back to top
18.6 C
London
Wednesday, October 14, 2026
No menu items!
Homeசினிமாநதிக்கரை சீரழிவுகள்; மிடில் கிளாஸ் தோல்விகள்...கண்ணீரில் நனையவைக்கும் ‘மகாநதி!’ - Kumudam

நதிக்கரை சீரழிவுகள்; மிடில் கிளாஸ் தோல்விகள்…கண்ணீரில் நனையவைக்கும் ‘மகாநதி!’ – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


கொஞ்சம் பேச்சு… கொஞ்சம் சினிமா! – வி.ராம்ஜி

‘மகாநதி’ படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று கேட்டால், திருச்சியில் பிறந்த என்னிடம் ‘காவிரியில் எத்தனை முறை குளித்திருக்கிறாய்?’ என்று கேட்டால், எப்படி சரியாகச் சொல்லமுடியாதோ அப்படித்தான்! ஆனால், நேரம் கிடைக்கும் போதெல்லாம், மனதில் ‘மகாநதி’ வந்துபோகும்போதெல்லாம், டிவியில் என் இரவு கிருஷ்ணசுவாமியுடனும் அவரின் வலியைச் சொல்லும் வாழ்க்கையுடனும் கழியும்.

மேல்தட்டு மக்கள் தொடமுடியாத உயரத்தில் இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். நடுத்தர மக்கள், மேல்தட்டு சிந்தனைகளுடனும் ஏக்கங்களுடனும் தவித்து மருகுகிறார்கள். பொருளாதாரத்தில் மேலிருப்பவர்களுக்கு எந்தக் கவலையுமில்லை; கீழிருப்பவர்களுக்கும் இதுகுறித்த அல்லாட்டங்களெல்லாம் இல்லை. இந்த நடுத்தர வர்க்கத்தினர்தான், அத்தனை அல்லாட்டங்களுடனும் இருக்கிறார்கள். அப்படியொரு நடுத்தர வர்க்க குடும்பஸ்தனின் ஆசையைப் புரிந்துகொண்டு, அவனை நம்பவைத்து கழுத்தறுக்க, அவன் படுகிற படாதபாடுகள்தான் மகாநதி.

ஜெயிலுக்குள்ளே வரும் கிருஷ்ணசுவாமியில் இருந்து கதை தொடங்குகிறது. அவரின் அறையில் இருக்கும் பஞ்சாபகேசனின் கேள்விதான் நமக்கும். ’ஏன் ஜெயில்? என்ன தவறு?’. கோபத்துடன் பதில் சொல்லுவார் கிருஷ்ணசுவாமி கமல். ‘நான் திருடன் இல்லீங்க. முட்டாள்’ என்று சொல்லுவார். அடுத்து, ‘ஆமாம், நீ நாஸ்திகனா? கடவுள் நம்பிக்கை உண்டா இல்லையா?’ என்று கேட்க, ‘உண்டு இல்லை’ என்பார் கமல்.

ஒரு நதியைப் போல ப்ளாஷ்பேக் விரியும். கும்பகோணம் அருகில் உள்ள தேப்பெருமாநல்லூர். காவிரிக் கரையோரத்தில், சீவல் கம்பெனி, வயல், விவசாயம் என மாமியார், மகன், மகள் என்று வாழ்ந்துகொண்டிருக்கிற கிருஷ்ணசுவாமிக்குள் இருக்கும் மேல்தட்டு ஆசை, வெளிநாட்டில் இருந்து வருகிற நண்பன் மற்றும் அவனுடைய குடும்பத்தார் மூலமாக தூபமிடப்படுகிறது. நண்பன் லண்டனில் இருந்து வந்திருக்கிறான்.

அவன் குழந்தைகள் பேசும் ஆங்கிலத்தைக் கண்டு தன்னுடைய குழந்தைகள் மலங்க மலங்க முழிக்கிறார்கள். அப்படியொரு தரத்துடன் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க உள்ளுக்குள் ஏங்குகிறான் கிராமத்து கிருஷ்ணசுவாமி.

அடுத்து, அந்த லண்டன் நண்பரின் கார். அதைப் பார்த்து கமலின் பையன் ஆசைப்படுகிறான். அதன் பிறகு சிலபல நாட்கள் கழித்து கோயிலுக்குப் போய்விட்டு வரும்போது, வழியில் அந்தக் கார் தென்படுகிறது. அந்தக் கார் கண்ணில் படாமலேயே இருந்திருக்கலாம். அது லண்டன் நண்பன் வைத்திருந்த கார். நண்பன் செல்வதாக காரை மடக்குகிறார் கமல். ஆனால், காரை விற்றுவிட்டதால், இப்போது வாடகைக்கு ஓடும் தகவல் சொல்லப்படுகிறது. உள்ளே சென்னையில் இருந்து வந்த வி.எம்.சி.ஹனீபாவும் துளசியும்! மோதலுடன் கூடிய சந்திப்பு, கனிவுடன் அவர்களை வீட்டுக்கு அழைத்துச்செல்ல வைக்கிறது.

கமலின் வெள்ளந்தித்தனத்தையும் குணத்தையும் இருக்கிற நிலபுலன்களையும் கணக்கிட்டு, ‘சென்னைக்கு வாங்க சார். பிஸ்னஸ் பண்ணுங்க சார். எல்லா உதவியும் செய்றேன். பசங்க ரொம்ப பிரில்லியண்ட். அவங்களுக்கு சென்னைலதான் நல்ல நல்ல ஸ்கூல் இருக்கு’ என்று சொல்ல, அவ்வளவுதான். இருப்பதை விற்றுவிட்டு, சென்னையில் ஒரு சிட்பண்ட்ஸ் அலுவலகம் திறக்கிறார் கமல். அதுதான் ஒரு புயல் போல் மொத்த வாழ்வையும் குலைத்துப்போடுகிறது.

குழந்தைகளின் கல்வி, பொருளாதார ஏற்றம் என்று ஆசைப்படும் அதேவேளையில் மனைவியை இழந்து நிற்கும் நமக்கு இவள் நல்லதொரு வாழ்க்கைத்துணையாவாள் என்று துளசியிடம் மயங்க, அடுத்தடுத்த கட்டத்தில், அவளும் ஏமாற்றுகிறாள். ஹனீபா மொத்தப் பணத்தையும் சுருட்டிக்கொள்கிறார். பணமும் போச்சு; மனசும் உடைஞ்சாச்சு! பணம் கட்டியவர்கள் அடித்து உதைக்க, பணமோசடி குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டு ஜெயிலுக்குப் போகிறார் கமல். அவரின் கதையைக் கேட்டு கலங்கிப்போகிறார் பஞ்சாபகேசன் பூர்ணம் விஸ்வநாதன்.

நடுவே, மணமகள் தேவை என்று கமல் கொடுத்த விளம்பரத்துக்கு யமுனா எனும் பெண் விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் அதெல்லாம் நொறுங்கிவிட்டதே! சென்னையில் வாங்கிய வீட்டையும் ஹனீபா அபகரித்துக்கொள்கிறார். பாட்டியுடன் குழந்தைகள் வாடகை வீட்டில் இருக்கிறார்கள். பூர்ணம் விஸ்வநாதனைப் பார்க்க மகள் வருகிறார். அவர்தான் யமுனா. கமலை மணந்துகொள்ள சம்மதம் சொல்லி கடிதம் எழுதிய சுகன்யா. நாயகனும் நாயகியும் இப்போது ஜெயிலுக்குள் சந்தித்துக்கொள்கிறார்கள். நசிந்து குலைந்த வாழ்க்கையில், யமுனாவின் அறிமுகம் சின்னதான மெழுகு வெளிச்சம். இளைப்பாறல்!

ஆனால் ஒருகட்டத்தில், வயதுக்கு வந்த கமலின் மகள், ஹனீபாவால் காமுகன் மோகன் நடராஜனுக்கு இரையாக்கப்பட, அடுத்து கோல்கத்தாவில் விபச்சார விடுதிக்கு விற்கப்படுகிறாள். கமலின் மகன் காணாமல் போகிறான். மாமியார் இறந்துவிடுகிறார். வெளியே இவ்வளவு இழப்புகளும் கொடுமைகளுமென்றால், உள்ளே ஜெயிலுக்குள் நடக்கிற அரசியல். இதில் உதைபடுகிறார் கமல். ஒருகட்டத்தில் உதைகொடுக்கிறார். இவற்றையெல்லாம் அனுபவித்துவிட்டு வெளியே வரும் கமல், தன் மகனை கழைக்கூத்தாடிக் கூட்டத்தில் கண்டுபிடிக்கிறார். மகளைத் தேடி தனுஷ் என்கிற ஹனீபாவிடம் செல்ல, அவருக்கு கோல்கத்தா சோனாகஞ்ச் விவரம் சொல்லப்படுகிறது.

‘நானும் துணைக்கு வரேன்’ என்று வருங்கால மாமனார் பூர்ணம் விஸ்வநாதனும் உடன் வருகிறார். ‘சோனாகாஞ்சுக்கு மாமனாரும் மாப்பிள்ளையும் வர்றதை இப்பதான் பாக்கறேன்’ என்கிறான் கார் டிரைவர். அங்கே, அந்த இடத்தில், விபச்சார விடுதியில் மகளைப் பார்க்கிறார்; பதறுகிறார்; அலறுகிறார்; மீட்டெடுக்கிறார். பையன் கிடைச்சிட்டான், பொண்ணு கிடைச்சிட்டா. இத்தனைக்கும் காரணமானவர்களைப் பழிவாங்கத் துடிக்கிற கிருஷ்ணசுவாமி அவர்களை எப்படிப் பழிவாங்கினார் என்பதை வலிக்க வலிக்கச் சொன்னதுதான் மகாநதி.

முதல் விஷயம்… மகாநதி எனும் டைட்டில். அடுத்து… காவிரிக்கரையில் பிறந்து, கூவம் ஓடுகிற சென்னையில் சிக்கிச்சின்னாபின்னமாகி, கங்கைக்கரையில் விபச்சார விடுதியில் இருக்கும் மகளை மீட்டு வந்து என நதிக்கரையினூடான, நதிக்கரை நாகரீகத்தையும் தன் வாழ்வையும் ‘மகாநதி’ மூலம் சொல்லியிருப்பார் கமல்.

கமலின் பெயர் கிருஷ்ணா. அவரின் மனைவியாக புகைப்படத்தில் இருக்கும் ஜெயசுதாவின் பெயர் நர்மதா. மகளின் பெயர் காவேரி. பையனின் பெயர் பரணீதரன். மாமியார் பெயர் சரஸ்வதி. வில்லன் நம்பர் 2 வி.எம்.சி.ஹனீபாவின் பெயர் தனுஷ் (தனுஷ்கோடி). வில்லன் நம்பர் 1 வெங்கடாசலம். பூர்ணம் விஸ்வநாதனின் பெயர் பஞ்சாபகேசன். அவரின் மகள் சுகன்யாவின் பெயர் யமுனா.

இப்படி படத்தில் பலரின் கேரக்டர் பெயர்கள் எல்லாமே நதிகளின் நீர்களின் பெயர்கள். அவ்வளவு ஏன்… ஒரேயொரு காட்சியில் வரும் விபச்சார விடுதி தலைவியின் மகள் பெயர் ஜலஜா. ‘மகாநதி’ என்று டைட்டில் வைத்துவிட்டு, நதியின் பெயர்களாக, நீரின் பெயர்களாக கமல் வைத்தாரா? அல்லது பெண்களைப் போற்றுவதாக நதிகளுக்குப் பெயர் சூட்டிவிட்டு, அவர்களை குலைத்துப் போடுகிற ஆண்வர்க்கங்களை அறைகிறாரா? தெரியவில்லை.

வெளிநாட்டு சாக்லெட்டை உடனே எடுக்கும் மகனை, பார்வையால் கட்டிப் போடும் கமல், பொண்ணு பேசும் இங்கிலீஷில் மெய்மறக்கும் கமல், ‘சர்ச்பார்க்ல சேக்கலாம். ஜெயலலிதா படிச்ச ஸ்கூலும்மா’ என்று பெருமிதப்படும் கமல், ‘வசதியா வாழநினைச்சேன். அது தப்பா?’ என்று கேள்வி கேட்கும் கமல், ‘இந்த நாய்க்குட்டியை நாம எடுத்துட்டுப் போகலாம்பா. அம்மா இல்லாம நான் கஷ்டமா படுறேன்.

அதேபோல இதையும் நாம பத்திரமா பாத்துக்கலாம்பா’ என்று சொல்லும்போது நெக்குருகிப் போகிற கமல், ஜெயிலில் உதைபடுகிறபோதும் பிறகு கிளர்ந்தெழுந்து வறுத்தெடுக்கிற போதும் உள்ள கமல், சுகன்யாவைக் கண்டதும் அப்படியொரு நிம்மதி படர்வதை முகத்தில் காட்டுகிற கமல், விபச்சார விடுதியில் பெண்ணைப் பார்த்ததும் கதறுகிற கமல், அவளைத் தூக்கிக்கொண்டு வரும்போது அடியும் உதையும் வாங்கி அப்படியே இயலாமையால் உட்கார்ந்துவிடுகிற கமல், மகளை அழைத்துச் செல்ல, விபச்சார விடுதியின் பெண்கள் உதவும்போது பிரமிப்பும் நன்றியுமாய் பார்க்கிற கமல், அந்த விடுதி தலைவியின் மகள் ஓடிப்போய் குங்குமம் எடுத்து வந்து மகள் காவேரியின் நெற்றியில் இட்டுவிட, கலங்கி செய்வதறியாது கைகூப்பி நன்றியைச் சொல்லாமல் சொல்லுகிற கமல், விடுதியின் வேதனைகளை தூக்கத்தில் உளறும் மகளைக் கண்டு நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறித் துடிக்கிற தகப்பனாக கமல், ‘ஒரு நல்லவனுக்கு கிடைக்கிற மரியாதை கெட்டவனுக்குக் கிடைக்குதே ஏன்?’, ‘உண்மையா இரு உண்மையா இருன்னு ஏன் அடிச்சு அடிச்சு என்னை வளர்த்தாங்க?’, ‘நல்லவேளை நீ அங்கே வரலை.

நல்லவேளை என் மாமியார் இப்போ உயிரோட இல்ல’ என்று எல்லாருக்காகவும் துக்கிக்கிற கமல், ‘நீங்க சொன்னதுதாம்மா கரெக்ட்டு. பட்டணத்துல மரியாதையே இல்லம்மா’ என்று அடிபட்டு அவமானப்பட்டு புரிந்து கொண்ட கமல்… என மகாநதியில் கமல் எடுத்திருக்கும் மகா அவதாரம், ‘தசாவதாரம்’ எல்லாம் தோற்றுப்போகும்!

படம் பார்க்கிற இருபது வயது இளைஞன் கூட கல்யாணமாகி, குழந்தைகளைப் பெற்ற தகப்பனைப் போல் துடித்துக் கதறிவிடுவான். ஒரு தந்தையின் நிலையை, ஏமாந்து போனவனின் வலியை, தோற்றுப்போனவனின் தாளமுடியாத வேதனையை அப்படியே நமக்குக் கடத்தியிருக்கும் மகாநதி, காலத்தால் அழிக்க முடியாத படங்களில் ஒன்று. கமல், சுகன்யா, மகாநதி ஷோபனா, சின்னப்பையன் தினேஷ், பூர்ணம் விஸ்வநாதன், வி.எம்.சி.ஹனீபா, மோகன் நடராஜன், எஸ்.என்.லட்சுமி, ராஜேஷ், துலுக்காணம் மகாநதி சங்கர் என மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார்கள்.

முக்கியமாக, மகாநதியில் எஸ்.என்.லட்சுமிக்கு இதுவரை கிடைக்காத கனமான வேடம். எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்தே நடித்து வந்த எஸ் என் லட்சுமிக்கு கமல் கொடுத்த படங்களெல்லாம் மிகப்பெரிய சர்ப்ரைஸ் சிகரங்கள்! அதேபோல், பூர்ணம் விஸ்வநாதன் பின்னியெடுத்திருப்பார். துலுக்காணம் கேரக்டரில் நடித்த சிவசங்கர், இந்தப் படத்தில் அறிமுகமாகி மகாநதி சங்கரானார்.

எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு கும்பகோணம், சென்னை, சிறைச்சாலை, கோல்கத்தா, கங்கை, கூவம், காவிரி என அனைத்தையும் அழகியலாகவும் துன்பச்சலனமாகவும் காட்டியிருக்கும். இந்தப் படம்தான் அறிமுகம் இவருக்கு! அதேபோல், ஜெயிலுக்குள் நடக்கிற அட்டூழியங்களை, அப்பட்டமாகக் காட்டிய முதல் தமிழ் சினிமா மகாநதியாகத்தான் இருக்கும். தன் கையே போனாலும் பரவாயில்லை என்று வில்லனை தன் கையுடன் வெட்டிச்சாய்த்துக் கொல்லும் க்ளைமாக்ஸும் பகீர் புதுசுதான்!

படத்தின் கதையையும் திரைக்கதையையும் கமல்ஹாசன் எழுதியிருந்தார். கமலும் ரா.கி.ரங்கராஜனும் இணைந்து வசனம் எழுதியிருந்தனர். சந்தானபாரதி இயக்கியிருந்த இந்தப் படத்தை அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்தார். ‘பதினாறு வயதினிலே’ படத்தைத் தயாரித்தவர் இவர்தான்!

படத்தின் மிகப்பெரிய பலம் இளையராஜா. கதையின் கனத்தை மேலும் கனமாக்கி நமக்குள் இசைவழியே கடத்தியிருந்தார் இளையராஜா. ’ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்’, ’பேய்களை நீ நம்பாதே’, ’தைப்பொங்கலும் வந்தது  பாலும் பொங்குது’, ’எங்கேயோ திக்குதிசை’, ’பிறர் வாடப் பல செயல்கள் செய்து’, ’தேடியது கிடைச்சாலே சந்தோஷப்படும் மனசு…’ என்று பாடல்களிலும் பின்னணியிலும் கதையின் உணர்வுகளைக் குலைக்காமல், அதேசமயம் அதை இன்னும் மிக கனமாக நமக்குள் ஊடுருவச் செய்திருப்பார் இசைஞானி.

‘நான் கங்கா நதியைக் காணும்பொழுது உண்மை விளங்குது! அட… இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது. சில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது. இந்த முட்டாள்தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது?’ என்ற வாலியின் வரிகள், சவுக்கால் விளாசியெடுத்துவிடும்.

1994ஆம் வருடம் ஜனவரி 14ம் தேதி, பொங்கலுக்கு வெளியானது ‘மகாநதி’. என் வாழ்வில் இன்னும் கூடுதலாக ஒட்டிக்கொண்டிருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஜெயலலிதாவின் தோழி சசிகலா. இவருடைய கணவர் நடராஜன். இவர் ‘தமிழ் அரசி’ என்றொரு வாரப்பத்திரிகை நடத்தினார். அதில் ‘மகாநதி விமர்சனப் போட்டி’ அறிவிப்பு வெளியானது. சிறந்த விமர்சனம் எழுதியவர்கள், கமலுடன் சந்திக்கவும் உரை நிகழ்த்தவும் ஏற்பாடு செய்திருப்பதாகவும் அறிவிப்பு!

அதன்படியே, விமர்சனத் தேர்வு வெளியானது. மூவாயிரம் பேரில் முந்நூறு, முந்நூறு பேரில் முப்பது, முப்பதுபேரில் பத்து என தேர்வு செய்து, அந்த விமர்சனங்களைப் பிரசுரித்தது, அந்தப் பத்திரிகை. அந்தப் பத்தோடு நானும் ஒன்று. அதற்கு முன்பு கமல்ஹாசனை பலமுறை நான் பார்த்திருக்கிறேன். இப்போது கமல் என்னைப்பார்த்தார். என்னிடம் பேசினார் என்பதுதான் ஆழ்வார்பேட்டை ஆபீஸில் நடந்த அற்புதம்!

‘மகாநதி’ படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று கேட்டால், திருச்சியில் பிறந்த என்னிடம் ‘காவிரியில் எத்தனை முறை குளித்திருக்கிறாய்?’ என்று கேட்டால், எப்படி சரியாகச் சொல்லமுடியாதோ அப்படித்தான்! ஆனால், நேரம் கிடைக்கும் போதெல்லாம், மனதில் ‘மகாநதி’ வந்துபோகும்போதெல்லாம், டிவியில் என் இரவு கிருஷ்ணசுவாமியுடனும் அவரின் வலியைச் சொல்லும் வாழ்க்கையுடனும் கழியும். ஒவ்வொருமுறையும் புதிதுபுதிதாக, இன்னும் இன்னுமாக என்னை கலங்கடிக்கும். ‘அட… இந்த சீன் இதுக்குதான் வைச்சாரா கமல்?’ என்று மிரட்டியெடுக்கும்.

உதாரணத்துக்கு இந்தக் காட்சியைச் சொன்னால்தான், மகள்களைப் பெற்ற என்னைப் போன்ற தகப்பன்சாமிகள், திட்டாமல் இருப்பார்கள். கும்பகோணம் வீட்டில், சாமிபடம், மனைவிபடம் இருக்கும். அந்த இடத்தில், நடிகை துளசி ஏதோ ஒன்றை எடுத்துப் பார்ப்பார். ‘அது காவேரியோடது. அரசிலை. கழுதை இப்பதான் பொறந்தது மாதிரி இருக்கு. அதுக்குள்ளே வளர்ந்துட்டா’ என்று வெட்கமும் பெருமிதமுமாகச் சொல்லுவார்.

ஆனால், அதன் பிறகு தோற்றவனாக, குற்றவாளியாக இருக்கும்போது, கமலின் மகள் காவேரி, ‘பெரியமனுஷி’யாவாள்; அடுத்து அவளை இரையாக்கிக் கொள்வான் வில்லன். இத்தோடு விட்டுவிடாமல், விபச்சார ஏரியாவிலும் விற்றுவிடுவான். பிறகு மகளை அங்கே பார்த்துக் கதறுவான் தகப்பன்.

அந்த ‘அரசிலை’ என்பது தெரியுமா? அரச இலையைப் போல இருக்கும். அரச மரத்து இலையைப் போலான வடிவில் இருக்கும். அதாவது பெண்ணின் உயிர் உறுப்பு வடிவத்திலே இருக்கும். பெண் குழந்தைகளுக்கு, இடுப்பில் அரைஞாணுடன் சேர்த்து, அரச இலை போல் வெள்ளியில் செய்து, கட்டிவிடுவார்கள். அந்தப் பெண் குழந்தையின் உறுப்புக்கு கவசமாக இருந்து, கண்ணியம் காக்கும் விஷயமாக, முக்கியமானதொரு அணிகலனாக அணிவித்துவிடுகிற வழக்கம் இன்றைக்கும் கிராமங்களில் உண்டு!

‘அது அரசிலை. காவேரியோடது. இப்பதான் பொறந்தது மாதிரி இருக்கு. ஆனா அதுக்குள்ளே வளர்ந்துட்டா’ என்று சொல்லுகிற தகப்பனின் பெருமையுடன் கூடிய வெட்கத்தையும் பின்னர், கொல்கத்தா ‘சோனாகஞ்ச்’ எனும்  விபச்சார விடுதியில் இருந்து மீட்டுவருவதும் சென்னையின் அன்றிரவில்… சிறுவயதில் இருந்தே தூக்கத்தில் புலம்பும் காவேரி, ‘விடுங்கடா… ஒருநாளைக்கு எத்தனைபேருடா…’ என்று முனகுவதும் கேட்க… அந்த அரச இலைக் காட்சியை, கமல் காட்சியாகவும் சாட்சியாகவும் வைத்தது, ஆணாதிக்க உலகத்தைச் சொல்லும் குறியீடாகத்தான் பார்க்கிறேன்!

மகள்களைப் பெற்ற அப்பன்கள் அனைவரும் சொல்லுவார்கள்… ‘மகாநதி’ வெறும் படமல்ல; வாழ்க்கைக்கான பாடம் என்று!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here