back to top
22.8 C
London
Wednesday, September 30, 2026
No menu items!
Homeசினிமாரஜினியின் உன்னத நடிப்பு... ‘ஆறிலிருந்து அறுபது வரை’ ஏன் தனித்துவமான படம்? - Kumudam

ரஜினியின் உன்னத நடிப்பு… ‘ஆறிலிருந்து அறுபது வரை’ ஏன் தனித்துவமான படம்? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


கொஞ்சம் பேச்சு… கொஞ்சம் சினிமா! – வி.ராம்ஜி

’ரஜினிக்கு ஸ்டைலும் ஆக்‌ஷனும் வரும். ஆனா நடிப்பு வருமா?’ என்று என்னுடைய சிறுவயதில் என்னைப் போன்ற ரஜினி ரசிகர்களைத் தாக்குவதற்கு பயன்படுத்தும் ஆயுதமாக, இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள் நண்பர்கள்! எனக்கு கமலும் பிடிக்கும்; ரஜினியையும் பிடிக்கும். அதாவது சினிமாவை ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஆனால், ‘ரஜினியை வேறு ஒரு ரூட்டுக்கு இந்த சினிமா தள்ளிக்கொண்டு போனது’ என்பதுதான் உண்மை. அவரை வசூல் சக்கரவர்த்தியாக, பணம் காய்ச்சும் மரமாகவே பார்த்ததுதான் சினிமாவின் யதார்த்தம்! ரஜினியின் நடிப்பைச் சொல்ல ஏராளமான படங்கள் உண்டு!

ஒரு குடும்பத்தின் தலைச்சன் பிள்ளை என்பவன், இன்னொரு தகப்பன்! அதிலும், சிறுவயதிலேயே அப்பாவை இழந்து நிற்கும் அந்தக் குடும்பத்துக்கு அண்ணனே தகப்பன்சாமி. அப்படி தம்பி, தங்கைக்காக இளம் வயதிலிருந்தே உழைக்கத் தொடங்கியவனின் கதையைக் கேட்காமலேயே… நம் கண்கள் அவனுக்காகக் கண்ணீர் சிந்தும். அந்தக் கண்ணீர்க் கதை, வெள்ளித்திரையில் படமாக விரிந்தால், எப்படி இருக்கும்? இது ஏதோ சிவாஜியோ ஜெமினியோ ஏவிஎம்.ராஜனோ நடித்த படம் என்று நினைக்கவேண்டாம். ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுக்கும் தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் இது. ஆறு வயதில் இருந்தே குடும்பத்துக்காக ஓடியோடி உழைத்து ஓடாய்த் தேய்ந்தவனின் கதை இது. ‘ஆறிலிருந்து அறுபது வரை’யிலான அவனுடைய வாழ்க்கை இது!

திருச்சியில் ராஜா தியேட்டர் என்கிற பஸ் ஸ்டாப் இன்றைக்கும் உண்டு. ஆனால் தியேட்டர் இருபது ஆண்டுகளுக்கு முன்பே பெரிய காம்ப்ளக்ஸாக மாறிவிட்டது. அந்த ராஜா தியேட்டரில்தான் இந்தப் படம் வெளியானது. அங்கேதான் இந்தப் படத்தைப் பார்த்தேன். அடுத்தடுத்து பல தியேட்டர்களுக்கு வந்தபோதெல்லாம், நானும் போய் சந்தானம் என்கிற ரஜினியின் துயரத்தைக் கண்டு கலங்கியிருக்கிறேன்.

அன்றைக்கு ஸ்டைலாலும் வில்லத்தனத்தாலும் ரசிகர்களை ஈர்க்கத் தொடங்கினார் ரஜினிகாந்த். கொஞ்சம் கொஞ்சமாக சின்னதும் பெரிதுமாக வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவர், முக்கியமான வில்லனாக, கெட்ட வில்லனாக, வில்ல குணம் கொண்ட கதாநாயகனாக வளர்ந்தார். டைட்டிலில், ‘ரஜினிகாந்த்’ என்ற பெயர் வரும் போது, ரசிகர்கள் விசிலடிக்கத் தொடங்கியதன்  ஆரம்பம் அது. எழுபதுகளின் இறுதிக் கட்டம். இந்த ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படம் 79ம் ஆண்டு வெளியானது.

நல்ல வசதிகளுடன் வாழ்ந்து வரும் தேங்காய் சீனிவாசனுக்கு மூன்று மகன்கள். ஒரு மகள். மூவரில் ஒருவர்தான் ரஜினி. அப்போது சிறுவன். ஓர் விபத்தில் தேங்காய் சீனிவாசன் இறந்துவிட… அந்த வீட்டை வறுமை சூழ, வீட்டுக்கு மூத்த பையனான சந்தானம் (ரஜினி), தன் தம்பிகளையும் தங்கையையும் கரை சேர்க்க, ஆறாவது வயதில் வேலைக்குச் செல்கிறார்.  அன்றைக்கு ஆரம்பிக்கிற கடும் உழைப்பு, அறுபது வரைக்கும் நீள்கிறது!

அப்பா பார்த்த கம்பெனியில் கிடைக்கிறது வேலை. தம்பி, தங்கைகளைப் படிக்க வைக்கிறார் சந்தானம். கடன் மேல் கடன் என்று வாங்கி வாங்கிப் படிக்க வைத்து வளர்க்கிறார். இந்தநிலையில், அலுவலகத்தில் வேலை செய்யும் சங்கீதா, ரஜினியை விரும்புகிறார். ரஜினியும்தான்! ஆனால் ரஜினியின் பொருளாதாரச் சூழல், தம்பிகள், தங்கை, தலைக்கு மேலே கடன் வாங்கிய நெருக்கடிகளையெல்லாம் கருத்தில் கொண்டு, வேறொருவரைத் திருமணம் செய்துகொள்கிறார் சங்கீதா. தன் ஆசையைப் புதைத்த வலியை மறைத்து, மறந்து குடும்பத்துக்காக இன்னும் இன்னுமாக உழைக்கிறார்.

தங்கைக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டும். அதற்கு பணம் வேண்டும். ‘இந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்கிறாயா? அவர்கள் வீட்டில் ஐந்தாயிரம் ரூபாய் வரதட்சணைப் பணம் தருவார்கள்’ என்று சொல்ல, அந்தப் பணத்துக்காக, படாபட் ஜெயலட்சுமியைக் கல்யாணம் செய்துகொள்கிறார். ஆனால் பணம் தரவில்லை. அதற்காக, மனைவியைப் புறந்தள்ளவுமில்லை. காதலே தோல்வியாகிப் போனவனுக்கு, இந்தக் கல்யாணக் கணக்கு தோல்வியெல்லாம் எம்மாத்திரம்? தம்பி படித்து முடித்து நல்ல வேலைக்குச் செல்கிறார். ஆனால் அண்ணனுக்கு உபயோகமில்லை. இன்னொரு தம்பி, கைநிறைய சம்பாதிக்கும் அண்ணனிடம் சென்றுவிடுகிறார்.  கஷ்டப்பட்டு வளர்த்த அண்ணனை விட்டுச் செல்கிறார். கூடவே, அண்ணனின் வறுமையையும் கடன் சுமைகளையும்!

வறுமையின் பிடியில் உழன்று தவிக்கும் ரஜினி குடும்பத்துக்கு, ஆரம்பத்தில் இருந்தே  உதவி செய்யும் நண்பராக சோ! அதேபோல், முதலாளி! ஆனால், சந்தானத்தின் வாழ்வில் இன்னொரு இடி… எப்போதும் உதவி செய்துகொண்டிருக்கிற முதலாளி பக்கவாதத்தால் படுத்தபடுக்கையாக, அவரின் மகன் பொறுப்புக்கு வருகிறார். ‘அப்பாவிடம் வாங்கிய பணத்தையெல்லாம் செட்டில் செய்துவிட்டு, வேலையில் சேருங்கள்’ என்று கறார் காட்டுகிறார். நிலைகுலைந்து போகிறார் ரஜினி. தான் வேலை செய்யும் பிரிண்டிங் பிரஸ்ஸில் ரஜினியை வேலைக்குச் சேர்த்துவிடுகிறார் சோ. அங்கே, பிழை திருத்தும் பணி. அப்போது வருகிற கதைகளையெல்லாம் படித்து, நொந்து போகும் ரஜினி, விளையாட்டாக தன் வாழ்க்கையையே கதையாக எழுதுகிறார். இந்தசமயத்தில், மனைவி ஒரு தீவிபத்தில், குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டு இறந்துவிடுகிறார். மனைவி கட்டிய இன்சூரன்ஸ் பணம் கைக்கு வருகிறது.

கதையும் புத்தகமாக அச்சிடப்படுகிறது. அந்தப் புத்தகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்க, எழுத்தாளராகிறார் ரஜினி. குழந்தைகள் வளர்ந்து நல்ல நிலையில் இருக்கிறார்கள். தம்பிகளும் தங்கையும் வந்து புகழும் பணமும் போல் ஒட்டிக்கொள்கிறார்கள். ஆறாவது வயதில் உழைக்கத் தொடங்கிய சந்தானம் என்கிற மனிதர், தன் 60வது வயதில் மரணத்தைத் தழுவுகிறார். படம் நிறைவுறுகிறது. கனத்த இதயத்துடன், ஓர் மனிதனின் வாழ்க்கையை உள்வாங்கிய சோகத்துடன் வெளியே வந்தவர்களில் நானும் ஒருவன்! பி.ஏ.ஆர்ட் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த படம். பஞ்சு அருணாசலம் தயாரிப்பாளர். படத்தின் கதை, வசனம், பாடல்களை பஞ்சு அருணாசலம் எழுதினார்.

வீட்டுக்கு வரும் வழியில் பெண்ணைக் காப்பாற்றுவார் ரஜினி ‘புள்ளகுட்டிங்களோட நீங்க நல்லாருக்கணும்’ என்று ரஜினியை வாழ்த்துவார் அந்தப் பெண். வீட்டுக்கு வந்தால், மனைவி படாபட் இறந்திருப்பார். ’அந்த அம்மா, புள்ளகுட்டிங்களோட நல்லா இருன்னுதான் சொன்னா. பொண்டாட்டி புள்ளைங்களோட நல்லா இருன்னு சொல்லலையே…’ என்று அழுவார் ரஜினி. ஒரு சாதாரண வார்த்தை, மிகப்பெரிய ரணத்தை ஏற்படுத்திவிடும் கூர்மையான வசனம் இது!

ரஜினி, ஜெயா, சங்கீதா, படாபட் ஜெயலட்சுமி, சோ, சுருளிராஜன் முதலானோர் நடித்திருந்தார்கள். ரஜினியை வைத்து அதிக படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன், இந்தப் படத்தையும் இயக்கினார் ‘முள்ளும் மலரும்’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘பைரவி’, ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘ஜானி’ வரிசையில், இந்தப் படமும் ரஜினியின் உன்னத நடிப்பை வெளிக்கொண்டு வந்த உயிர்ப்பான காவியம்!

வழக்கம் போல் பாபு ஒளிப்பதிவு. விட்டல் எடிட்டிங். வழக்கம்போல் பலம்!  துடுக்வெடுக் படாபட் ஜெயலட்சுமி, இதில் தன் கேரக்டர் உணர்ந்து, மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தினார். சந்தானம் எனும் கேரக்டராகவே வாழ்ந்திருந்தார் ரஜினி. தன் இயல்பான வேகத்தையெல்லாம் குறைத்துக் கொண்டு, நடையிலும் பேச்சிலும் கூடுதல் கவனம் செலுத்தி அசத்தினார்.

படத்தில் உள்ள பாடல்களும் பின்னணி இசையும் தனி ரகம். ‘கண்மணியே காதல் என்பது கற்பனையோ’ என்ற பாடல் இன்றைய இரவுப் பாடல்களின் பட்டியலில் டெளன்லோடு செய்யப்பட்டு, எத்தனையோ பேரின் செல்போனுக்குள் இசையருவியாக, ஊற்றாக இருந்துகொண்டே இருக்கின்றன. பஞ்சு அருணாசலம் படம். இசை இளையராஜா. அதாவது இசை என்றாலும் இளையராஜா. பஞ்சு அருணாசலம் என்றாலும் இளையராஜா!

1979ஆம் ஆண்டு வெளியானது இந்தப் படம். எந்த கமர்ஷியலும்  இல்லை.  ரஜினியிஸம் இல்லை. வெற்றி ஃபார்முலாக்கள் இல்லை. நேர்த்தியானதொரு படமாக ’காம்ப்ரமைஸ்’ இல்லாமல் அமைத்ததால்தான், இன்று வரை ரஜினி படப் பட்டியலில், தனியிடம் இந்தப் படத்துக்கு!  ’ஆறிலிருந்து அறுபது வரை’ என்று ஒரு மனிதனின் வாழ்க்கையைச் சொன்னது இந்தப் படம். ஆனால் ஆறிலிருந்து அறுபது வயதானவர்கள் கூட, இந்தத் தலைமுறையினர் கூட கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ரஜினியை!

அதுதான் ரஜினி…அதனால்தான் ரஜினி!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here