தமிழ் சினிமாவில் இசை என்றாலே பலரது நினைவுக்கும் வருபவர் இளையராஜா. சாதாரண கிராமப்புறப் பின்னணியில் இருந்து வந்து, தனது இசைத் திறமையாலும் கடின உழைப்பாலும் இந்திய அளவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். பல தலைமுறைகளைக் கடந்து இன்றளவும் அவரது இசை ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
எத்தனையோ புதிய இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வந்தாலும், இளையராஜாவின் இசைக்கு இருக்கும் தனித்துவமான வரவேற்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக 90-களில் வளர்ந்த தலைமுறையினர் மட்டுமின்றி, தற்போதைய இளம் தலைமுறையினரிடமும் அவரது பாடல்களுக்கு தனி வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் பங்கேற்றார். விழாவில் இளநிலைப் பிரிவில் 386 பேருக்கும், முதுநிலைப் பிரிவில் 46 பேருக்கும் என மொத்தம் 432 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
அப்போது மாணவர்களிடம் உரையாற்றிய அவர், சமீபத்தில் வெளியான ‘டோரதி’ திரைப்படம் குறித்தும், அதன் கதை மற்றும் இசை ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் குறிப்பிட்டார். தொடர்ந்து, மாணவர்களிடம் சிறிது டோரதி படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான ”முத்துமணி” பாடலை ஒலிக்கச் செய்து, “இந்த இசையை கண்களை மூடி கேளுங்கள்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் இப்போது ஏன் சம்பந்தமில்லாமல் இளையராஜாவைப் பற்றி பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். நான் உங்களிடம் கடின உழைப்பும், விடாமுயற்சியும் வேண்டும் என்று கூறினேன் அல்லவா? அதற்கு மிகச் சிறந்த உதாரணம் இளையராஜாதான்” என்று குறிப்பிட்டார்.
மேலும், இளையராஜாவின் புதிய இசைப் பணிகளை முன்வைத்து, வயது என்பது படைப்பாற்றலுக்கும் உழைப்புக்கும் தடையல்ல என்பதை எடுத்துரைத்தார். தொடர்ந்து இசையில் ஈடுபட்டு வருவதையும், புதிய முயற்சிகளை மேற்கொள்வதையும் சுட்டிக்காட்டிய அவர், கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சிக்கு இளையராஜாவின் பயணம் சிறந்த உதாரணம் என்றார்.
ஒருவர் தனது தொழில் மீது காதல், பொறுமை மற்றும் தொடர்ச்சியான கற்றல் ஆகியவற்றைக் கொண்டிருந்தால், வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணிக்க முடியும் என்றும் ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.
அதேபோல், இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் மற்றும் மின்னணு சாதனங்களில் மக்கள் தங்களது நேரத்தையும் கவனத்தையும் அதிகம் செலவழித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இளையராஜாவின் இசையும் பாடல் வரிகளும் வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களை நினைவூட்டுவதாக தெரிவித்தார்.
94 வயதிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளரின் உதாரணத்தையும் அவர் குறிப்பிட்டார். ஒருவர் தனக்குப் பிடித்த பணியை ஆர்வத்துடன் செய்யத் தொடங்கிவிட்டால், நேரமின்மை என்பது ஒரு பிரச்சினையாக இருக்காது என்றும் கூறினார்.
“நாம் செய்யும் தொழில் மீது காதல் கொண்டால், எந்தத் தடைக்கல்லையும் தாண்டிச் செல்ல முடியும்” என்பதே தனது பேச்சின் முக்கியமான செய்தி என்று நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் வலியுறுத்தினார்.
இளையராஜாவின் இசைப் பயணத்தை மாணவர்களின் வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக எடுத்துக்கூறிய நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
