Home அரசியல் இடைத்தேர்தல் முடிவுகள்: பெரும் கூட்டணி இல்லை.. தோல்வியிலும் கெத்து காட்டிய திமுக! – Kumudam

இடைத்தேர்தல் முடிவுகள்: பெரும் கூட்டணி இல்லை.. தோல்வியிலும் கெத்து காட்டிய திமுக! – Kumudam

0


நடைபெற்று முடிந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஆளும் தவெக வெற்றி பெற்றபோதிலும், இரு தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகளின் தயவின்றி தனித்து களம் கண்ட திமுக இரண்டாம் இடம் பிடித்துத் தனது சொந்த வாக்கு பலத்தை நிரூபித்துள்ளது.

தாராபுரம் தொகுதியில் ஆரம்பம் முதலே வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு திருப்பங்கள் நிலவின. 23 சுற்றுகளின் முடிவில் தவெக வேட்பாளர் சத்யபாமா 66,841 வாக்குகள் பெற்று 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதேவேளையில், கடந்த தேர்தலில் இத்தொகுதியில் வெற்றி பெற்றிருந்த அதிமுகவை (45,280 வாக்குகள்) பின்னுக்குத் தள்ளி, திமுக வேட்பாளர் சுகன்யா 57,370 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். நாம் தமிழர் கட்சி 5,268 வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1,157 வாக்குகளையும் பெற்றன.

27 சுற்றுகள் நடைபெற்ற மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகள் பெற்று 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இத்தொகுதியிலும் திமுக வேட்பாளர் பரந்தாமன் 54,008 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைக் கைப்பற்றினார்.

அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 47,450 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார். நாம் தமிழர் கட்சி 2,709 வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1,986 வாக்குகளையும் பெற்றன.

கடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு களமிறங்கியும் மதுராந்தகத்தில் மூன்றாம் இடமே கிடைத்திருந்தது. ஆனால், இம்முறை அந்த கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் தவெக பக்கம் சென்ற நிலையிலும், திமுக தனித்து நின்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

கூட்டணி பலம் இல்லாவிட்டால் திமுகவால் சொற்ப இடங்களைக்கூட வெல்ல முடியாது என்ற விமர்சனங்கள் நிலவிய சூழலில், ஆளுங்கட்சியின் தீவிரப் பிரசாரத்தையும் மீறி இரு தொகுதிகளிலும் அதிமுகவை விட கூடுதல் வாக்குகள் பெற்றுத் தனது தனிப்பட்ட பலத்தை திமுக நிலைநாட்டியுள்ளது.

கடந்த பொதுத்தேர்தலுடன் ஒப்பிடுகையில், மதுராந்தகத்தில் திமுகவின் வாக்கு எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும், அதன் வாக்கு சதவீதம் 1% உயர்ந்துள்ளது. தாராபுரத்திலும் வாக்கு எண்ணிக்கையில் சிறிய சரிவு இருந்தாலும், வாக்கு சதவீதத்தில் 0.5% மட்டுமே மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கூட்டணிக் கட்சிகள் எதுவும் இல்லாத சூழலிலும் தனது அடிப்படை வாக்கு வங்கியைத் தக்கவைத்துத் தனித்துச் நிற்பது திமுக முகாமிற்குப் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version