Home அரசியல் மதுராந்தகம் இடைத்தேர்தல்…எடப்பாடியின் பிடிவாதம், விஜய்யின் வியூகம்..அதிமுக சரிந்தது எப்படி? – Kumudam

மதுராந்தகம் இடைத்தேர்தல்…எடப்பாடியின் பிடிவாதம், விஜய்யின் வியூகம்..அதிமுக சரிந்தது எப்படி? – Kumudam

0


பொதுத்தேர்தலில் தமிழ்நாடு அளவில் பெற்ற ஆதரவை மதுராந்தகம் இடைத்தேர்தலிலும் பெற்றிருக்கிறது த.வெ.க. ஆனால், கையிலிருந்து பறிபோன ‘சீட்’டுக்கு, ‘திருட்டு’, ‘துரோகி’ பட்டம் கட்டியும் சீட்டுக்கட்டாய் சரிந்திருக்கிறது அ.தி.மு.க.

இதற்கிடையே கூட்டணியை இழந்து குழம்பிப்போயிருந்த தி.மு.க., தீப்பிழம்பாய் திகிலூட்டி பார்க்க, ஆளும் முகாம் சற்று அரண்டுபோய் இருப்பதும், போட்டியாளர்கள் நிகழ்த்திய மேஜிக்கும், சொதப்பிய லாஜிக்குகளும் தான் தமிழக அரசியலில் சூடுதணியாத ஹாட் டாபிக்!

2026 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது மதுராந்தகம் (தனி) தொகுதியில் அதி.மு.க. சார்பில் 69,284 வாக்குகள் பெற்று (7,194 வாக்கு வித்தியாசம்) வெற்றிப் பெற்றிருந்த மரகதம் குமரவேல், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் த.வெ.க. வேட்பாளராக அதே தொகுதியின் இடைத்தேர்தலில் மீண்டும் களம் கண்டிருந்தார்.

அவருக்கு எதிராக திமுக பரந்தாமன், அதிமுக கணிதா சம்பத் நாதக ஜானகிராமன், சிபிஎம் சுகந்தி ஆகிய நான்கு முக்கிய வேட்பாளர்களும், சுயேட்சைகளும் போட்டியிட்டிருந்தனர். அக்டோபர் 9ல் நடந்த வாக்கு எண்ணிக்கையில் 74,048 வாக்குகளை பெற்று, திமுக வேட்பாளரைவிட 20,048 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மீண்டும் எம்.எல்.ஏ. ஆகியிருக்கிறார் மரகதம்.

அதிமுக கோட்டையான மதுராந்தகத்தை தவெக வீழ்த்தியதோடு, அங்கு கடந்த பொதுத்தேர்தலில் 3ம் இடம் பிடித்திருந்த தி.மு.கவும் இம்முறை அதிமுகவை 3ம் இடத்துக்கு தள்ளி முன்னேறியிருக்கிறது. மதுராந்தகம் ரிசல்ட் குறித்து மூத்த அரசியல் பார்வையாளர் ஒருவரிடம் பேசினோம்.

“இந்த இடைத்தேர்தல் உண்மையில் தி.மு.க.வை விட, அ.தி.மு.க, த.வெ.க.வுக்குதான் வாழ்வா, சாவா யுத்தம் ‘கட்சி Vs ஆட்சி என்ற எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக இது அவர்களுக்கு இருந்தது. ஆனால், எடப்பாடியின் பிடிவாதமும், அதிமுகவினரின் அலட்சியமும்தான் விசிலுக்கு களம் சாதகமாக காரணமாகிவிட்டது.

அன்புமணி அட்வைஸ்… புறக்கணித்த எடப்பாடி!

மதுராந்தகத்தில் பட்டியல் மற்றும் வன்னியர் சமூக வாக்குகள் அதிகம் கடந்த முறை அதிமுக இங்கு வெற்றிபெற பா.ம.க. கூட்டணி முக்கிய காரணம், பாமக அங்கு தனியாக நிற்கும்போது 15,000 சமூக வாக்குகள் விழும் என்றால், அதிமுக மாதிரியான பெரிய கட்சியோடு கைகோக்கும்போது அதுபோல இரட்டிப்பு சமூக வாக்குகள் ஸ்வீப் ஆகும்.

பட்டியலினத்தவர்களின் வாக்குகள் தவெகவுக்கு இம்முறை பெருமளவு மடைமாற வி.சி.க துணையாக இருக்க, வன்னியர் வாக்குகளை அறுவடை செய்ய எடப்பாடி பாமக கேட்கும் விலையை கொடுத்து அவர்களது ஆதரவை தக்கவைத்திருக்க வேண்டும். ஆனால், ‘புரட்சி பாரதம் ஜெகன் மூர்த்தியை இரட்டை இலை சின்னத்திலேயே நிறுத்துங்கள் பட்டியலின தலைவரே நிற்கும்போது ஃபேஸ் வேல்யூ இருக்கும்.  எதிர்கால அரசியலுக்கு அது நல்லது என்ற அன்புமணியின் கோரிக்கைக்கு எடப்பாடி இறங்கவில்லை. அதனால் பா.ம.க. ‘ஆதரவில்லை’ என சொல்லிவிட்டது.

தொகுதியில் செல்வாக்கு மிகுந்த மேல்மருவத்தூர் சக்தி பீட புள்ளியைக்கூட அ.தி.மு.க. புள்ளிகள் சந்திக்கவில்லை சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி போன்றோரைக்கூட எடப்பாடி மதிக்கவில்லை. வன்னியர் ஓட்டுகள் தானாக வந்துவிடும். எம்.எல்.ஏக்களை இழந்த அனுதாபத்தில் மக்கள் தங்களையே மீண்டும் ஆதரிப்பார்கள் என மிதப்பில் இருந்துவிட்டது அதிமு.க. தலைமை ‘திமுகவுக்கு மதுராந்தகம் என அண்டர்டீலிங் போட்டுவிட்டனர்.

தீயாய் வேலை பார்த்த த.வெ.க!

மறுமுனையில், த.வெ.க தேர்தல் பொறுப்பாளராக மதுராந்தகத்துக்கு அமைச்சர் ஆதவ் இருந்தாலும், வினோத், ராஜ்குமார், ரஞ்சித்குமார் உள்ளிட்ட இதர அமைச்சர்களும் பூத்துகளைப் பிரித்துக்கொண்டு சுழன்றார்கள். பூத் நிர்வாகிகளையும், சில பகுதிகளில் வாக்காளர்களையும் சிறப்பாக கவனித்திருக்கிறார்கள். மேல்மருவத்தூர் புள்ளியை அமைச்சர்கள் வரிசையாக பார்த்தது, பா.ம.க.வை புகழ்ந்தது. ‘அமைச்சரவையில் பா.ம.க. என எழுந்த பேச்சு, சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி அமைச்சர்கள் பேசியது. ‘அதிகாரத்தை நெருங்கிவிட்டோம்’ என ராமதாஸ் பேசியதாக வாட்ஸ் ஆப்பில் உலவவிடப்பட்ட ஆடியோ போன்றவை வன்னியர் சமூக வாக்காளர்களிடம் எடுபட்டது.

திருமாவின் ஆதரவு பட்டியலின மக்களின் வாக்குகளை கணிசமாக தவெகவுக்கு மடைமாற்றியது. ஆனால், வி.சி.க. உடனிருந்ததாலயே சில பூக்களில் மாற்றுச்சமூக வாக்குகள் தவெகவுக்கு வரவில்லை என்பதையும், அ.தி.மு.க. மாஜிக்களுக்கு சீட் கொடுத்ததால் நடுநிலையாளர்களே தவெகவை ரசிக்கவில்லை என்பதையும் பார்க்க முடிந்தது. இவை எல்லாவற்றையும்விட முதல்வர் விஜய் களமிறங்கியது. அதிருப்தி வாக்காளர்களையும் உற்சாகப்படுத்திவிட்டது.

ஸ்மார்ட் வொர்க் தி.மு.க.

இன்னொருபுறம், பெரிதாக கூட்டணி பலம் இல்லாவிட்டாலும், தி.மு.க. ஸ்மார்ட்டாக வேலை செய்தது. இடைத்தேர்தலுக்கான எந்த ஃபார்முலாவையும் பயன்படுத்தவில்லை. தி.மு.க.வின் பாரம்பரிய ஓட்டுகள் வந்தால்போதும் என தெளிவாக வேலை செய்தார்கள். அதாவது, ‘ஒரு குடும்பத்திலிருந்து முன்பு 10 ஓட்டு வருமென்றால், அது ஏன் பொதுத்தேர்தலில் 6 ஆனது? குடும்ப உறுப்பினர்களிடம் பேசி 10 ஓட்டு அப்படியே வரும்படி பாருங்கள்’ என வேலை செய்தார்கள்.

ஆனால், ‘இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் கடந்த திமுக ஆட்சி நிறைவடையும் தருவாயில் நடந்த இடைத்தேர்தல்களில் கூட ஸ்டாலின் பிரசாரத்துக்கே போகாமல், திமுக சுமார் அரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.  இம்முறை முதல்வர் விஜய் களமிறங்கியே 20,000 வாக்குகள் என்பது மிகவும் குறைவுதான்.

பொதுத்தேர்தலில் கூட்டணி இல்லாமலே, தலைவர் பிரசாரம் செய்யாமலே 31 சதவிகித வாக்குகள் வங்கியிருந்தோம். இப்போது ஆளுங்கட்சி. கூட்டணி பலத்தோடு கூடுதலாக 10 சதவிகிதம்தான் கூடுதலாகக் கிடைத்திருக்கிறது. அதுவே, கடந்தமுறை கூட்டணியோடு 30 சதகிதம் வாங்கியிருந்த தி.மு.க. இம்முறை 1 சதவிகிதம்தான் குறைவாக வாக்கு வாங்கியிருக்கிறது.

இப்போக்கு நல்லதல்ல’ என அப்செட்டில் மூழ்கியிருக்கிறது பனையூர் முகாம்.” என சொல்லி முடித்தார்.

அடுத்தடுத்த இடைத்தேர்தல்களுக்கு நல்ல பாடம்!



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version