Home அரசியல் விஜய்க்கு எதிராக இளம் ஹீரோக்கள் அணி திரள்கிறார்களா? திமுக – பாஜகவின் பின்னணி அரசியல் என்ன?...

விஜய்க்கு எதிராக இளம் ஹீரோக்கள் அணி திரள்கிறார்களா? திமுக – பாஜகவின் பின்னணி அரசியல் என்ன? – Kumudam

0


ஒற்றை விஜய்யை வீழ்த்துவதற்காக மொத்த கோலிவுட் ஹீரோக்களும் களமிறங்குகிறார்கள் என வெடித்துள்ள விமர்சனம் தான் தமிழக அரசியலின் லேட்டஸ்ட் ஹாட் ட்ரெய்லர்!

கோலிவுட்டின் டயர் 2 ஹீரோக்களான தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் கடந்த சில நாட்களாக தங்கள் ரசிகர் சந்திப்பு நிகழ்வுகளை பிரமாண்டமாக நடத்தி வருகின்றனர். கூடவே நலத்திட்ட உதவிகள், மன்ற நிர்வாக சீரமைப்பு, அடுத்தகட்ட வியூகங்கள் என மளமளவென வேலைகள் பரபரக்கின்றன. 

இந்த ஹீரோக்களின் திடீர் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது ‘எதுக்கோ பெருசா பிளான் பண்றாங்க’ என்ற விமர்சனங்கள் வெளிப்படையாகவே தெறிக்கத் தொடங்கியுள்ளன. கூடவே. ‘இதன் பின்னணி என்ன? எனும் கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.

தமிழகத்தின் சினிமா மற்றும் அரசியல் நகர்வுகளை உற்றுநோக்கும் விமர்சகர்களிடம் இதுபற்றி பேசினோம். “சிம்பிள்! கட்சி ஆரம்பிச்சு இரண்டே வருஷத்துல முதல்வராகவே ஆகிவிட்ட விஜய்யின் எழுச்சி இவங்களை தூங்கவிடலை.

அதனால் தான் ஒவ்வொரு ஹீரோவும் தங்களின் பலத்தைக் காட்டவும் அதை அதிகப்படுத்தவும் இறங்கியிருக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 4ம் தேதியன்று, சென்னை முகலிவாக்கத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை அரசியல் கட்சி மாநாடு போலவே சிவகார்த்திகேயன் நடத்தியதை விஜய்யின் அரசியலுக்கு எதிர் அரசியலாகத்தான் தவெகவினர் பார்க்கிறார்கள்.

காரணம் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி ரிலீஸில் இருந்தே அவருக்கும். விஜய் தரப்புக்கும் இடையில் மோதல் துவங்கிவிட்டது. ‘ஜனநாயகன்’ ரிலீஸாகாமல் விஜய் தவித்தபோது, அப்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க. தரப்போடு சிவகார்த்திகேயன் காட்டிய நெருக்கமும், ‘பராசக்தியை ஒரு திருவிழா போல் திமுக கொண்டாடியதையும் த.வெ.க.வினர் மறக்கவில்லை.

இதனால்  சிவகார்த்திகேயனின் அடுத்த படமான ‘சேயோன்’ ரிலீஸாகும்போது கடுமையாக அவரை பழிதீர்க்க தவெகவினர் காத்திருக்கிறார்கள். பொறுத்துப் பார்த்து பொறுமையிழந்த சிவகார்த்திகேயனும், இப்போது நேரடியாகவே விஜய் தரப்புக்கு எதிரான வேலைகளை தொடங்கிவிட்டார். த.வெ.க.வுக்கு ஆகவே ஆகாத சீமானை தன் ‘சேயோன்’ படத்தில் நடிக்க வைத்திருப்பது.

ரசிகர் மன்ற சந்திப்பு நிகழ்வில் த.வெ.க.வின் லேட்டஸ்ட் எதிரியான விஜய் சேதுபதியையும் தன்னையும் குறிப்பிட்டு எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் ஃபீல்டுக்கு வந்து ஜெயித்தவர்கள் நாங்கள்’ என்று பேசியதெல்லாம் தவெகவை கொந்தளிக்க வைத்துள்ளது.

சிவகார்த்திகேயனைப் போல் விஜய் சேதுபதி மீதும் த.வெ.கவினர் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்வில் தலைவனுக்கான பண்புகள் பற்றி விஜய் சேதுபதி பேசிய வார்த்தைகள் விஜய்யைத்தான் குறிக்கின்றன என தவெகவினர் கொந்தளித்தனர். இந்த நிலையில்தான் விஜய் சேதுபதியும் முதல் மதிப்பெண் பெற்ற பிள்ளைகளுக்கு விருது வழங்குவது, ரத்த தான முகாம் என பொது வாழ்க்கைக்கு வந்துள்ளார். இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக ‘அகரம்’ அறக்கட்டளை மூலம் ஏராளமான நலத்திட்டப் பணிகளை செய்துவரும் சூர்யாவும் எதிர்காலத்தில் அரசியலில் கால் பதிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் இந்த ஹீரோக்களின் பின்னணியில் திமு.க இருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது. அதாவது, விஜய்க்கு வாக்களிக்கும் எல்லாருமே விஜய் ரசிகர்களோ த.வெ.க. அபிமானிகளோ கிடையாது. சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூர்யா ஆகியோரின் ரசிகர்களும் சினிமா 44 தனுஷ் மோகத்தால் ஓட்டு போட்டிருப்பார்கள். இந்த நிலையில் இந்த ஹீரோக்களே, அரசியலுக்கு வந்துவிட்டால் விஜய்யின் வாக்கு வங்கியில் பெரும் சரிவு ஏற்படும் என்பதே அறிவாலயக் கணக்கு  இவர்களில் சமீபத்தில் தனது மன்றத்தைப் பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கும் தனுஷுக்கு பின்னணியில் தாமரை இருப்பதாக சொல்லப்படுகிறது.

ரஜினியை அரசியலுக்கு கொண்டுவந்து, தமிழகத்தில் தங்கள் ஆதரவு ஆட்சியை அமைக்க முயன்று தோற்ற பா.ஜ.க. தனுஷை கையில் எடுத்துள்ளது என்பதாகவும் இதற்காகவே, கடந்த ஆகஸ்ட் மாதம் நாக்பூர்  புள்ளி ஒருவர் தனுஷை சந்தித்துப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. விஜய் மத்திய பாஜகவுடன் நட்புடன்தான் இப்போதுவரை இருக்கிறார். ஒருவேளை அவர் காங்கிரஸோடு கைகோத்துக்கொண்டு தாமரைக்கு எதிராக குடைச்சல் கொடுத்தால், தனுஷை வைத்து தவெகவின் வாக்கு வங்கிக்கு சேதாரம் ஏற்படுத்துவதே பாஜகவின் பிளான் என்கிறார்கள். 

இதையெல்லாம் புரிந்துகொண்டுதான் விஜய்யும் சமீபத்தில் அஜித்தை லண்டனுக்கே சென்று கட்டிப்பிடித்து கைக்குள் கொண்டு வந்துள்ளார். தளபதி தல காம்போ ஒன்றே போதும் இவர்களை சமாளித்துவிடலாம் என விஜய் தரப்பு நினைக்கிறது. இந்த ஸ்டார் வார்ஸில் பொறுத்திருந்து பார்க்கலாம்” என்று சொல்லி முடித்தார். யார் வெல்வார்கள் என்பதை முதல்வர் விஜய்க்கு எதிராக தி.மு.க.தான் இளம் ஹீரோக்களை களம் இறக்குகிறதா என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கேட்டபோது, ‘கலை, இலக்கியம் இரண்டையும் தி.மு.க.விடமிருந்து பிரிக்க முடியாது எங்கள் தலைவர்கள் கலைஞர், ஸ்டாலின், உதயநிதி மூவருமே கலையுலகோடு நெருக்கமானவர்கள். ஆனால் திமுக தனது அரசியல் எழுச்சிக்காக சினிமா முகங்களைப் பயன்படுத்துகிறது என்பது கற்பனை” என்றார்.

தவெக தரப்பில் அமைச்சர் விக்னேஷிடம் கேட்டபோது, “முதல்வர் விஜய் எல்லா ஹீரோக்களையும் தன் நண்பர்களாகவும் சகோதரர்களாகவும் மட்டுமே பார்க்கிறார். யாரோடும் மோதலோ, பகையோ இல்லை. திமுக ஒருவேளை அப்படி பிளான் போட்டால் அது நிச்சயம் தோல்வியைத்தான் தரும் என்றார்.

எப்படி இருந்த தமிழ்நாடு.

(எஸ்.ஷக்தி)



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version