back to top
18.9 C
London
Tuesday, September 15, 2026
No menu items!
Homeஅரசியல்திமுகவில் சீனியர்களுக்கு கல்தா? 110 மாவட்டங்களால் வெடித்த சலசலப்பு! - Kumudam

திமுகவில் சீனியர்களுக்கு கல்தா? 110 மாவட்டங்களால் வெடித்த சலசலப்பு! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் டபுள்கேம் பாலிடிக்ஸை கையில் எடுத்திருக்கிறது தி.மு.க. வெளிப்பார்வைக்கு, காலத்தின் தேவை கருதி 70 வயதைக் கடந்த சீனியர் மாவட்டச் செயலாளர்களுக்கு கல்தா கொடுப்பதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டு, அதே சீனியர்களின் நிழலாக இருப்பவர்களுக்கு மா.செ. பொறுப்பை வழங்கும் முடிவுக்கு வந்திருக்கிறது தி.மு.க. தலைமை. அது நடக்கவில்லையென்றால் தலைமைக்கு கடும் நெருக்கடி கொடுக்கவும் சீனியர்கள் தயாராக இருப்பதுதான் அறிவாலயத்தின் அனல் பறக்கும் அரசியல்!

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க. சீனியர் நிர்வாகி ஒருவர், “கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி நடந்த தி.மு.க. செயற்குழு கூட்டத்தில், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இனி மாவட்டச் செயலாளர் பதவி கிடையாது, ‘இதுவரை 77ஆக இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை, 110 ஆக உயர்த்தப்படும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை தீர்மானங்களாக கொண்டுவந்தது தலைமை. இந்த 70 வயது கோட்டா சிஸ்டத்தின்படி எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், காந்தி, முத்துசாமி, சாக்கோட்டை அன்பழகன், ரகுபதி, சுந்தர், சிவலிங்கம், தளபதி, ராமகிருஷ்ணன், ஆவுடையப்பன் ஆகிய 13 மாவட்டச் செயலாளர்களின் பதவிகள் பறிக்கப்படுகின்றன.

அதைத் தொடர்ந்து, ‘இளைஞர் சக்தியால், த.வெ.க. ஆட்சியைப் பிடித்த பிறகுதான், 75 வருட கால தி.மு.க. கட்டமைப்பில் முதன்முறையாக இப்படியான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன’ என்று தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் பீறிட்டது. ஆனால், இதற்கு பிறகுதான் வில்லங்கமான விவகாரங்கள் சீனியர்கள் மத்தியில் வெடித்து கிளம்ப ஆரம்பித்தன.

சீனியர்கள் சீக்ரெட் மீட்டிங்!

செயற்குழு முடிந்த அதே வேகத்தோடு, ஆகஸ்ட் 24ம் தேதி சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சேகர்பாபு, நேரு, மூர்த்தி, தங்கம் தென்னரசு உட்பட சில சீனியர்கள் ஒன்றுகூடி கட்சியின் எதிர்கால நிலை குறித்து ஆலோசனை செய்திருக்கிறார்கள் சொல்லப்படுகிறது. ஒன்றரை மணி நேரம் நடந்த அந்த ஆலோசனையில், பதவியை இழக்கப்போகும் சீனியர் மாவட்டச் செயலாளர்களும் வாட்ஸ் ஆப் கால் மூலம் பங்குபெற்றிருக்கிறார்கள். அப்போது நடந்த கலந்துரையாடலில், கட்சித் தலைமை எடுத்த முடிவைவிட அடுத்தகட்டமாக நிலைமையை எப்படி சமாளிப்பது என்பதுதான் முக்கிய விஷயமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது.

அப்போது பதவி இழப்பு லிஸ்ட்டில் இருக்கும் சீனியர்கள், ‘நம்மை பதவியை விட்டு தூக்கினாலும் நாம் சொல்லக்கூடியவர்கள்தான் மாவட்டச் செயலாளர்கள் பதவிக்கு வரப்போகிறார்கள். தலைமை அப்படியொரு வாய்ப்பை கொடுத்திருக்கிறது. அதையும் மீறி  வேறு யாராவது வந்தால், அவர்களால் மாவட்டச் செயலாளர் பதவியில் அதிகாரம் செலுத்த முடியாது. விரைவில் உள்ளாட்சித் தேர்தலும் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் வரப்போகிறது. இதில் ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு தண்ணி காட்டி தி.மு.க.வை வெற்றிபெற வைக்க சீனியர்களான நம்மால் மட்டுமே முடியும்.

எலெக்ஷனுக்கு சீனியர்கள் தேவை!

அதுமட்டுமல்ல. கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை பொதுவெளியில் நடத்த தேவைப்படும் நிதியை நம்மால் மட்டுமே உடனடியாக ஏற்பாடு செய்துதர முடியும். என்னதான் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை நடத்தி, கழக அமைப்பு விதிகள்படி தேர்தல் நடத்தினாலும், அது நமக்கு சாதகமாகவே அமையும். ஏனெனில் நினைப்பவர்கள் எல்லாம் மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டிபோட முடியாது. கட்சித் தலைமையால் கை காட்டப்படுபவர்கள் மட்டுமே போட்டியிட்டு பதவியைப் பெற முடியும்’ என நம்பிக்கையுடன் தெரிவித்து சபையைக் கலைத்திருக்கிறார்கள்.

ஆனாலும், வயதை காரணம் காட்டி ஓரங்கட்டப் படவிருக்கிற சீனியர்களில் சிலர் த.வெ.க.வை நோக்கி வெள்ளைக்கொடி காட்டி வருகிறார்கள். பல மாவட்டங்களில் த.வெகவினருடன் திரைமறைவு கூட்டணி வைத்துக்கொண்டு வருமானம் பார்க்கவும் துவங்கியிருக்கிறார்கள். குறிப்பாக கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாஜி அமைச்சர் அவருக்கு எதிராக புகார் கொடுத்த த.வெ.க. எம்.எல்.ஏ.வுடன் கைகோத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏன் இந்த ஓரவஞ்சனை?

இந்த நிலையில்தான் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி, கட்சித் தலைவராக பதவியேற்ற 9வது ஆண்டில் ஸ்டாலின் அடியெடுத்து வைத்தார். இதைத்தொடர்ந்து அன்றைய தினம் யாருமே எதிர்பார்க்காத வகையில், பிரிக்கப்பட்ட 110 மாவட்டங்களின் லிஸ்ட் திடீரென வெளியானது. அதில், சென்னையில் சில குளறுபடிகளும் காணப்பட்டன. அதாவது, சென்னையைப் பொறுத்தவரை மாஜி அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியனை தாஜா செய்யும் வகையில், அவர்கள் இருவருக்கு மட்டும் தலா மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படை விதி இவர்களுக்காக மட்டும் தளர்த்தப்பட்டிருக்கிறது. இது தலைமையின் பாரபட்ச நடவடிக்கை என இதர சீனியர்கள் புலம்ப தொடங்கியிருக்கிறார்கள். மேலும், மா.சுப்பிரமணியனுக்கு சைதாப்பேட்டை, வேளச்சேரி, மயிலாப்பூர் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதால், வேளச்சேரி மற்றும் மயிலாப்பூர் தொகுதிகளுக்கு ஏற்கெனவே மாவட்டச் செயலாளராக இயங்கி வந்த தவேலு அதிருப்தியில் இருக்கிறார்.

கட்சியில் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என முழங்கியது இளைஞரணிச் செயலாளர் உதயநிதி. கட்சி எப்படி இயங்க வேண்டும் என ஸ்டாலின் மனைவி துர்கா மற்றும் சபரீசன் ஆகியோர்தான் ஸ்கெட்ச் போட்டனர். குறிப்பாக சபரீசனின் ‘பென்’ நிறுவனம்தான் மாவட்ட எல்லைகளைப் பிரித்து 110 மாவட்டங்களின் லிஸ்ட்டை வெளியிட்டிருக்கிறது. இப்படி ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடித்திருக்கிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்” என சொல்லி முடித்தார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கட்சி வளர்ச்சிக்காக தலைவர் இப்படியொரு முடிவெடுத்து செயல்படுத்திவருகிறார். ஊடகங்கள் இதை பூதக்கண்ணாடி வைத்து பார்ப்பது தவறு. ஏதாவது குளறுபடிகள் இருந்தால் அதுகுறித்து ஆய்வுசெய்து தலைவர் முடிவெடுப்பார்” என்றார்.
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடலாம். ஆனால், குழந்தை தூங்கணுமே!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here