இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் இன்று (அக்.6) டெல்லியில் பேரணி நடத்தினர். தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி சென்ற பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியதால், எதிர்க்கட்சித் தலைவர்கள் சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தின் மகர் துவார் பகுதியில் திரண்டனர். அங்கிருந்து தேர்தல் ஆணையத்தின் தலைமையகமான நிர்வாசன் சதனை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
இந்தப் பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
பேரணி தேர்தல் ஆணைய அலுவலகத்தை நெருங்கிய நிலையில், போலீசார் தடுப்புகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து டெல்லி நிதி ஆயோக் அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் மீது கைது செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததற்கு SIR (Special Intensive Revision) நடவடிக்கையும் ஒரு காரணம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். SIR காரணமாகவே தமிழ்நாட்டில் மும்முனைப் போட்டி உருவானதாகவும், இதன் தாக்கம் தேர்தல் முடிவுகளில் இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற திருமாவளவன், செய்தி ஊடகத்தில் பேட்டியளித்த போது, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்திய அவர், SIR தொடர்பாகவும் தனது கருத்துகளைத் தெரிவித்தாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் SIR நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்திருந்தால், தேர்தல் களம் இருமுனைப் போட்டியாகவே இருந்திருக்கும் என்றும், SIR காரணமாக மும்முனைப் போட்டி உருவானதாகவும் திருமாவளவன் கூறியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் காரணமாகவே தவெக வெற்றி பெற்றதாகத் தான் ஏற்கனவே கூறியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
SIR குறித்து திருமாவளவன் கூறியது என்ன?
SIR நடைமுறை ஏற்கனவே கடந்த காலங்களில் இருந்துள்ளதாக குறிப்பிட்ட திருமாவளவன், கடந்த சில பத்தாண்டுகளாக அது நடைமுறையில் இல்லை என்றும் தெரிவித்தார். தற்போது SIR என்ற பெயரில் பாஜகவுக்கு எதிரான வாக்கு வங்கிகளை மதம் மற்றும் சாதி அடிப்படையில் அடையாளம் கண்டு, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதாக அவர் குற்றம்சாட்டினார்.
சிறுபான்மை மற்றும் தலித் மக்களின் வாக்குகள் நீக்கப்பட்டதாகவும், பாஜக வெற்றி பெற முடியாத பகுதிகளில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதன் மூலம் அக்கட்சிக்கு சாதகமான சூழல் உருவாக்கப்பட்டதாகவும் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
மேலும், இதன் மூலம் பல மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வந்ததாகவும், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் தோற்கடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
‘தமிழ்நாட்டிலும் அதே நிலை இருக்கலாம்’
தமிழ்நாட்டில் ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்ட பகுதிகளில் தான் தவெக வெற்றி பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், இந்தக் கருத்தை ஜனநாயக சக்திகள் பலரும் தொடர்ந்து முன்வைத்து வருவதாகக் கூறினார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே விசிக சார்பிலும் இதுகுறித்து பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
“SIR மும்முனைப் போட்டியை உருவாக்கியிருக்கிறது. இல்லையென்றால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இருமுனைப் போட்டியாகத்தான் இருந்திருக்கும். மும்முனைப் போட்டியை உருவாக்குவதற்கு SIR பயன்படுத்தியிருக்கிறது. அதனால்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன.”
என திருமாவளவன் கூறியுள்ளன.
SIR காரணமாகத்தான் தவெக வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கிறதா என்ற கேள்விக்கு, பல மாநிலங்களில் இதுபோன்ற நிலை இருப்பதாகவும், தமிழ்நாட்டிலும் அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தேர்தல் முடிவுகள் வெளியான காலத்திலேயே தான் தெரிவித்ததாகவும் திருமாவளவன் கூறியுள்ளன.
இதனிடையே, SIR நடவடிக்கை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், திருமாவளவனின் இந்தக் கருத்து தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
மேலும் தவெகவுடன் கூட்டணியில் இருக்கும் விசிக தற்போது திருமாவளவன் கூறியுள்ள இந்த கருத்துக்கள் தவெக வட்டாரங்களில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அது மட்டுமில்லாமல் தவெக ஒரு பக்கம் ஆதரவாகவும்,தற்போது இந்த கருத்துக்களும் என திருமாவின் இரட்டை மனப்பான்மை வெளிக்காட்டுகிறது.
அது மட்டுமில்லாமல் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைந்துள்ள நிலையில், இந்த வெற்றி குறித்து பல கேள்விகளும், எஸ்ஐஆர் மூலம் வெற்றி பெற்றாரா என்பது பல கேள்விகள் எழுகின்றன.
