back to top
10.4 C
London
Saturday, October 17, 2026
No menu items!
Homeசினிமாகேப்டனை நெகிழவைத்த தேவாவின்...‘என் மன்னவரு சின்னவருதான்’ பாட்டு! - Kumudam

கேப்டனை நெகிழவைத்த தேவாவின்…‘என் மன்னவரு சின்னவருதான்’ பாட்டு! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


படம் அவுட்டு… பாட்டு ஹிட்டு! – வி.ராம்ஜி

எண்பதுகளில் அறிமுகமாகி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து உயர்ந்தவர் விஜயகாந்த். விஜயராஜாகப் பிறந்து, விஜயகாந்தாக அறிமுகமாகி, புரட்சிக்கலைஞர் என்றும் கேப்டன் என்றும் இன்றைக்கும் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கும் விஜயகாந்த் படங்களும் பாடல்களும் இன்றளவிலும் தனித்தனிப் பட்டியல் போட்டு, ஆழப்பதிந்திருக்கின்றன. 

இசைஞானி இளையராஜா தொடக்கத்தில் தந்த ‘ஏதோ நினைவுகள் கனவுகள்’ போல, ‘சங்கத்தில் பாடாத கவிதை’ போல, சங்கர் கணேஷ் தந்த ‘தனிமையிலே ஒரு ராகம் ஒருதாளம்’ போல, தேனிசைத்தென்றல் தேவாவின் இசையில் கேப்டனுக்கு அமைந்த பாட்டுகள், ஹிட்டுகளைக் கொடுத்து, ரசிகர்களைக் கவர்ந்தன. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் ‘என் ஆசை மச்சான்’ என்ற படத்தில் விஜயகாந்த், ரேவதி, ரஞ்சிதா முதலானோர் நடித்திருந்தார்கள். ‘சும்மா வெளுத்துவாங்கிருப்பாரு’ என்றொரு வார்த்தையை பல விஷயங்களுக்குப் பயன்படுத்துவோம். ‘ஆடியிலே சேதி சொல்லி’ பாடலில், தேவா உண்மையிலேயே வெளுத்து வாங்கியிருப்பார்.

கவிஞர் காளிதாசன், தேவாவுக்கு ஆஸ்தானப் பாடலாசிரியர். காளிதாசனை நமக்குத் தெரிவதற்கு தேவாதான் காரணம். தொடர்ந்து தன் படங்களில் கவிஞர் காளிதாசனைப் பயன்படுத்திவந்தார். கேப்டன் படமாக இருந்தபோதும்… பாடல்களை ரசிக்கரசிக்கக் கேட்டு வாங்குவதில் ஆர்.சுந்தர்ராஜன் வல்லவர் என்றபோதும் கவிஞர் காளிதாசனுக்கும் ‘என் ஆசை மச்சான்’ படத்தில் பாடல் எழுத வாய்ப்பை வழங்கினார். அதேபோல், இதேபடத்தில் ‘சோறு கொண்டு போறவளே அந்த சும்மாடை இறக்கு’ என்ற பாடலை கங்கை அமரன் எழுதினார்.

ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்சு…
சேதி சொன்ன மன்னவருதான்…
எனக்கு சேதி சொன்ன மன்னவருதான்…
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச…
என் மன்னவரு மன்னவருதான்…

என்ற பாடலை விஜயகாந்தைப் பார்த்து ரேவதி ஆடிப்பாடுவது போல் அமைந்திருக்கும் இந்தப் பாடலை நாற்பது ப்ளஸ் வயதைக் கொண்டவர்கள் இன்றைக்கும் ரசித்துக் கொண்டாடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், இந்தப் பாடலின் வழியே தங்களையும் தங்களின் காதலையும் வெளிப்படுத்தி, காதலர்களிடம் உத்தரவாத்தைக் கேட்டுவாங்கிக் கொண்ட பெண்கள் ஏராளம். சித்ராவின் குரலில் இன்னும் இளமையும் நம்பிக்கையும் குலுங்கிச் சிரிக்கும். முக்கியமாக, மேளத்தை உறுமவிட்டிருப்பார் தேவா. தவிர, நம் மனதின் அடிப்பகுதி வரை சென்று ஊடுருவக்கூடிய மேளமும் உருமிமேளமும் நாகஸ்வரமும் தலைவாழை விருந்தாக தேவா தந்துவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

சேலை மேல சேலை வச்சு…
செவத்த பட்டு நூறு வச்சு…
ஊரு மெச்ச கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு…
சேலை மேல சேலை வச்சு…
செவத்த பட்டு நூறு வச்சு…
ஊரு மெச்ச கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு…

என்ற பாடல் காதல் பாட்டுதான். ஆனாலும் ஒரேயொரு உத்தமரு என்கிற வரியும் அந்த வரிகளைக் கொண்டே வருகிற இசையும் கேப்டன் ரசிகர்களையும் தொண்டர்களையும் இன்றைக்கும் சிலிர்க்கவைத்தபடியே இருக்கிறது.

வீரபாண்டி தேரு போல…
பேரெடுத்த சிங்கம்தான்…
ராமா் என்ன தர்மரென்ன…
மாமன் மனசு தங்கம்தான்…
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம்தான்…

இந்த இடத்தில், தேவா தன் ராகஜாலங்களைக் காட்டியிருப்பார். ‘வீரபாண்டி தேரு போல…’ என்று பாடும்போது விஜயகாந்த் ரசிகர்கள் கைத்தட்டத் தொடங்கினார்கள். ‘பேரெடுத்த சிங்கம்தான்…’ என்ற போது விசில் பறந்தது. ‘ராமர் என்ன தர்மர் என்ன மாமன் மனசு தங்கம்தான்’ என்றதும் ‘தலைவா’ என்று எழுந்து நின்று ஆட்டம்போட்டார்கள். ‘மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம்தான்’ என்று சித்ராம்மா பாட, ரேவதி வாயசைத்து நடிக்க, கிறுகிறுத்துப்போனதென்னவோ கேப்டனின் ரசிகர்கள்தான்! ஷெனாயில் விளையாடுவார். புல்லாங்குழலில் கொஞ்சி மகிழ்வார் தேவா.

இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் பாடலுக்கான இசை துள்ளலாக இருக்கும்; அதேசமயத்தில், பாடுகிற ஸ்டைலிலும் பாவனைகளிலும் ‘ஹஸ்கி’ வாய்ஸ் மேலோங்கியிருக்கும். இசையில் அலப்பறை தந்துவிட்டு, பாடல் வரிகளுக்குள் மென்மை காட்டுகிற தேவா ஸ்டைலில், கிராம – நகர வித்தியாசங்கள் இல்லாமல், தேவாவின் பாட்டுக்கு அடிமையானார்கள் ரசிகர்கள்!

பூவு கூட நாரு போல…
பூமி கூட நீரு போல…
மாமன் கூட சேர்ந்திருப்பேன்…
மதுரை வீரன் பொம்மி போலே…

என்று சித்ரா முதலில் பாடும்போது கொஞ்சலாக இருக்கும். அந்தக் கொஞ்சல் ஒவ்வொரு வார்த்தையையும் உச்சரிக்கும்போது நமக்கு உணர்த்தும்.

பூவு கூட நாரு போல…
பூமி கூட நீரு போல…
மாமன் கூட சேர்ந்திருப்பேன்…
மதுரை வீரன் பொம்மி போலே…
இதே வரிகளை அடுத்துப் பாடுகிற போது, ஒரு நம்பிக்கையும் உறுதியும் அந்த வார்த்தைகளுக்குக் கொடுத்திருப்பார். இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு, ‘அண்ணே, இந்தப் பாட்டு ரொம்ப நல்லா வந்திருக்குண்ணே’ என்று விஜயகாந்த் மகிழ்ந்தும் நெகிழ்ந்துமாகப் பாராட்டினார் என தேனிசைத் தென்றல் தேவா பெருமிதத்துடன் மேடை ஒன்றில் சொல்லியிருக்கிறார்.

சேலையோட நூல போல…
சேர்ந்திருக்கும் பந்தம்தான்…
திருமாலும் சொக்கரும் சேர்ந்து…
தேடித்தந்த சொந்தம்தான்…
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம்தான்…

இந்த வரிகளைக் கேட்டுவிட்டு, கேப்டன் விஜயகாந்த் உணர்ச்சிவசப்பட்டுப் போனாராம். விஜயகாந்தின் திரைப்பட விநியோகக் கம்பெனிக்கு ‘ஆண்டாள் அழகர்’ என்பதுதான் பெயர். அந்த அழகரும் மதுரையின் சொக்கநாதரும் மதுரைவீரனின் மனைவி பொம்மியின் பெயருமாக, சொந்த ஊர் நினைவுகளை தேவாவிடம் சொல்லிச் சொல்லி பூரித்த கேப்டனின் நினைவுகளும் தேவாவின் எளிய இசையும் இந்தப் பாடலை அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கச் செய்தது என்னை! நான் அடிக்கடி கேட்கிற பாடல்களில் ‘ஆடியிலே சேதி சொல்லி’ பாடலும் ஒன்று!

தேவாவின் பல பாடல்கள் கொண்டாட்ட மனநிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் மெட்டுகள். குறிப்பாக, கோயில் திருவிழா, கோயில் கொடை என்றாலே தேவாவின் பாடல்கள், ஒலிப்பெருக்கியில் ஊருக்கே கேட்கும். கேட்கிற இளசுகள் ஆட்டமும்பாட்டமுமாக திருவிழாவை இன்னும் பிரமாண்டமாக்குவார்கள். குறிப்பாக விஜயகாந்த் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், இளையராஜாவின் ‘நீ பொட்டு வச்ச தங்கக்குடம்’ பாடலையும் தேவாவின் ‘என் மன்னவரு சின்னவருதான்’ என்கிற இந்தப் பாடலையும் போட்டு, ‘வைப்’ ஏற்றினால்தான், அவர்களின் ஆர்ப்பாட்டமோ பொதுக்கூட்டமோ நிறைவடையும் அவர்களுக்கு!

தேனிசைத் தென்றல் தேவாவின் இசையில் உருவான இந்தப் பாடலைக்கேட்டால், டென்ஷன், டிப்ரஷன் என அயர்ச்சியாக இருப்பவர்கள் கூட, உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் முதுகு நிமிர்த்திக்கொள்வார்கள்.
நானும் அப்படித்தான்; எனக்கும் இப்படித்தான்!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here