back to top
13.4 C
London
Saturday, October 3, 2026
No menu items!
HomeசினிமாPB ஸ்ரீநிவாஸ் குரல் தூரிகையில் குழைத்த...பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா..! - Kumudam

PB ஸ்ரீநிவாஸ் குரல் தூரிகையில் குழைத்த…பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா..! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


படம் அவுட்… பாட்டு ஹிட்டு! – வி.ராம்ஜி

சில படங்களைப் பார்த்துவிட்டு வெளியே வந்ததும் ‘கொடுத்த பணத்துக்கு சரியான படம்பா’ என்று சொல்லுவோம். ‘எல்லாம் கிடைச்சிருச்சு. ஆனா கதை.. கதை… அதுமட்டும்தான் கிடைக்கலை’ என்று ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் டைரக்டர் கேரக்டரில் நடித்த நாகேஷ் சொல்லுவார். ‘ஹீரோ கால்ஷீட் கிடைச்சிருச்சு. படத்தை ஆரம்பிப்போம். கதை தானா உருவாகும்’ என்றெல்லாம் சினிமா மாறிவிட்டது. ஆனால், முக்தா சீனிவாசன் அப்படியில்லை. முதல் படமான ‘முதலாளி’ படத்தை இயக்கியது முதலே, கதையை நம்பித்தான் சினிமாக்களத்தில் இறங்கினார்.

ஒவ்வொரு படத்துக்குள்ளும் அருமையான கருத்தை உள்ளடக்கிய கதைகளைத் தேர்வு செய்வதிலும் குறைந்த பட்ஜெட்டில் படமெடுப்பதிலும் முக்தா சீனிவாசனும் அவருடைய அண்ணன் முக்தா வி.ராமசாமியும் ஜாம்பவான்கள்! தமிழ்த் திரையுலகில் சம்பளபாக்கி வைக்காத நிறுவனம் என்று முக்தா பிலிம்ஸ் கம்பெனியைச் சொல்லுவார்கள்.

இவரின் படங்கள் வசூலில் புரட்சி, சாதனையெல்லாம் ரேஸ் போல், பந்தயக்குதிரைப் போல் பேரெடுக்கவில்லை; அதை அவர்கள் விரும்பவுமில்லை. தரமான படம், குறைந்த முதலீடு, மிதமான லாபம் என்பதை இலக்காகக் கொண்டிருந்தார் முக்தா சீனிவாசன். அப்படி அவர் இயக்கிய படங்களில் ‘இதயத்தில் நீ’ திரைப்படமும் ஒன்று!

1963ம் ஆண்டு ஜெமினி கணேசன், தேவிகா, எம் ஆர் ராதா, தங்கவேலு, எம்.சரோஜா, நாகேஷ் முதலானோரின் நடிப்பில் வந்த ‘இதயத்தில் நீ’ படத்துக்கு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையை வழங்கினார்கள். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி எழுதினார். ஜெமினி என்றால் ஆரம்பத்தில் ஏ எம் ராஜா பாடினார். பிறகு பிபி ஸ்ரீநிவாஸ், அளவெடுத்தது போலான சட்டை மாதிரி, இருவரின் சாரீரமும் ஒருசேர இருக்கவே, ஜெமினி, பிபிஎஸ் ஜோடி ஏகப்பட்ட ஹிட் பாடல்களைத் தந்தது. அப்படியொரு காதலின் உணர்வைச் சொன்ன பாட்டுதான் ‘பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா’ பாடல்!

ஜெமினிக்கும் தேவிகாவுக்குமாக இந்தப் பாடல். ஆனால் ஆண் குரலில் மட்டுமே அமைந்த பாடல் இது. பாடலின் தொடக்கத்தில் கிடாரும் தபேலாவும் வந்து பாட்டுக்குப் பிள்ளையார்சுழி போடும். அடுத்து, பிபி ஸ்ரீநிவாஸின் ஹம்மிங். பொதுவாகவே, பிபிஎஸ்க்கு பாட்டு கொடுக்கும்போது, ஹம்மிங், விசில் சத்தம், ஆலாபனைகளில் அசத்தல் என பாட்டு, ஜீராவில் தோய்ந்திருக்கும் குலோப்ஜாமூனாக இனிக்கும்.

இந்தப் பாடலில் வருகிற ‘ஹோஹோஹோஹோ ஹோஹோஹோஹோ’ எனும் ஹம்மிங், படத்துக்குள்ளேயும் பாடலுக்குள்ளேயும் ஏன்.. காதலுக்குள்ளேயும் நம்மை கைப்பிடித்து இழுத்துவந்து சேர்த்துவிடும்.

வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்று பயந்தபடியே பாடுகிறாரோ என்று என் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பேன். அப்படியொரு மென்மைக்குரல் அவருடையது.

பூவரையும் பூங்கொடியே பூ மாலை போடவா…

பொன்மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா…பாமாலை பாடவா…

பூவரையும் பூங்கொடியே பூ மாலை போடவா…
பொன்மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா…பாமாலை பாடவா…
என்று பாடியதும் கிடார் வந்து குழையும். தபேலா உருண்டு உருண்டு விளையாடும்.
நீ வரையும் ஓவியத்தை கைகளினால் வரைந்தாயே….
நீ வரையும் ஓவியத்தை கைகளினால் வரைந்தாயே….
நான் வரைந்த ஓவியத்தை கண்களினால் வரைந்தேனே…
நான் வரைந்த ஓவியத்தை கண்களினால் வரைந்தேனே…
வடிவங்கள் மறைந்துவிடும் வண்ணங்கள் மறையாதே…

நீ கைகளால் வரைந்தாய். நான் கண்களாலேயே வரைந்தேன். வடிவங்கள் மறையலாம். ஆனால் வண்ணங்கள் மறையாது. இப்படித்தான் என் காதல்! என்பதாக கவிஞர் வாலி காதலை கவிதையால் வரைந்தார்.

அடுத்து வருகிற இடையிசையும் மெல்லிசைதான். அப்புறமென்ன… ஹம்மிங்கில் ஜிம்மிக்ஸ் செய்திருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள். ஆ ஆ ஆ ஆ ஆ ஹோ ஹோ ஹோ ஹோ என்று பிபிஎஸ் பாடியதைக் கேட்டுவிட்டால், நமக்கு றெக்கையே முளைத்துவிடும். அப்படியொரு ஏகாந்தமான குரல், பிபி ஸ்ரீநிவாஸின் தனித்த அடையாளம்.

கன்னம் எனும் கிண்ணத்திலே வண்ணங்களை குழைத்தாயே…
கன்னம் எனும் கிண்ணத்திலே வண்ணங்களை குழைத்தாயே…
கொஞ்சி வரும் புன் சிரிப்பில் கொஞ்சம் கொஞ்சம் இறைத்தாயே…
உருவங்கள் மாறிவிடும் உள்ளங்கள் மாறாதே…

உன் கன்னம் கிண்ணம். அந்தக் கதுப்புகளில்தான் எத்தனையெத்தனை வண்ணஜாலங்கள். அப்பேர்ப்பட்ட முத்துப்பல் தெரிய சிரிக்கும் போது, கொஞ்சம் கொஞ்சமாக, தவணைமுறையில் இறைத்தாளாம்! உருவங்கள் மாறிவிட்டாலும் உள்ளங்கள் மாறாதே! என்ற கருத்தை முழுவதுமாகத் தந்திருப்பார் வாலி. கிடார், வீணை, தபேலா என இசைக்கருவிகள் கொஞ்சம்தான். ஆனால் அவையெல்லாம் காதலைக் கொஞ்சிக் கொஞ்சிச் சொன்னது பாடலாக..!

பூவரையும் பூங்கொடியே பூ மாலை போடவா…
பொன்மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா…பாமாலை பாடவா…
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

என்று பிபி ஸ்ரீநிவாஸின் ஹம்மிங்குடன் பாடலை முடித்திருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள். அவர்களுக்கு அந்தக் குரலின் மீது தீராக்காதல் இருக்கத்தானே செய்யும்!

இதயத்தில் உட்கார்ந்திருக்கும்  பாடல்களில் ‘பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா’வும் ஒன்று. இந்தப் பாடலை ஒரேயொரு தடவை கேளுங்கள். ஒருதடவை மட்டுமே கேளுங்கள். அடுத்த சில மாதங்களுக்கு, ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ என்று முணுமுணுக்கத் தொடங்கிவிடுவோம். பிறகு கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்தப் பாடலையும் உங்களையும் யாராலும் எப்போதும் பிரிக்கவே முடியாது!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here