Home தமிழ்நாடு தமிழ்நாட்டின் ஆளுநராக அர்லேகர் ! மக்கள் பவனில் முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து ! –...

தமிழ்நாட்டின் ஆளுநராக அர்லேகர் ! மக்கள் பவனில் முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து ! – Kumudam

0


தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் இன்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், முதலமைச்சர் விஜய் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கிண்டியில் உள்ள மக்கள் பவனில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, ஆளுநருக்கு பூங்கொத்து வழங்கி தனது வாழ்த்துகளை முதலமைச்சர் பகிர்ந்து கொண்டார்.

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக அர்லேகர் நியமனம்!

தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவி வகித்து வந்த ஆர்.என். ரவி, கடந்த மார்ச் 5-ஆம் தேதி மேற்கு வங்காள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழ்நாட்டிற்கான புதிய ஆளுநர் உடனடியாக நியமிக்கப்படாததால், கேரள மாநில ஆளுநராக இருந்த ஆர்.வி. அர்லேகர், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

பொறுப்பு ஆளுநராகச் செயல்பட்டு வந்த அர்லேகர், முதலமைச்சர் விஜய்க்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தமிழ்நாட்டிற்கு முழுநேர ஆளுநர் நியமிக்கப்படாமல் இருந்தது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றது.

புதிய ஆளுநர் நியமனம் குறித்து எழுந்த எதிர்பார்ப்பு!

இந்தச் சூழலில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஆந்திரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கிரண் ரெட்டி, தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின. பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்திற்குப் பிறகு இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போது எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

தொடர்ந்து நிலவி வந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழ்நாடு உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், கேரள ஆளுநராகப் பணியாற்றி வந்த ஆர்.வி. அர்லேகர், தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து!

முழுநேர ஆளுநராக அர்லேகர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத்தளப் பதிவு வாயிலாக அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று முழுநேர ஆளுநராகப் பொறுப்பேற்ற அர்லேகரை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்தார்.

இதற்காகக் கிண்டியில் உள்ள மக்கள் பவனுக்குச் சென்ற முதலமைச்சர் விஜய், ஆளுநர் அர்லேகரைச் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு முழுநேர ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இருவருக்கும் இடையே நடைபெற்ற இந்தச் சந்திப்பு அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version