளது. கடந்த 5 வருடங்களாக இந்த காட்டு யானைகளை வனத்துறையினர் வேறு வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் காட்டு யானைகள் இந்த வனப்பகுதியை விட்டு வெளியேறமால் தொடர்ந்து இப்பகுதியில் முகாமிட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலின் காரணமாக இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் புகுந்து விளை நிலங்களை சேதப் படுத்தி வருகிறது. இரவு நேரத்தில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்சி சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன. இதனால் சுற்றியுள்ள கொங்கனப்பள்ளி, சிகரமாகனப்பள்ளி, கே.கொத்தூர், பூதிமுட்லு, நேரலகிரி, கொல்லப்பள்ளி, சிகரலப்பள்ளி, தமாண்டரப்பள்ளி, மகாராஜகடை, நாரலப்பள்ளி, பூங்குருதி, தின்னூர், பெலவர்த்தி, சிந்தகம்பள்ளி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள நெல், வாழை, தக்காளி, மா, பலா உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்த காட்டு யானைகளை கட்டுப்படுத்த இரவு முழுவதும் பொதுமக்களும், விவசாயிகளும், டார்ச் லைட்களுடம் தினந்தோறும் யானைகளை விரட்ட போராடி வருகின்றனர். தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் காட்டு யானைகள் கிராமங்களை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளதால் உயிர் சேதம் ஏற்படும் முன் உடனடியாக வனத்துறையினர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென 100க்கும் மேற்பட்ட கிராம மக்களும், விவசாயிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.