back to top
16.7 C
London
Thursday, October 1, 2026
No menu items!
Homeசினிமா‘வான் நிலா நிலா அல்ல’... தமிழ் சினிமாவின் மறக்க முடியாத பாடல் கதை! - Kumudam

‘வான் நிலா நிலா அல்ல’… தமிழ் சினிமாவின் மறக்க முடியாத பாடல் கதை! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


படம் அவுட்டு… பாட்டு ஹிட்டு! – வி.ராம்ஜி

’பொங்கல், வடை’ என்று ஆர்டர் சொல்லிவிட்டு, அவை வந்ததும் தேங்காய்ச்சட்னியுடன் கொஞ்சம், சாம்பாருடன் கொஞ்சம், இரண்டையும் சேர்த்துக் கொஞ்சம் என்று சாப்பிட்டுவிட்டு, கையலம்பி, பில் கொடுக்கிற நேரம் கூட, பாடலை எழுதுவதற்கு கவியரசருக்கு நேரமோ அவகாசமோ தேவைப்படாது என்று அவருடன் பயணித்தவர்கள் சொன்ன விஷயங்களும் சொல்லப்படாத உண்மைகளும் ஏராளம்.

அந்தப் பாடலைப் படித்து, உள்வாங்கி, ‘அற்புதம்யா… கவிஞர்னா கவிஞர்தான்’ நாம் சொல்லும்போது, அடுத்த படம், அடுத்த கதை, அடுத்த மெட்டு என சிட்டாக பறந்து ஆர்மோனியத்தின் அருகே தயாராகியிருப்பார். அவர்தான் கவியரசர் கண்ணதாசன். ஆனால், ‘எல்லாருக்கும் ரொம்ப ஈஸியா பாட்டு எழுதிருவேன்.

இந்த பாலசந்தருக்கு எழுதுறதுதான்யா கஷ்டம். புதுசுபுதுசா கேப்பாரு, கதையை அதுக்குள்ளே சொல்லணும்னு துடிப்பாரு. என்னை ரொம்ப ‘டிரில்’ வாங்கிடுறாரு பாலசந்தர்’ என்று கவியரசரே சொல்லியிருக்கிறார். 

கதையில் புதுமை, திரைக்கதையில் புதுமை, வசனத்தில் புதுமை,காட்சிகளில் புதுமை, நடிப்பில் புதுமை, ஒளிப்பதிவில் புதுமை, இசையிலும் பாடல்களிலும் புதுமை என்று கே.பாலசந்தர், புதுசுபுதுசாகச் சிந்தித்துக்கொண்டே இருப்பார். பாலசந்தர் குறித்து கவியரசரின் விமர்சனம் போலத்தான் மெல்லிசை மன்னருக்கும்! பாலசந்தர் எனும் சரித்திர நாயகனின் திரைப்படப் பக்கங்களில் புரட்டினால், அவற்றில் இடம்பெற்ற பாடல்களே இதற்கெல்லாம் சாட்சியாக இருக்கும். அப்படியொரு சவாலான பாடல் வேண்டும் என்று மெல்லிசை மன்னரிடம் பாலசந்தர் கேட்டார். நீண்ட நேரத்துக்குப் பிறகு அப்படியொரு மெட்டு தயாரானது. கவியரசு வந்தார். ‘விசு, பாடுறா’ என்றார் கண்ணதாசன். பாடிக்காட்டினார்.

‘என்னடா மெட்டு இது. சந்தம் ரொம்பக் கஷ்டம்டா. பாலு சொன்னானா?’ என்று பாலசந்தரைச் செல்லமாக முறைத்தார். ‘சந்தம் சொல்லுடான்ன்னா, லாலாலாங்கறான். லாலா கடை மிட்டாய் ஞாபகம் வந்திருச்சு இவனுக்கு’ என்று கிண்டலடித்த கண்ணதாசன், நான் முன்பே சொன்ன, பொங்கல், வடை சாப்பிடுகிற நேரத்துக்குள் பாட்டெழுதிக் கொடுத்தார். கஷ்டமான அந்த சந்தங்களுக்கு, மீட்டர்களுக்கு கட்டுப்பட்டு கண்ணதாசனின் ஜிலுஜிலு பட்டுச்சட்டை போல ஜொலித்து ஈர்த்தன வரிகள். படித்துவிட்டு, மெல்லிசை மன்னர் கண்ணதாசனிடம், ‘கவிஞரே… இதையெல்லாம் விட்டுட்டீரே… அதையும் சேர்க்கவேண்டியதுதானே?’ என்றார் குறும்புச் சிரிப்புடன்! 

‘என்ன…’ என்பது போல், கவிஞர், உதவியாளர், பாலசந்தர் என அனைவரும் பதறியபடி மெல்லிசை மன்னரைப் பார்த்தார்கள். ‘ஃபாதர் இன் லா, சன் இன் லா, மதர் இன் லா’வையெல்லாம் சேர்க்கலையா?’ என்று கிண்டலடித்தார். இப்படி ஜாலியும் கேலியுமாக சந்தத்துக்குக் கட்டுப்பட்ட வரிகளுடன் அமைந்த பாட்டுதான்… ‘வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா’ என்கிற பாட்டு! 

1977ஆம் ஆண்டு, ‘பட்டினப்பிரவேசம்’ படத்தை இயக்கிய பாலசந்தர், சிவந்திரன், மீரா, டெல்லிகணேஷ் என மிகப்பெரிய பட்டாளத்தையே இந்தப் பட்டினத்தில் அறிமுகப்படுத்தினார். ’யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்பது போல், நடிகரும் இயக்குநருமான விசு, திரையுலகிற்கு வருவதற்கு முன்னதாகவே, அவருடைய இந்த நாடகம், பாலசந்தரின் மூலமாக படமாக மாறிவிட்டிருந்தது. நடிகராக அறிமுகமாகி பின்னர் நல்ல படங்களையெல்லாம் இயக்கிய சிவசந்திரனுக்குதான் இந்தப் பாட்டு! 

பீச் மணல், ஒளிப்பதிவாளர் பி எஸ் லோகநாத், கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம் எஸ் வி, எஸ்பிபி, அப்புறம் முக்கியமாக வயலின்… அவ்வளவுதான்! 
வயலின் பேசும். எஸ்பிபி அந்தப் பேச்சைக் கேட்டுவிட்டு பாடுவார். இப்படி வயலினும் எஸ்பிபியும் பாடிக்கொண்டே இருந்தால், அந்த வானத்து நிலா என்ன… வானமே பூமிக்கு வந்து பாடலைக் கேட்டுவிட்டுக் கிளம்பும்தானே..! 

வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…
வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…

தேன் நிலா எனும் நிலா…
என் தேவி இன்னிலா…
தேன் நிலா எனும் நிலா…
என் தேவி இன்னிலா…

நீ இல்லாத நாள் எல்லாம்…
நான் தேய்ந்த வெண்ணிலா…
மான் இல்லாத ஊரிலே…
சாயல் கண்ணிலா…
பூ இல்லாத மண்ணிலே…
ஜாடை பெண்ணிலா…
வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…
’லாலாலாலாலாலா’ என்று அவர் பாட்டுக்கு எழுதிவிட்டு மறைந்துவிட்டார். ஒவ்வொரு லா… வும் நம்மை ஒவ்வொரு முறையும் உயிப்பித்துக்கொண்டே இருக்கிறது. ‘வானத்து நிலா நிலா அல்ல, உன் வாலிபம்தான் நிலா என்கிறார். தேன் நிலா என் தேவி இன்னிலா என்கிறார். நீ இல்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா என்கிறார். அதுமட்டுமா? நிலாவை காதலியாக்கியாச்சு. மான் இல்லாத ஊரில் உன் சாயல் கண்ணிலா, பூ இல்லாத மண்ணிலே உன் ஜாடை பெண்ணிலா என்று அவளை வர்ணிக்கிறார். ஆனால் இதற்கெல்லாம் வசப்படாமல், கதையின் நாயகி வயலினுக்குள் தன் காதலையும் வளையவரும்படி செய்கிறாள். 

தெய்வம் கல்லிலா…
ஒரு தோகையின் சொல்லிலா…
தெய்வம் கல்லிலா…
ஒரு தோகையின் சொல்லிலா…

பொன்னிலா பொட்டிலா…
புன்னகை மொட்டிலா…
அவள் காட்டும் அன்பிலா…

இன்பம் கட்டிலா…
அவள் தேகக் கட்டிலா…
இன்பம் கட்டிலா…
அவள் தேகக் கட்டிலா…

தீதிலா காதலா ஊடலா கூடலா…
அவள் மீட்டும் பண்ணிலா…
வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…

நிலவையும் காதலியையும் உதாரணப்படுத்தி அவளுக்கு ஐஸ் வைத்த நாயகன், இன்னும் அவளை தன்வசப்படுத்துகிறான். அதேசமயம் எல்லை மீறவில்லை. இன்னபிற சுகத்தையும் மறைக்கவில்லை. ’தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா? என்று கல்லான தெய்வத்தையும் பேசுகிற பெண்ணிற்குள்ளிருந்து வருகிற சொற்களையும் உதாரணப்படுத்துகிறார். பொன்னில், பொட்டில், புன்னகையில், இல்லை அன்பில் எங்கே இருக்கிறது அந்த தெய்வம்? என்று கேட்கிறார். இதில் குளிர்ந்து உருகியிருப்பாளே காதலி!

’இன்பம் கட்டிலா? அவள் தேகக் கட்டிலா? எதில் இருக்கிறது என்கிறார். தீது இல்லாத காதலா? ஊடலா? கூடலா? அவள் மீட்டுகிற பண்ணிலா? அதாவது இசையிலா? கட்டில், தேகம், தீதில்லாத காதல், ஊடல், கூடல், பாடல் என்று மீண்டும் விட்ட இடத்துக்கே வந்துவிடுகிறார். நாயகி வயலின் வாசிக்கவேண்டும். அந்த வயலின் பேச்சுக்கு எசப்பாட்டு பாடவேண்டும்!  

வாழ்க்கை வழியிலா…
ஒரு மங்கையின் ஒளியிலா…
வாழ்க்கை வழியிலா…
ஒரு மங்கையின் ஒளியிலா…

ஊரிலா நாட்டிலா…
ஆனந்தம் வீட்டிலா…
அவள் நெஞ்சின் ஏட்டிலா…

சொந்தம் இருளிலா…
ஒரு பூவையின் அருளிலா…
சொந்தம் இருளிலா…
ஒரு பூவையின் அருளிலா…

எண்ணிலா ஆசைகள்…
என்னிலா கொண்டது ஏன்…
அதைச் சொல்வாய் வெண்ணிலா…
எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, மளிகைக்கடை லிஸ்ட் போல், தன் எண்ணங்களையும் காதலையும் காமத்தையும் என முழுவதுமாக நிலாவை வைத்துக்கொண்டு சொல்லிவிட்டு, கடைசியில் ‘அதைச் சொல்வாய் வெண்ணிலா’ என நிலாவிடமே, அவளிடமே பதில் சொல்ல விட்டுவிடுகிறார் எஸ்பிபி. இதுதான் பாலசந்திர யுக்தி. கண்ணதாச மகத்துவம். மெல்லிசை மன்னரின் தனித்துவம். பாடும்நிலா பாலுவின் மகரந்தக் குரலின் மாயாஜாலம்!

வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…

தேன் நிலா எனும் நிலா…
என் தேவி இன்னிலா…
நீ இல்லாத நாள் எல்லாம்…
நான் தேய்ந்த வெண்ணிலா…
வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…

இந்தப் பாடலுக்கு நடித்த நடிகர் சிவசந்திரனை பேட்டி எடுக்கும் தருணம், வாழ்வில் மறக்கவே முடியாது. மிகச்சிறந்த, பண்பான மனிதர். கர்வமில்லாமல், அலட்டலமில்லாமல் இயல்பானவர். ‘என் தோல்விக்கு நான் எடுத்த தவறான முடிவுகளே காரணம்’ என்று சொல்வதற்கே, தீர்க்கப்பார்வையும் சத்தியம் பேசும் குணமும் வேண்டும். அப்படித்தான் அவர் என் நெஞ்சில் உயர்ந்து நிற்கிறார் இப்போதும்! 

’’மதி ஒளி சண்முகம் மூலமாக, கே.பாலசந்தரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது புதுமுகங்களை வைத்து படம் எடுக்கத் திட்டமிட்டிருந்தார் பாலசந்தர். ‘பட்டினப்பிரவேசம்’ படம். என்னை நடிக்கச் சொன்னார். என்னைப் பிடித்துப் போனது. அந்தப் படத்தில் உள்ள ‘வான் நிலா நிலா அல்ல’ பாட்டு அருமையான பாட்டு. இசை, எஸ்.பி.பி. சாரின் குரல் எல்லாமே நன்றாக இருந்தது. ஆனால், அந்தப் பாடலை இப்போது பார்க்கும்போது, ‘இன்னும் நன்றாக நடித்திருக்கலாமோ’ என்று எனக்குத் தோன்றும்.  நடிப்பு புதுசு. ஒரு பயம் வேறு. நடந்துகொண்டே நடிக்கவேண்டும்.

மணலில் நடக்கவேண்டும். இதெல்லாம் புது அனுபவம் எனக்கு! இந்தப் பாடலை எத்தனை முறை பார்த்தாலும், ‘இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருக்கலாமேடா’ என்று உள்மனசு என்னைத் திட்டும்!’’ என்றார் சிரித்துக்கொண்டே! 
சிவசந்திரன் இன்னொன்றையும் சொன்னார். அது இன்னும் ஸ்பெஷல்.

பட்டினப்பிரவேசம்’ படம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே, ‘மூன்று முடிச்சு’ படத்தையும் எடுத்துக் கொண்டிருந்தார் பாலசந்தர். இரண்டும் ஒரே கம்பெனி. அதனால், அந்த அலுவலகத்துக்குச் செல்லும்போது, அங்கே ரஜினியும் இருப்பார். அங்குதான் ரஜினியுடன் பழக்கம் ஏற்பட்டது. அங்கே நடிப்புப் பயிற்சியில் ஈடுபடுவோம். இரண்டு படங்களுக்குமான வேலைகள் ஒரேசமயத்தில் நடந்தது. ரஜினி ‘பட்டினப்பிரவேசம்’ படத்தில் உள்ள காட்சிகளையும் நடித்துப் பார்ப்பார்.

‘வான் நிலா நிலா அல்ல’ பாட்டுக்கு நடிப்பார். திடீரென்று காணாமல் போய்விடுவார். பார்த்தால், பாத்ரூமில் உள்ள பாதரசம் போன கண்ணாடிக்கு எதிரே நின்று கொண்டு, தலைமுடியைக் கோதிவிட்டுக்கொள்வார். கலைத்துக்கொள்வார். நடிப்பார். வசனம் பேசி பார்த்துக் கொள்வார். அவரின் கடுமையான ஈடுபாடும் உழைப்பும்தான் இன்றைக்கு வரை, ரஜினியை சூப்பர் ஸ்டாராகவே வைத்திருக்கிறது’’ என்று சொன்னார். 

‘வான் நிலா நிலா’ பாட்டுக்கு ரஜினி நடித்திருந்தால், எப்படியிருக்கும் என்று கண்கள் மூடி யோசித்தேன். ‘இன்னும் பெட்டராப் பண்ணிருக்கணும்’ என்று சிவசந்திரன் சொல்கிறாரே… அப்படியென்ன செய்துவிடமுடியும்… என்றெல்லாம் யோசிப்பேன். 

அதெல்லாம் இருக்கட்டும்… எஸ்பிபியின் குரலையும் கவியரசரின் வரிகளையும் எம் எஸ் வியின் வயலினையும் கோர்த்துக் கொடுத்த ‘வான் நிலா நிலா அல்ல’ பாடலை ‘உணவுக்குப் பின் இந்த மாத்திரை, உணவுக்குப் பின் இந்த மாத்திரை’ என்பது போல், படுக்கைக்குள் விழுந்ததும் ஹெட்போன் துணையுடன்  ‘வான் நிலா நிலா அல்ல’ பாடலைக் கேளுங்கள். 

அமாவாசை நாளாக இருந்தாலும் அபிராமிப்பட்டருக்கு காட்சி தந்தது போல், ’வானில் சுடர் வருமோ? வரும்!’ 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here