back to top
21.3 C
London
Sunday, October 4, 2026
No menu items!
Homeசினிமாஅண்ணனும் தம்பியும் கொடுத்த MASS HIT SONG....ஆத்துமேட்டுல ஒரு பாட்டு கேக்குது! - Kumudam

அண்ணனும் தம்பியும் கொடுத்த MASS HIT SONG….ஆத்துமேட்டுல ஒரு பாட்டு கேக்குது! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


படம் அவுட்… பாட்டு ஹிட்டு! – வி.ராம்ஜி

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற வார்த்தையைச் சொல்லாதவர்களே இருக்கமுடியாது. இதை தனக்காவோ அல்லது பிறருக்காகவோ சொல்லியிருப்போம். இப்படியான அர்த்தத்தை உணரவைக்கும் வகையில், சினிமாப் படங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். படம் வெளியாகும்போது, ‘என்னய்யா, ஒன்னுமே புரியலை. இப்படி எடுத்து வச்சிருக்கானுங்க’ என்று சொல்லி நிராகரித்துவிடுவோம்.

பிறகு ஐந்தாறு வருடம் கழித்து, படம் குறித்த புரிதல் நமக்கு வந்திருக்கும். ஒவ்வொரு ஐந்து வருடத்துக்கு ஒருமுறை ரீல்களை, பிலிம்களை புதுக்காப்பி எடுத்து, புத்தம்புதிய காப்பி என்று வெளியிடுவது போல், அந்தப் படத்தை அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டாடிக்கொண்டே இருப்போம். ‘அவள் அப்படித்தான்’ படமும் அப்படித்தான்! ‘நல்லா எடுத்திருக்கான்யா படத்தை…’ என்று தலையிலடித்துக் கொண்டார்கள். பிறகு இன்றுவரைக்கும் தலையில் வைத்துக் கொண்டாடிக்கொண்டே இருக்கிறார்கள். இயக்குநர் ருத்ரய்யா, எடுத்த படங்கள் கடுகளவுதான்! ஆனால் காரம் குறையாமல் அவரின் பெயர் இன்றைக்கும் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

‘அவள் அப்படித்தான்’ பற்றியும் அந்தப் பாடல்கள் குறித்தும் அப்புறம் பார்க்கலாம். நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதலில் கால் வைத்தார். இரண்டாவதாக கால் வைத்தவர் யார் என்று புத்திசாலித்தனமாகக் கேட்பார்கள்தானே..! அதேபோல், ‘அவள் அப்படித்தான்’ எனும் கலைப்படைப்பைக் கொண்டாடவில்லையே… என வருந்திக் கொண்டிருந்தவருக்கு, அடுத்த படம் இயக்கும் வாய்ப்பாக அமைந்ததுதான் ‘கிராமத்து அத்தியாயம்!’

இயக்குநர் ருத்ரய்யா மீது அவருக்கு நம்பிக்கை இருந்ததோ இல்லையோ… கமல்ஹாசனுக்கும் இளையராஜாவுக்கும் அதீத நம்பிக்கை இருந்தது. ‘அவள் அப்படித்தான்’ படத்துக்கு நடிகர்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் குறைந்த சம்பளத்திலும் சம்பளம் வாங்காமலும் பிஆர்ஓ போல் செயல்பட்ட கமல், அடுத்த படமான ‘கிராமத்து அத்தியாயம்’ படத்துக்கும் அவருக்கு பல வகைகளில் உதவினார். இளையராஜாவும் கைகொடுத்தார். பல்துறை வித்தகரான பஞ்சு அருணாசலத்திடம் படத்துக்கு பைனான்ஸ் செய்யச் சொல்லி கமல் கேட்க,அவரும் சம்மதித்தார்.

கமலின் குடும்பத்தில் அண்ணன் சாருஹாசன் நடித்தார். அவரின் மகள் சுஹாசினி நடிப்பில் முத்திரை பதித்தார். அதேசமயம் கமல்ஹாசனின் இன்னொரு அண்ணன் சந்திரஹாசனும் சில படங்களில் நடித்தார். அவர் கதையின் நாயகனாக நடித்த படம்தான் ‘கிராமத்து அத்தியாயம்!’

நந்தகுமார், கிருஷ்ணகுமாரி என நடித்திருந்த இந்தப்படம், தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் எந்த அத்தியாயத்திலும் இடம்பெறவில்லை. காரணம்… படம் அப்படி! ஆனால் படத்தின் ஒவ்வொரு பாடலும் தனித்தனி அத்தியாயங்களாக, சரித்திரத்தில் இடம்பிடித்து இன்றைக்கும் சாட்சியாக இருக்கின்றன. இயக்குநர், பாடகர் என பல துறைகளிலும் பட்டையைக் கிளப்பிய கங்கை அமரன் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருந்தார்.

படத்தில் உள்ள மற்ற பாடல்களை மற்றுமொரு சந்தர்ப்பத்தில், தனித்தனி அத்தியாயாகவே எழுதுகிறேன். இப்போது ‘கிராமத்து அத்தியாயம்’ படத்தின் ‘ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது!’ அந்தப் பாட்டை நாமும் கொஞ்சம் கேட்போமா?
 
இளையராஜாவின் இசையில் கங்கை அமரன் வரிகளில், மலேசியா வாசுதேவனும் எஸ் ஜானகியும் இணைந்து நம்மை ஆத்தங்கரைக்கு அழைத்துப் போனார்கள். ஜானகியம்மாவின் ஹம்மிங்… ல ல ல லா லா லா… ல ல லா லா லா.. லாலாலல்லா லாலலா லால லால.. என்று ஆற்று மேட்டில் பட்டு, வயல்வெளிக்குள் இறங்கி, மலையில் இடித்து அசரீரி போல், நம் செவிகளை நிரப்பும். தேனருவியென உயிரைத் தொடும்!

ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது
ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது

ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது
ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது
என்று மலேசியா வாசுதேவனும் ஜானகியும் கொஞ்சும் குரலில், நம்மைக் கெஞ்சச் செய்வார்கள். ‘மேட்டுல பாட்டு’, ‘காத்துல கீத்துல தாளம் போட்டு’ என்று உவமைகளுக்கு ஆத்தங்கரையோர விஷயங்களை லாகவமாகக் கையாண்டிருப்பார் கங்கை அமரன்.

காட்டுல கட்டில் ஒன்னு போடவா
கையிலே கட்டிக் கொண்டு ஆடவா என்று கேட்பார் நாயகன் நந்தகுமார். உடனே நாயகி…

ஹே ஹே என்ன ஆசை ஏக்கம் வந்து பேச
கண்ணுக்குள்ள மோகம் தோணுது
கன்னி பொண்ண காணும்போது

ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது
ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது என்று காதலர்கள், தனிமையில் இருக்கும் அந்தச் சூழலின் அந்தரங்கம் கிளறுகிற ஆசைகளை, சிதறுகாய் போல் தெறிக்கவிட்டிருப்பார் கங்கை அமரன். வழக்கம்போல் குழலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, வயலினையும் ஆங்காங்கே இழைத்து இழைத்து காதல் பேசும் இசையைத் தந்திருப்பார் இளையராஜா.  

கேக்கவா ஒன்னே ஒன்னு கேக்கவா
சேக்கவா கையில் உன்ன சேக்கவா
என்று மலேசியா அச்சாரம் போடுவார் கூடலுக்கு!
உடனே ஜானகியம்மா,

ஊ ஹும் மாட்டேன் மாட்டேன்
ஏதும் பேச மாட்டேன்

என்று ‘ஊஹூம்’ சொல்லும்போது, இன்றைய ‘ஹூம் சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா’ பாடலுக்கு முப்பாட்டப்பாட்டு என்பதை புரிந்து உணர்ந்து இன்னும் கிறங்கலாம்!

சொல்ல சொல்ல வேகம் ஏறுது
தூக்கிகிட்டு போகப் போறேன்

ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது
ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது

படம் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல், சின்ன அத்தியாயமாகவே முடிந்துவிட்டது. ஆனால் சின்ன அத்தியாயத்துக்கு, ஒரு போஸ்ட் கார்டில் எல்லாம் எழுதிமுடித்துவிட்டு, ஓரத்தில் கொஞ்சம் நுணுக்கி நுணுக்கி முக்கியமான தகவல்களை நம் தாத்தாக்களும் அப்பாக்களும் எழுதியது போல், இளையராஜா சினிமா வரலாற்றில் கொஞ்சம் இடம் ஒதுக்கினார். கங்கை அமரன் தன் வார்த்தைகளை இட்டு நிரப்பினார். மலேசியா வாசுதேவனும் ஜானகியம்மாவும் குரலாகவே எதிரொலித்தார்கள்.

எங்கள் ஊரின் பொங்கல் திருவிழா, கபடிப் போட்டி முதலான விழாக்களில், இந்தப் பாடல் நிச்சயம் ஒலிபரப்புவார்கள். பாடலின் வரிகளை மட்டுமில்லாமல், இசையையும் வாயால் பாடி, பரவசம் அடைந்த அந்த அரை நிஜார் பாக்கெட்டின் சேமிப்புகள், என் செல்போனில், அடிக்கடி கேட்பதற்கு வசதியாக பதிவிறக்கம் செய்யப்பட்டு, என் மனதில் ஏறிக்கொண்டே இருக்கிறது. ‘ஆத்துக்கும் போனதில்ல, மேட்டுலயும் நின்னது இல்ல…’ என்று அங்கலாய்க்கிற ஜென் ஸீ இளைஞர்களும் யுவதிகளும், ‘ஆத்து மேட்டுல’ பாடலைக் கேளுங்கள். இந்தப் பாட்டுக்குள் நுழைந்து, முணுமுணுத்துக் கொண்டே இருப்பீர்கள்!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here