‘இடைத்தேர்தலில் பா.ம.க. யாருக்கும் ஆதரவளிக்காது. அ.தி.மு.க.வின் எல்லா நடவடிக்கைகளுக்கும் பா.ம.க. துணை நிற்காது’ என்பது போன்ற செய்திகளும், ‘இடைத்தேர்தலுக்குப் பிறகு ஆளும் தரப்பிடம் பா.ம.க. ஐக்கியமாகிவிடும்’ என்கிற கிசுகிசுக்களும் வட்டமடிக்கும் நிலையில், செஞ்சி தொகுதி பா.ம.கட்சி எம்.எல்.ஏ. முனைவர் அ.கணேஷ்குமாரை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.
இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடாதது ஏன்?
“பாமக ஒரு தனிக்கட்சி. அதற்கென தனிக்கொள்கை இருக்கிறது. கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் ஏற்படும் ஒப்பந்தம் மட்டுமே 2001, 2004, 2006, 2009 எனப் பல தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டிருக்கிறோம். ஆனால், பா.ம.க. மட்டுமே கூட்டணி மாறுவதாக விமர்சிக்கிறார்கள்.
மந்திரி சபையில் இடம் பெறுவதற்காக தி.மு.க.வும் கூட்டணி மாறியிருக்கிறது. இந்த இடைத்தேர்தல் மக்களால் விரும்பப்படாத தேர்தல். எனவே, பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்’ என எங்கள் தலைவர் அன்புமணி கோரிக்கை வைத்தார். அதை ஏற்காததால் தேர்தலைப் புறக்கணிக்கிறோம். இந்தத் தேர்தல் முடிவால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை.”
யாருக்கும் ஆதரவு இல்லை’ என்கிற முடிவு, அ.தி.மு.க.வுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையா?
2024 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணியில் இல்லை. நாங்கள் தனியாகத்தான் இருந்தோம். முன்னதாக 2019ல் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தோம். மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற்றிருந்தாலும் அதிமுக ஆட்சி அமைக்கவும், ‘மினி சட்டமன்றத் தேர்தல்’ என சொல்லப்படும் 18 தொகுதிகளுக்கான அந்தத் இடைத்தேர்தலில் வெற்றிபெறவும் பாமகவே காரணமாக இருந்தது.
அதேபோல, கடந்த தேர்தல் முடிவுகளைப் பற்றி பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் 36 தொகுதிகளில் பாமக போட்ட பிச்சையால்தான் வெற்றி கிடைத்தது என்றார். அதற்கு எங்கள் தலைவர் அன்புமணியும் பதிலளித்தார். இரு கட்சிகளும் இணைந்துதான் வெற்றிபெற்றன. அதிமுகவின் எல்லா நடவடிக்கைகளுக்கும் பாமக துணை நிற்காது. அது கூட்டணி தர்மமும் அல்ல.”
யாருக்கும் ஆதரவு இல்லை என்பது த.வெ.க.வுக்கு மறைமுக ஆதரவளிப்பதுபோலத் தெரிகிறதே?
“அப்படியில்லை. தங்கள்மீது திணிக்கப்பட்ட தேர்தலாகவே மக்கள் இதை பார்க்கிறார்கள். நாங்கள் யாருடனும் கூட்டணியில் இல்லை. உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து முடிவெடுப்போம்.”
தேர்தல் புறக்கணிப்பு என்பது டாக்டர் ராமதாஸ் முடிவா, அன்புமணி முடிவா?
‘இது டாக்டர் ராமதாஸுடன் கலந்து பேசி எடுக்கப்பட்ட முடிவு. முன்னணி நிர்வாகிகளிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன. அ.தி.மு.க.வுக்கும் த.வெ.க.வுக்கும் ஆதரவளிக்க வேண்டும்’ என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. எல்லாவற்றையும் கேட்ட பிறகுதான் இறுதி முடிவு எடுக்கப்பட்டது. எங்கள்மீது பூசப்பட்டிருந்த சாயத்திலிருந்து செயல்பாடுகள் மூலம் இப்போதுதான் வெளியே வந்திருக்கிறோம் மக்களை நோக்கிய எங்களது பயணம் தொடங்கியிருக்கிறது.”
பா.ம.க.வின் இளைஞர் வாக்குகளை த.வெ.க. கைப்பற்றிவிட்டதா?
இளைஞர் வாக்குகளைத் த.வெ.க. பெற்றிருப்பது உண்மைதான். அதனால்தான் அவர்களால் ஆட்சி அமைக்க முடிந்திருக்கிறது. ஆனா பா.ம.க.வின் வாக்கு வங்கி சரிந்துவிட்டதா என்றால் இல்லை. அது நிலையாகத்தான் இருக்கிறது. கொஞ்சம் வளர்ச்சி குறைந்திருக்கிறது. இல்லையென்றால் இன்னும் நான்கு தொகுதிகளை வென்றிருப்போம். அதை சரிசெய்வோம்.
பா.ம.க.வின் உண்மையான தலைமைச் செயலகம் தைலாபுரமா, பனையூரா?
எங்களுக்கு ஒரே தலைமைச் செயலகம் தைலாபுரம் தோட்டம்தான். நிர்வாக வசதிக்காக பனையூர் அலுவலகம் செயல்படுகிறது. அமைச்சர்களின் முகாம் அலுவலகம்போல அதை எடுத்துக்கொள்ளலாம்.”
ராமதாஸ் அரசியலிலிருந்து விலகப்போவதாக அறிவித்தது கட்சிக்குப் பின்னடைவா?
அவரது ஆலோசனை இல்லாமல் அன்புமணி செயல்படமாட்டார். ஓய்வுக்காக அப்படிச் சொல்லியிருக்கலாம். கருத்து வேறுபாடுகள் இருந்தன. காலம் அவற்றைச் சரிசெய்துவிட்டது.
ஆந்திராவில் பா.ம.க.வை வளர்க்க உங்களை மாநில ஒருங்கிணைப்பாளராக நியமித்திருக் கிறார்களே, அங்கு வெற்றிபெற வாய்ப்புள்ளதா?
சித்திரை இளைஞர் பெருவிழாவுக்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்றபோது அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக சித்தூர் மாவட்டத்தில் பா.ம.க.வுக்கு நல்ல ஆதரவு இருக்கிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவே, அன்புமணியை நேரில் அழைத்து, ‘இங்கே உங்களுக்கும் ஆதரவு இருக்கிறது’ என தெரிவித்தார். அதோடு குப்பம் தொகுதியில் பிரசாரம் செய்யவும் வாய்ப்பு கொடுத்தார். இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த ஆதரவு மட்டுமல்ல. அங்கு எதிர்த்துப் போட்டியிட்டவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். இது ஆரம்பப் புள்ளி.
விடுதி மாணவர்களுக்கு மாட்டிறைச்சி வழங்குவது குறித்து பா.ம.க.வின் நிலைப்பாடு என்ன?
இதுகுறித்து தலைவர் அன்புமணிதான் முடிவெடுப்பார். தனிப்பட்ட முறையில் இதை தேவையற்றதாக கருதுகிறேன். ஒவ்வொருவருக்கும் அவரவர் இறைநம்பிக்கை இருக்கிறது. அனைத்து மதத்தினருக்கும் வாழ்த்துச் சொல்லும் கட்சி பாமக பெரியாரின் சமூகநீதியை மதிக்கிறோம். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தையும் இடஒதுக்கீட்டையும் வரவேற்கிறோம்.
சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கோரிக்கைக்கு த.வெ.க. அரசு செவிசாய்க்கும் என நம்புகிறீர்களா?
அதிமுக, திமு.க அரசுகளைத் தொடர்ந்து தவெக அரசிடமும் மனு கொடுத்திருக்கிறோம். எங்கள் வேலையைத் தொடர்ந்து செய்கிறோம். மக்கள் புரிந்துகொண்டு அதிகாரம் கொடுத்தால் அதை நிறைவேற்றுவோம். அதுவரை போராட்டம் தொடரும். இஸ்லாமியர்கள். அருந்ததியர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான இடஒதுக்கீடுகள் பா.ம.க. போராட்டங்கள் மூலமாகத்தான் கிடைத்தன.
இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதில் காலதாமதம் ஏன்?
‘அதற்கான சூழல் அமையவில்லை. ஆனாலும், தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறோம். அவற்றை விளம்பரப்படுத்தவில்லை. எங்களது செயல்பாடுகள் மீது சாயம் பூசப்பட்டிருக்கிறது. இப்போது சட்டமன்றத்தில் சௌமியா அன்புமணி பேசுவது மக்களிடம் போய்ச் சேர்வது சிலருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்துகிறது. எங்களுக்கு அது மகிழ்ச்சிதான்.”
(அ.ராமச்சந்திரன்)
