back to top
13.4 C
London
Saturday, October 10, 2026
No menu items!
Homeசினிமா’ஆனந்த ராகம்’ தந்த சோக கீதம்...ஒரு ராகம் பாடலோடு..! - Kumudam

’ஆனந்த ராகம்’ தந்த சோக கீதம்…ஒரு ராகம் பாடலோடு..! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



படம் அவுட்டு… பாட்டு ஹிட்டு! – வி.ராம்ஜி

சில பாடல்கள், அதிலும் குறிப்பாக காதல் பாடல்கள், நமக்குள் ஒரு பேரமைதியைத் தந்துவிடும். அப்படி அமைதி தருகிற அதே பாடல், வார்த்தைக்குள் வசமாகாத சோகத்தையும் சொல்லிக்கொண்டே இருக்கும். நமக்குள் பாடலைக் கேட்கும்போது அமைதி குடிகொள்ளுகிற அதேவேளையில், ஏதோவொரு தாங்கமுடியாத துயரத்தையும் மனசு தூக்கிச் சுமக்கும். இப்படியான இரண்டுவிதமான வெவ்வேறு உணர்வுகளை ஒரேபாடலுக்குள், அதே வரிகளுக்குள் கடத்துகிற இசை… அதுவொரு கண்ணாமூச்சி போல!

நமக்கு இசையைக் கேட்கத்தான் தெரியும். முழுவதுமாக உணருவது என்பது இயலாத ஒன்றுதான்! ’ஆனந்த ராகம்’ என்று படத்துக்கு தலைப்பு வைக்காவிட்டாலும் கூட, ராஜாவின் இசையானது, நம்மை ஆனந்தக் கடலில் மூழ்கடித்துவிடும் என்பதுதான் நமக்குத் தெரியுமே..! அப்படியிருக்க… ‘ஆனந்தராகம்’ என்றே தலைப்பு வைத்தால், உண்மையான பக்தனைத் தேடி அந்த தெய்வமே ஓடிவரும் என்பதுபோல், இசைக்கடவுள், அந்தப் படத்து இசை ஆசி வழங்காதா என்ன?

சிவகுமார், ராதா, ரவிக்குமார் முதலானோரின் நடிப்பில் உருவான படம்தான் ‘ஆனந்தராகம்’. ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் ஓவியராக நடித்திருப்பார் பரணி. உண்மையிலேயே இவர் ஓவியர்தான். பெயரும் பரணிதான்! ‘ஆனந்தராகம்’ எனும் இசைக்காவியத்தை வண்ணமயமாகத் தீட்டிய இயக்குநர்தான் ஓவியர் பரணி.

 
காதல் கைகூடாத படங்கள் என்று பத்தாயிரம் படங்கள் வந்திருக்கின்றன. அந்தப் பல ஆயிரங்களில் இதுவும் ஒன்றுதான். ஆனால் பாடல்களால், இன்றைக்கும் கவனம் ஈர்த்துக்கொண்டிருக்கிறது ‘ஆனந்த ராகம்!’ ஆழமான காதல் உணர்வைக் காட்டி, அந்தக் காதல் நிறைவேறவில்லையெனும் போது, நமக்கு வலிக்கும். காதல் தோல்வி என்பதற்கு ஆகப்பொருத்தமான, வலுவான காரணம் இருந்தாலும் நம்மை கனக்கவைத்து, கண்ணீர் கசியச் செய்துவிடும்.

இவை எல்லாம் பெரிதாக எடுத்துவைக்காமலேயே, ‘ஆனந்தராகம்’ படத்தின் பாடல்கள், என்னை இப்போது கேட்டாலும் என்னவோ செய்யும். மனசைக் குடையும். முகம் வாடிப்போன ராதாவுக்காகவும் தளர்ந்து நடக்கும் சிவகுமாருக்காகவும் பிரார்த்தனைகள் ஓடும்.

 
ஓ ஓ ஓ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம்

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாடத் தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகமிது

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

பஞ்சு அருணாசலம் தயாரித்த ‘ஆனந்த ராகம்’படத்தின் அத்தனைப் பாடல்களும் ஆஹா ரகம்தான். அற்புதமான ராகங்கள்தான். கங்கை அமரன் எழுதிய ஈரமான பாடல்களில் இதுவும் ஒன்று! காதலைப் போற்றும் தேவதைகளின் குரல் போல், பெண் குரல்களின் ஹம்மிங், குழலின் இசை, மிருதங்கம் போன்றதொரு தாள ஒலி என ஆனந்தம் அள்ளித்தரும்!  

மாலை நேரக் காற்றில் மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே
மாலை சூடி நாளும் என்னை ஆளும் தெய்வம் நீயே
காதல் தேவி எங்கே தேடும் நெஞ்சம் அங்கே
தேரில் போகும் தேவதை நேரில் வந்த நேரமே
என்னுள்ளம் இன்று வானில் போகுதே

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

‘மாலை நேரக் காற்று, மகிழ்ந்து ஆடுகிற தென்னங்கீற்று, மாலை சூடி எனையாளும் தெய்வம், காதல் தேவி, தேரில்போகும் தேவதை, நேரில் வந்த நேரம், என்னுள்ளம் இன்று வானில் போகுதே… என்ற வரிகளைக் கேட்கும் போது, நாமும் தேரில் ஏறி, வானம் தொட்டு, சிட்டாகப் பறந்து, பூமியில் இறங்குவோம். பண்ணைப்புரத்து சகோதரர்களின் கண்கட்டு வித்தைகளில் இதெல்லாம் சகஜம்தான்!

ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்
வாழும் காலம் யாவும் துணையாக வேண்டும் என்றும்
காலம் தந்த பந்தம் காதல் என்னும் கீதம்
ஜீவ நாதம் கேட்குதே சேர்ந்து இன்பம் கூட்டுதே
வராத காலம் வந்து சேர்ந்ததே

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாடத் தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகமிது

இரண்டாவது நிரவல் இசையில் வயலினும் சிதாரும் இசைக்கும் ஒலியில், கைகூடாத காதலின் சோகத்தை நமக்கு உணர்த்திவிடுவார் இளையராஜா. இங்கு தபேலாவுக்கு பதில் ட்ரிபிள் வாங்கி பின்னணியில் மெதுவாக ஒலிக்கும். ‘ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்துவந்த சொந்தம்’ எனும் வரியைப் பாடும்போது ஜேசுதாஸின் குரலில் காதலையும் மீறிய கழிவிரக்கத்தை உணர முடியும். அதேபோல, கடைசி முறையாகப் பல்லவியைத் தொடங்கும்போது ஜானகி, ‘ஒரு’, ‘ராகம்’, ‘பாடலோடு’ என்று வார்த்தைகளுக்கு இடையே சற்று இடைவெளி விடுவார். அது காதலின் பிரிவு தரும் உணர்வின் துக்கப்பெருமுச்சு!

ஜேசுதாஸின் குரலும் ஜானகியின் குரலும் நம்மைக் கொஞ்சிக்கொஞ்சியே கொன்றுபோட்டுவிடும். அதிலும் ‘ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்’ என்று சொல்லும்போது, பின்னர் வருகிற காதல் பிரிவை நம்மாலேயே தாங்கிக் கொள்ளமுடியாது. ‘வாழும் காலம் யாவும் துணையாக வேண்டும் என்றும்…’ என்ற வரிகளைக் கேட்டு, காதல் தோல்வியில் கலங்கித் தவித்த, ராணி அக்கா இந்தப் பாடலைப் பாடி அழுதுகொண்டே இருந்தாள்.

‘என்னக்கா… என்னக்கா…’ என்று அக்காவிடம் கேட்டால் சொல்லமாட்டாள். அந்த அழுகைக்கான அர்த்தம் எனக்கும் தெரியும். ஆனால் ‘லவ் பெயிலியர்தானே…’ என்று கேட்கவில்லை. கேட்டால், இன்னும் அழுவாள். நாலு வீடு தள்ளி இருக்கிற அந்த அக்கா வலியின் காரணம் சொன்னால், அப்போது நானும் அழுதுவிடுவேன் எனும் பயம் எனக்குள்! ஆனால், ‘காலம் தந்த பந்தம் காதல் என்னும் கீதம் ஜீவநாதம் கேட்குதே சேர்ந்து இன்பம் கூட்டுதே.

வராத காலம் வந்து சேர்ந்ததே…’ என்ற வரிகளை இப்போது கேட்டாலும் பாடினாலும் அந்த ராணி அக்காதான் நினைவுக்கு வருவாள். கன்னம் வழியே வழிந்த அவள் கண்ணீரைத் துடைத்ததுதான் என்னை இம்சை பண்ணும். அந்தக் கண்ணீரும் உப்புப்பிசுப்பிசுப்பும், என் விரல்களின் ரேகைக்குள் அப்படியே பதிந்துவிட்டது… இளையராஜாவின் இந்தப் பாடலைப் போலவே!

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ…. என்ற கங்கை அமரன் பாடலை, இளையராஜாவின் ராக சஞ்சாரங்களை, ஜேசுதாஸ், ஜானகியம்மாவின் குரலைக் கேளுங்கள். உங்கள் மனமும் ஊசலாடும்; ஊஞ்சலாடும்!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here